Election bannerElection banner
Published:Updated:

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

‘‘எக்ஸாம் டென்ஷன் எல்லாம் எங்களுக்கு இல்லை. ஈஸியா எழுதிடுவோம். அதனால்தான், மார்ச் மாதத்தில் கலர் கலாட்டா அறிவிப்பு வந்தபோதும் தயங்காமக் கலந்துக்க பெயர் கொடுத்தோம்” என்று ஆர்வமுடன் சொன்னார்கள்  அந்தச் சுட்டிகள்.

சுட்டி விகடனின் இரண்டு நாள் கலர் கலாட்டா ஓவியப் பயிற்சி முகாம், சென்னையில் உள்ள மேல்அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயாவில் நடந்தது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ‘டிராயிங் கிட் பேக்’ அளிக்கப்பட்டது.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

பயிற்சியைத் தொடங்கிய தலைமை ஓவியர் விஸ்வம், ‘‘இந்தப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள், பல ஓவியப் போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறதா பிரின்ஸிபால் சொன்னார். அந்த ஓவியங்களையும் பார்த்தேன். மிரட்டி இருக்கீங்க. இன்று, இங்கே நடக்கப்போகும் பல வகைப் பயிற்சிகள், ஜாலியாகவும் வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்” என்றார்.

ஒவ்வோர் அறையிலும் ஓர் ஓவிய ஆசிரியர்  மாணவர்களுள் ஒருவராக மாறி, கற்றுக்கொடுக்கத் தொடங்கினர். வகுப்புகளை வானவில்லாக்கத் தயாரானார்கள் சுட்டிகள்.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

கலர் கலாட்டாவின் தொடக்கமாக, போர்ட்ரெய்ட் வகை ஓவியம் கற்றுக்கொடுக்கப்பட்டது. பல சுட்டிகளின் முகங்கள், பென்சில் ஓவியங்களாக வெள்ளைத்தாளில் மலர்ந்தன. குளோனிங் எதுவும் செய்யாமலேயே டபுள் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தனர் சுட்டிகள்.
‘‘சார், எனக்கு சரியா வரைய வராது. நான் என்னோட ஃப்ரெண்டை வரைஞ்சா, கோபமாகி என்கிட்ட

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

பேச மாட்டாளே” என்று குறும்பாகச் சொன்ன ஒரு மாணவிக்கு, பொறுமையாகச் சொல்லிக்கொடுத்து, அழகாக வரையவைத்தார் ஓர் ஆசிரியர்.

எந்த வண்ணத்துடன் எந்த வண்ணத்தைச் சேர்த்தால், புதிய வண்ணங்கள் கிடைக்கும் என்பதைச் சொல்லும் ‘கலர் மிக்ஸிங்’ பயிற்சியில், தங்கள் கற்பனைத்திறனாலும் புதிய வகை வண்ணங்களை உற்சாகமாக உருவாக்கினார்கள். வகுப்பறையைவிட்டு வெளியே வந்து, அவுட்டோர் ஓவியம் மூலம் இயற்கையைச் சிறைப்பிடித்தார்கள்.

காகிதங்களை வெட்டி, ஒட்டி உருவங்களை உருவாக்கும் கொலாஜ், கோலோகிராஃபி எனும் அட்டையில் சுண்ணாம்புக் கலவை மூலம் பட்டை தீட்டி ஓவியத்தை ப்ரின்ட் எடுக்கும் பயிற்சி,  ஸ்டென்சில் கட்டிங் மூலம் வித்தியாசமான ஓவியங்களை உருவாக்குதல் என ஒவ்வொன்றும் சுட்டிகளின் திறமைக்கு டபுள் ட்ரீட் அளித்தது.

‘‘இந்த உலகத்தில் வீணானது என எதுவுமே இல்லை. நீங்கள் செய்த கொலாஜ், பழைய காகிதங்களைப் பயன்படுத்தி் உருவாக்கப்படும் அற்புதக் கலை. நம்மைச் சுற்றி வீணானது என்று நாம் தூக்கி வீசிய பல பொருட்கள், கலைகளாக மாறுவதற்குக் காத்திருக்கின்றன” என்றார் ஓவியர் விஸ்வம்.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

முதல் நாளின் கடைசிப் பயிற்சியாக, பலூன் மாஸ்க் செய்யக் கற்றுத்தரப்பட்டது. ‘‘இவ்வளவு நாளாக நோட்டுப் புத்தகத்தில்தானே ஹோம்வொர்க் செய்துட்டு இருந்தீங்க? இன்றைக்கு வித்தியாசமான ஹோம்வொர்க் தர்றோம். இப்போ, சொல்லிக்கொடுத்த பலூன் மாஸ்க் பயிற்சியை வீட்டுக்குப் போனதும் செய்து,  நாளைக்கு எடுத்துட்டு வாங்க” என்றதும், உற்சாகமாகப் புறப்பட்டார்கள்.

அடுத்த நாள் காலை ஃபுல் ப்ரசென்ட். வெஜிடபிள் ப்ரின்டிங் எனும் அச்சு ஓவியக் கலையுடன் பயிற்சி தொடங்கியது. வெங்காயமும் வெண்டைக்காயும் அச்சு ஓவியங்களாக மாறின. ஃபேப்ரிக் பெயின்டிங் முறையில், துணியில் வண்ணங்களாக சோட்டா பீம், டோரிமான் வந்து உட்கார்ந்தார்கள்.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

க்ளாஸ் பெயின்டிங், ஆயில் பெயின்டிங் என பல்வேறு தளங்களில் மாணவர்களின் கற்பனை, வானமே எல்லையாகச் சிறகடித்தது. களிமண் சிற்பம் வடிக்கக் கற்றுக்கொடுத்ததும், தங்கள் கற்பனையை உருவமாகச் செய்யத்தொடங்கினர். படமெடுக்கும் பாம்பு, ஆறு கைகள்கொண்ட விநாயகர், அசையும் மண்புழு என அசத்தினார்கள்.

பிறகு, தாங்கள் கொண்டுவந்த பேப்பர் ஒட்டப்பட்ட பலூன்களைச் சரிபாதியாக வெட்டி எடுத்து, கலர்ஃபுல் மாஸ்க் செய்யத் தொடங்கினர். முதல் இடத்துக்கு, ஸ்பைடர்மேன் மற்றும் பேட்மேன் இடையே சரியான போட்டி. சின்ட்ரெல்லா, சோட்டா பீம் போன்றவர்களும்  சுட்டிகளின் முகங்களை அலங்கரித்தார்கள்.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

‘‘என் அப்பா, எப்பவும் வேலை வேலைனு இருக்கிறவர். செம ஸ்ட்ரிக்ட் மேன். ஆனா, நேத்து நான் வீட்டுல பலூன் மாஸ்க் செய்றதைப் பார்த்து, ‘நானும் ஹெல்ப் பண்றேன்’னு சொன்னார். ரொம்ப நேரம் உட்கார்ந்து ரெடி பண்ணினோம். அப்பா, நேத்து செம ஃப்ரெண்ட்லியா ஆகிட்டார்” என்றான், ஆஷிக் என்ற மாணவன்.

‘‘என் வீட்டுல மட்டும் என்னவாம்? இங்கே கத்துக்கிட்டுபோனதை அம்மாவுக்கு கி்ளாஸ் எடுத்தேன். பயங்கரமா இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க. இவ்ளோ நாளா, ‘நீ டாக்டர் ஆகணும்’னு சொல்லிட்டிருப்பாங்க. ஆனா, எனக்கு ஆர்க்கிடெக்சர் டிசைனர் ஆகணும்னு ஆசை. அதை நேத்து அம்மாகிட்டே சொன்னதும், ‘உன் விருப்பம் என்னமோ அதையே செய்’னு சொல்லிட்டாங்க. இந்த கலர் கலாட்டா நிகழ்ச்சி மூலம் என் வருங்காலக் கனவை முடிவு பண்ணிட்டேன்” என்று சந்தோஷமாகச் சொன்னார் ஒரு மாணவி.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

சுட்டிகள் வரைந்த பல வகை ஓவியங்கள், களிமண் உருவங்கள் காட்சியாக வைக்கப்பட்டன. அதைப் பார்வையிட்ட பெற்றோர்கள், அவற்றுடன் செல்ஃபிகளாக எடுத்து, தங்கள் செல்போனிலும் மனதிலும் பதித்துக்கொண்டு, பரவசத்துடன் தங்கள் குழந்தைகளை வாரி அணைத்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ஓவியர் விஸ்வம், ‘‘குழந்தைகளுக்கு, ஓவியக் கலை மிகவும் முக்கியம். வெளிநாடுகளில் இருப்பதுபோன்று இங்கு பிரத்யேக ஓவியப் பாடத்திட்டம் இல்லை. எனவே, இவற்றை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஓவியக் கல்லூரிப் பாடத்திட்டத்தைச் சுருக்கி, இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் தருகிறோம்’’ என்றார்.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

பள்ளியின் முதல்வர் செரிட்டா கிறிஸ்டினா, ‘‘எங்கள் பள்ளி 2008-ம் ஆண்டு 100 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. படிப்புடன் மாணவர்களின் பல்வகைத் திறமைகளுக்கு எப்போதும் முதல் இடம் கொடுப்போம். அதனால்தான், இன்று 5,000 மாணவர்களுடன் உற்சாகப் பூங்காவாக வளர்ந்து நிற்கிறது” என்றார்.

‘‘சுட்டி விகடனின் இந்தப் பயிற்சி, மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஓவியத் திறமையை வெளியே வரவைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு நிறைய கலை சார்ந்த விஷயங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களுக்குப் போடப்படும் கடிவாளத்தைக் கழற்றி எறிய வேண்டும்” என்றார், துணை முதல்வர் தசரதராஜன்.

கடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா!

குழந்தைகளுக்கான உலகம், தேடல் நிறைந்தது. அவர்களின் கற்பனைத் திறன் எல்லைகளைக் கடந்தது என்பதை அழகாக எடுத்துச்சொல்லியது கலர் கலாட்டா.

சி.மீனாக்‌ஷி சுந்தரம்

வீ.நாகமணி, தி.குமரகுருபரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு