ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

ஸ்பிங்ஸ்... சில குறிப்புகள்!

ஸ்பிங்ஸ்... சில குறிப்புகள்!

ஸ்பிங்ஸ்... சில குறிப்புகள்!

• கிரேக்க தொன்மக் கதைகளில், சிங்க உருவமும் மனிதப் பெண்ணின் தலையும்கொண்ட மிருகத்துக்கு ‘ஸ்பிங்ஸ்’ என்று பெயர். இந்தக் கிரேக்கக் கதைகளில், ஸ்பிங்ஸ் மிருகம் கேட்கும் புதிர்களுக்குப் பதில் சொல்லாவிட்டால், அது அவர்களை விழுங்கிவிடுமாம்.

• எகிப்தில், ஸ்பிங்ஸ் சிலைகளில் ஆண் தலையாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். அரசர்களின் கல்லறைகள், கோயில்கள் போன்றவற்றுக்குப் பாதுகாப்பாகவே, இந்த ஸ்பிங்ஸ் சிலைகளை எகிப்தியர்கள் அமைத்திருந்தனர்.

• உலகின் மிகப் பெரிய ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட சிற்பம், கிசா பிரமிடு முன் உள்ள இந்த ஸ்பிங்ஸ் சிலைதான். இந்த ஸ்பிங்ஸ் சிலையின் வயது, சுமார் 4,500 ஆண்டுகள். 100 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தச் சிலையின் முழு உருவமே தெரிய வந்தது. அதற்கு முன், வெறும் தலை மட்டுமே வெளியே தெரிய, உடல் பாகம் மணலால் மூடப்பட்டிருந்தது.

• இந்த ஸ்பிங்ஸ் சிலை உண்மையில், தாடியுடன் இருந்தது. காலப்போக்கில், அந்தத் தாடி சிதிலமடைந்தது. அப்படிச் சிதைந்துவிட்ட தாடியின் பகுதிகள் கெய்ரோ அருங்காட்சியகத்திலும், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், சிலையின் கால் பகுதிகள் மற்றும் விரல்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டன.

• இந்தச் சிலையின் மூக்கு, நெப்போலியன் படையினரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என்று பலரும் நம்பினார்கள். ஆனால், நெப்போலியனின் காலத்துக்கு முந்தைய ஓவியங்களிலேயே மூக்கு இல்லாமல்தான் வரையப்பட்டிருக்கிறது.

• எகிப்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது, இதன் பெயர் என்னவென்று தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்தில், பல்ஹிப், பில்ஹா, அபுல் ஹோல், ஹோர் எம் அக்ட் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறது.

• பழங்காலத்தில், எகிப்தில் உருவாக்கப்பட்ட சிலைகள், கட்டிடங்களில் எந்த வகையான எழுத்துக்களும் பொறிக்கப்படாத வெகுசில சிலைகளில் இதுவும் ஒன்று. அதனாலேயே இந்தச் சிலை யாரால், எப்போது உருவாக்கப்பட்டது என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

• எகிப்து அரசாங்கத்தின் ஆவணங்கள், காசுகள், தபால்தலைகள் போன்றவற்றில், ஸ்பிங்ஸ் சிலையின் உருவம் பயன்படுத்தப்படுகிறது.

• ஸ்பிங்ஸ் சிலைகளைப் போன்ற சிங்க உருவமும் மனித முகமும்கொண்ட சிலைகள், உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்றன. இலங்கையில் இத்தகைய சிலைகளுக்குப் பெயர், ‘நரசிம்ஹா’. மியான்மரில் ‘மனுசிஹா’ என்றும் தாய்லாந்தில் ‘நோராசிங்’.

• நம் ஊர் கோயில் சிலைகள் சிலவற்றிலும் பார்க்கலாம். இங்கே இத்தகைய சிலைகளுக்குப் பெயர், ‘புருஷ மிருகம்’.

சுப.தமிழினியன்