பென்டிரைவ்

‘‘நாங்க இப்போ ரொம்ப கூலா படிக்கிறோம்” என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள், தருமபுரியின் ரயில்வே லைன் பகுதியில் உள்ள நகராட்சித் துவக்கப் பள்ளி மாணவர்கள். டைல்ஸ் பதித்த வகுப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளுகுளு குளிர்சாதன வசதியுடன் அசத்துகிறது இந்தப் பள்ளி. ‘‘1943-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் படித்தவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளி மோகத்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துகொண்டே வருவதைச் சரிசெய்யும்  நோக்கத்தில், பல தன்னார்வலர்களிடம் நிதி உதவி பெற்று, இந்த வசதிகளைச் செய்தோம். கல்வி கற்பிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். ‘அரசுப் பள்ளியில் ஏ.சி அறைகளா?’ என்ற ஆச்சர்யத்தோடு, பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது” எனப் புன்னகையுடன் சொல்கிறார் தலைமை ஆசிரியர் முல்லைக்கொடி.       

பென்டிரைவ்

விபத்து இல்லாமல்  சைக்கிள் பயணம் செய்ய, அசத்தலான கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார், அசர்பைஜான் (Azerbaijan) நாட்டைச் சேர்ந்த எல்னர் பபாயெவ் (Elnur Babayev). அதன் பெயர் சைக்ளீ (Cyclee). இந்தக் கருவியை சைக்கிளின் பின்புறம் பொருத்திவிட்டால் போதும். இதிலிருந்து வரும் ஒளியில், சைக்கிள் ஓட்டுபவரின் முதுகுப் பகுதியில், சைக்கிள் படமும், ஸ்டாப் என்ற வார்த்தையும் மாறி மாறி ஒளிரும். இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும்போது, பின்னால் வரும் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கை அடைவார்கள்.

பென்டிரைவ்

செவ்வாய், பூமி போன்ற திடக் கோள்கள், வியாழன் சனி போன்ற வாயுக் கோள்கள் தவிர, மூன்றாவதாக சூரியக் குடும்பத்தில் உள்ள குள்ளக் கோள்களில் புளூட்டோதான் பெரியது. புளூட்டோவை ஆராய, நியூ ஹாரிசன் (New Horizon) விண்கலத்தை 9 1/2 ஆண்டுகளுக்கு முன்பு  அனுப்பியது நாசா விண்வெளி மையம். இந்த விண்கலம், சாமீபத்தில் புளூட்டோவின் அருகே 12,500 கிலோமீட்டர் தொலைவில் பறந்து சென்று, இது வரை மர்மமாக இருந்த அந்தக் கோளின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு  அனுப்பி வருகிறது. இதன் மூலம், புளூட்டோ கிரகத்தின் சுற்றளவு 2,370 கிலோமீட்டர் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, புளூட்டோவில் 11,000 அடி உயர பனி மலைகள் இருப்பதாகவும் நியூ ஹாரிசன் அனுப்பிய புகைப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

பென்டிரைவ்

மது காடுகளின் தன்மை குறித்து அறியவும் பாதுகாக்கவும் காடுகளுக்குள் நடைப் பயணம் செல்வது, ‘கானுலா’ நிகழ்ச்சி. ஜூலை 18-ம் தேதி, உடுமலைப்பேட்டையில்  இருக்கும் ‘கலிலியோ அறிவியல் கழகம்’ மற்றும் ‘உடுமலை சுற்றுச்சூழல் சங்கம்’ சார்பில், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் பரளிக்காடு வனப் பகுதியில் கானுலா சென்றனர். புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் உதவியுடன் இந்த நடைப் பயணம் நடந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் குறும்பட இயக்குநர் கோவை சதாசிவம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு, 10-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘இயற்கையும் மனிதனும்’ என்ற தலைப்பில் காடுகளின் தன்மை, காட்டு உயிரிகளின் முக்கியத்துவம் பற்றிக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் மூலம், சுற்றுச்சூழல் பற்றிய பல்வேறு விஷயங்களை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.

- கு.ஆனந்தராஜ்

படம்: வி.சதீஸ்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு