மை டியர் ஜீபா!

“யானை ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு சாப்பிடும் ஜீபா?”

எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

மை டியர் ஜீபா!

“எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத யானையை உனக்கும் பிடிக்குமா மோகனசுந்தரி? யானையின் உருவத்தைப் போலவே அது சாப்பிடும் உணவின் அளவும் அதிகம். சைவப் பிராணியான யானை... கரும்பு, தென்னைமட்டை, மூங்கில் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடும். காட்டில் இருக்கும் யானைகள், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவுத் தேடலில் இருக்கும். நன்கு வளர்ந்த யானை, ஒரு நாளைக்கு 140 கிலோ முதல் 270 கிலோ  வரையான உணவை உட்கொள்ளும்.”

“ஹாய் ஜீபா... அனகோண்டா முதல் அருகம்புல் வரை எதை எடுத்தாலும் ‘அமேசான்’ காடுகள் பெயரைத்தான் சொல்கிறார்கள். அமேசான் ஆற்றின் மீது பாலங்களே கிடையாதாமே?”

எஸ்.ஷன்மதி, மதுரை.

“உலகின் மிகப் பெரிய மழைக்காடு  அமேசான். அங்கு ஓடும் அமேசான் ஆறு, தென் அமெரிக்கக் கண்டத்தில் சுமார் 6,400 கிலோமீட்டர் பயணிக்கும். உலகிலேயே அதிக துணை ஆறுகளைக்கொண்டது. இதன் குறுக்கே எந்த இடத்திலும் பாலம் கட்டப்படவில்லை. காரணம், இதன் அகலம் அதிகம் என்பதால் அல்ல. இது, வெப்பமண்டல மழைக்காடுகளின் வழியாகத்தான் அதிகம் செல்கிறது.  செல்லும் வழியில் சிறு நகரங்களே இருப்பதால், பாலத்தின் தேவை இல்லை. இந்த ஆற்றில் 3,000-க்கும் மேற்பட்ட மீன் வகைகள் வாழ்கின்றன. ‘பிரான்கா’ எனும் மீன்,  ஆற்றில் வாழும் பெரிய டால்ஃபின் வகை மீன்கள் இங்கு காணப்படுகின்றன.

மை டியர் ஜீபா!

உலகிலேயே அதிக அளவு ஆற்றுப்படுகை கள்கொண்ட அமேசானில்தான்  மழைக்காடுகள் அமைந்துள்ளன. அமேசான் ஆற்றுப்படுகைகளின் அளவு 7 மில்லியன் சதுரகிலோமீட்டர். அதில் காட்டுப் பகுதி மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீ ஆகும். 2.5 மில்லியன் பூச்சி  இனங்களும், 10,000 -க்கும் மேற்பட்ட தாவர வகைகளும், சுமார் 2,000 வகையான பறவைகளும் இந்த மழைக்காட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகில் வாழும் அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று, இந்தக் காட்டில் வாழ்கின்றது.

பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய 9 நாடுகளில், அமேசான் காடு பரவி விரிந்திருக்கிறது என்றால், இது எவ்வளவு பெரியது என்று பாருங்கள். இங்கே பல வகையான பழ வகைகளும் அரியவகை மூலிகைச் செடிகளும் இருக்கின்றன. ஆனால், விளம்பரங்களில் சொல்லப்படுவதை அப்படியே நம்பிவிடக் கூடாது. ஒரு பொருளை வாங்கும் முன், அதன் தரம் குறித்து, நுகர்வோராகிய நாம்தான் நன்கு விசாரித்து வாங்க வேண்டும்.’’

“ஹாய் ஜீபா... நீர்மூழ்கிக் கப்பல், கடலில் எவ்வளவு ஆழத்துக்குச் செல்லும்? அதன் பயன் என்ன?”

எஸ்.அபிநயா, தேவனாங்குறிச்சி.

மை டியர் ஜீபா!

“நீர்மூழ்கிக் கப்பல், பெரும்பாலும் போரின்போதே பயன்படுகிறது. சில மணி நேரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை பயணிக்கும் அளவு திறன்கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள் பொதுவாக, 490 மீட்டர் ஆழம் வரை சென்றால், இயல்பாகப் பயணிக்க முடியும். 730 மீட்டருக்கு கீழும் சென்றால், கப்பல் சேதமடைந்துவிடும்.”

‘‘டியர் ஜீபா... தொடர்ந்து ஏ.சியில் இருப்பதால், சருமத்தில் சுருக்கங்கள் வரும் என்பது உண்மையா?’’

ராஜேஸ்வரி, கோயம்புத்தூர்.

உண்மைதான் ராஜேஸ்வரி. உடலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வெளிவரும் எண்ணெய்தான், நம் சருமத்தை ஈரப்பதமாகப் பாதுகாக்கிறது. ஏ.சியில் இருக்கும்போது, நம் உடலில் சுரக்கக்கூடிய சீபம் என்ற எண்ணெய் சுரக்காமல்போவதால், சருமம் வறட்சியாகிவிடும். இதனால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். இதைத் தடுக்க, ஏ.சியில் பணிபுரிபவர்கள் முகம், கை, கால் போன்ற இடங்களுக்கு பூசப்படும் கிரீம்களை மருத்துவரின் ஆலோசனையுடன் பூசலாம்.  இரவில் ஏ.சி அறையில் தூங்குபவர்கள், மருத்துவர் ஆலோசனையுடன் ஹைட்ரேட்டிங் கிரீம்கள் (Hydrating cream) பூசிக்கொள்ளலாம்.”

“சர்வதேசக் காவல்துறையான ‘இன்டர்போல்’ பற்றி கொஞ்சம் சொல்லேன் ஜீபா”

ம.அக்‌ஷயா, அரூர்.

‘‘சர்வதேசக் காவல் துறை உருவாக்கப்பட வேண்டும் எனும் விதை விழுந்தது 1914-ம் ஆண்டில். ஐரோப்பிய நாடான மொனோக்காவில் (Monaco) நடந்த காவல் துறை மாநாட்டில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், 24 நாடுகளைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர். 1923 செப்டம்பர் மாதம் 7-ம் தேதி, இன்டர்போல் முறைப்படி தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கும் காவல் துறைக்குள் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது.

குற்றவாளிகள் எந்த சூழ்நிலையிலும் தப்பிவிடதாபடி, சட்டத்தின் முன் நிறுத்துவது ஆகும். இதில், இந்தியா உள்பட 190 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இதன் தலைமை இடம், ஃபிரான்ஸ் நாட்டின் லியான் (Lyon). இதற்கான தனிப்பட்ட கொடி, சின்னம் ஆகியவை 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.’’

ஜெயசூர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு