Election bannerElection banner
Published:Updated:

மை டியர் ஜீபா

மை டியர் ஜீபா

‘‘ஹலோ ஜீபா... கோ கோ (Kho kho) விளையாட்டை எப்படி விளையாடுவார்கள்?”

- ச.நவீன்குமார், சூலூர்.

மை டியர் ஜீபா

‘‘இந்திய விளையாட்டான கோ கோ பற்றி தெரிந்துகொள்வது முக்கியம் நவீன்குமார். இந்த  விளையாட்டு ஆரம்பக் காலத்தில், இந்தியாவின் மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் முறையான விதிகள் இல்லாமல் விளையாடப்பட்டது. புனேயிலுள்ள டெக்கான் ஜிம்கானா கிளப் 1935-ல் வரையறுக்கப்பட்ட விதிகளுடன் கோ கோ பற்றி ஒரு புத்தகம் கொண்டுவந்தது. இரு அணிகளாக விளையாடும் இந்த விளையாட்டில், ஒவ்வோர் அணிக்கும் 12 பேர் இருப்பார்கள். எனினும், விளையாடுவது 9 பேர்தான். ஓர் அணியில் 8 பேர் சீரான இடைவெளியில், எதிரெதிர் திசையைப் பார்த்து உட்கார வேண்டும். (ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராகும்போது அமர்ந்திருப்பது போல). விளையாட்டுத் திடலின் நீளம் 29 மீட்டர், அகலம் 16 மீட்டர். அமர்ந்திருக்கும் இரு வீரர்களுக்கு இடையே 2.3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 

மை டியர் ஜீபா

ஒருவர், மற்ற அணியினரைப் பிடிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். எதிர் அணியிலிருந்து இரண்டு அல்லது மூன்று பேர் களத்தில் இறங்குவர். அவர்கள், அமர்ந்திருக்கும் 8 பேர் வரிசையின் குறுக்கே ஓடலாம். ஆனால், அவர்களை விரட்டிப் பிடிப்பவர், குறுக்கே ஓடக் கூடாது. மாறாக, அமர்ந்திருப்பவரின் முதுகில் தொட்டு, ‘கோ’ என்று சொல்லி, அவரை ஓடச் செய்யலாம். ‘கோ’ என்று குரல் கொடுக்கும்போது, அடுத்தவர் மாறுகிறார் என்பதை எதிர் அணியினர் தெரிந்துகொள்வர். இந்த விளையாட்டின் நேரம். அதிகபட்சம் 9 நிமிடங்கள். அதற்குள் எத்தனை வீரர்களை அவுட் ஆக்குகிறார்களோ அதனைப் பொறுத்து பாயின்ட் கொடுக்கப்பட்டு, வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.’’

 ‘‘டியர் ஜீபா... பெரிகிரீன் ஃபால்கன் (Peregrine falcon) பறவையைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்.’’

 - எஸ்.கற்பக கணேஷ், திருநெல்வேலி.

மை டியர் ஜீபா

‘‘உலகிலேயே அதிவேகமாகப் பறக்கும் பறவை, பெரிகிரீன் ஃபால்கன் (Peregrine falcon). இது, மணிக்கு 389 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் சக்தி உடையது. பறவைகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உரியினங்களில் அதிவேகமாகப் பயணிக்கக்கூடியதும் இந்தப் பறவையே. 200 கிலோமீட்டர் வேகத்தில் செங்குத்தாகவும் பறக்கும் ஆற்றல்கொண்டது. பெரிகிரீன் ஃபால்கன் பறவையைத் தமிழில், வல்லூறு என்று சொல்வார்கள். ஃபால்கோனைடே (Falconidae) என்கிற குடும்ப வகையைச் சேர்ந்த இந்தப் பறவை, உலகின் பல பகுதிகளில் வாழ்கிறது. இதன் உடலின் நீளத்தைவிட, இரண்டு மடங்கு நீளம் இறக்கைகள் இருக்கும். பொதுவாக, இதன் உடல் நீளம் 34 முதல் 58 சென்டிமீட்டர் இருக்கும். இறக்கைகளோ 74 முதல் 120 சென்டிமீட்டர் இருக்கும். மிகக் கூர்மையான நகங்களைக்கொண்ட இது, தன்னைவிட பெரிய பறவைகள் மற்றும் விலங்குகளையும் நகங்களால் கீறிக் கொன்றுவிடுமாம். ஒரு மானையே தாக்கி வீழ்த்திவிடும் என்றால், அதன் வலிமையைக் கற்பனை செய்து பார் கணேஷ்.’’

‘‘ஹாய் ஜீபா... ஒவ்வோர் ஆண்டும் பூமியின் வெப்பம் அதிகரிப்பதன் காரணம் என்ன? வெப்பநிலையை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?’’

- எஸ்.அபிநயா, தேவனாங்குறிச்சி.

மை டியர் ஜீபா

‘‘நாம் வாழும் பூமியின் மீது அக்கறை உள்ள கேள்வி அபிநயா. பூமியின் நிலப் பகுதி மற்றும் கடல் பகுதிக்குச் சற்று மேலிருக்கும் வளிப் பகுதியின் வெப்ப நிலை உயர்வதே, ‘புவி வெப்பமாதல்’ என்பது. பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் மீத்தேன், தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுகள், பெட்ரோல் உள்ளிட்டவற்றை அதிக அளவில் எரித்துப் பயன்படுத்துவது, காடுகளை அழிப்பது ஆகியவை புவி வெப்பமாதலுக்கு முக்கியக் காரணங்கள். எரிமலை வெடிப்பும் ஒரு காரணியாக உள்ளது. பூமிலிருக்கும் நீர் விரைவாக ஆவியாதலும், கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பும் புவி வெப்பமாதலுக்கு குறிப்பிடத்தக்க காரணங்களாகும். புவியின் வெப்பத்தை ‘செல்சியஸ்’ எனும் அளவால் குறிப்பிடுகின்றனர். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை, 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. புவி வெப்பமாவதைத் தடுக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது, அருகில் இருக்கும் இடங்களுக்கு காற்றை மாசுபடுத்தாத வாகனத்தில் செல்வது, முடிந்தவரை பொருட்களை மறுசுழற்சியில் உபயோகப் படுத்துவது, மரங்களை வளர்ப்பது, காடுகளை அழிக்காமல் இருக்க உதவுவது போன்றவை நாம் இந்த பூமிக்கு செய்யவேண்டிய கடமையாகும்.’’

‘‘அஜினோமோட்டோ என்பது என்ன? அதை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் ஜீபா?’’

 - ஏ.கே.நிராஜ் வர்மா, ஆத்தூர்.

மை டியர் ஜீபா

‘‘உணவில் சுவைக்காகப் பயன்படுத்தும் ஒரு வகை உப்பு, மோனோ சோடியம் குளூடாமேட் (Glutamate). இதையே அஜினோமோட்டோ என்கிறோம். பல ஹோட்டல்களில், உணவின் அதிகப்படியான சுவைக்கு இந்த அஜினோமோட்டோதான் காரணம். சிலர் வீட்டுச் சமையலிலும் பயன்படுத்துகிறார்கள். இது, உணவுக்கு சுவை தந்தாலும், ஒற்றைத் தலைவலி, உடல் சோர்வு எனப் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கக் கூடியது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டு உணவிலும் எப்போதும் போல அயோடின் உப்பைப் பயன்படுத்துவதே நல்லது.’’

‘‘டியர் ஜீபா... உலகையே கலக்கும் ஃபேஸ்புக் எந்த ஆண்டு, எவரால் உருவாக்கப்பட்டது?’’

 - ஆர்.அபிலாஷ், கோவை.

மை டியர் ஜீபா

‘‘தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள நல்ல வாய்ப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக், 2004 பிப்ரவரி 4-ல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மார்க் எலியட் ஸக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) என்பவர், நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கினார். ஸ்டான்ஃபோர்டு (Stanford University) மாணவர்கள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் இதில் சேர்ந்தனர். 2008-ல், அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில், இதன் தலைமையகம் அமைக்கப்பட்டு, 2011-ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகருக்கு மாற்றப்பட்டது. ஃபேஸ்புக்கில் 13 வயதுக்கு மேற்பட்ட, மின்னஞ்சல் வைத்திருப்பவர்கள் இணையலாம் என்று இருந்தாலும் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே ஃபேஸ்புக்கைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இலவசமாக இதைப் பயன்படுத்தலாம். ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.’’

ஜெயசூர்யா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு