பிரீமியம் ஸ்டோரி
மை டியர் ஜீபா!

“டியர் ஜீபா... ‘புழுதிப் புயல்’ என்பது என்ன? அது எப்போது தோன்றும்?”

- ம.அக்‌ஷயா, அரூர்.

மை டியர் ஜீபா!

‘‘மணல் பகுதிகளில் ஏற்படும் வானவியல் மாற்றமே, ‘புழுதிப் புயல்’. இதை, ‘மணல் புயல்’ என்றும் அழைப்பர். மணல் பகுதியில், காற்று மண்டலத்தின் வேகம் வழக்கத்தைவிட அதிகரிக்கும்போது, புழுதிப் புயல் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மணலை அடித்துச் செல்லும். சஹாரா பாலைவனப் பகுதியில் அடிக்கடி புழுதிப் புயல் ஏற்படும்.’’

“டியர் ஜீபா... கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?”

- ஐ.பாலமுருகன், சோமனூர்.

மை டியர் ஜீபா!

‘‘பிரேசில் நாட்டுக் கால்பந்து அணியின் முன்னணி வீரர், நெய்மர். இவரின் முழுப்பெயர், நெய்மர் டா சில்வா சான்டோஸ் ஜூனியர் (Neymar da Silva Santos Junior). தனது 11-வது வயதில், சான்டோஸ் கால்பந்துக் கழகத்தில் சேர்ந்தார். 17 வயதில், முதல்நிலை ஆட்டத்தில் பங்கேற்றார். அதற்கு அடுத்த போட்டித் தொடரில், 11 கோல்களை அடித்து, சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெற்றார். 2010-ம் ஆண்டு நடந்த 60 போட்டிகளில்... 42 கோல்கள் அடித்து, இவரது அணிக்கு வெற்றி மேல் வெற்றியை அளித்தார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைப் (FIFA Club World Cup) போட்டியில், இவரது சிறப்பான ஆட்டம், வெண்கலப் பந்தைப் பெற்றுத்தந்தது. 2013-ம் ஆண்டு நடந்த ஃபிஃபா கூட்டமைப்புகளின் போட்டியில் சிறப்பாக விளையாடி, தங்கப் பந்து விருதைப் பெற்றார். 2014-ல் நடந்த ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில், பிரேசில் 4:0 கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த நான்கு கோல்களையும் அடித்தது  நெய்மர். பிரேசில் நாட்டு வீரர்களில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில், 5-வது இடத்தைப் பிடித்துள்ளார் நெய்மர்.’’

‘‘ஹாய் ஜீபா... ஐபிஎல் தொடரில்  முதன்முறையாக சதம் அடித்தவர் யார்?”

- கே.எஸ்.சந்தோஷ்குமார், அன்னூர்.

மை டியர் ஜீபா!

‘‘இந்தியன் பிரிமியர் லீக் என்கிற ஐபிஎல் தொடர், 2008-ம் ஆண்டு தொடங்கியது. முதல் போட்டி, ஏப்ரல் 18-ம் தேதி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே பெங்களூர், சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த முதல் போட்டியிலேயே, முதல் சதத்தை அடித்த பெருமைக்குச் சொந்தக்காரர், பிரண்டன் மெக்கலம்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் விளையாடி, 158 ரன்கள்(73பந்துகள்) குவித்து, அனைவரையும் பிரமிக்கவைத்தார்.’’

‘‘ஹலோ ஜீபா, ரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்Xஎனக் குறியிட்டிருப்பது எதனால்?’’

- எஸ்.அபிநயா, தேவனாங்குறிச்சி.

மை டியர் ஜீபா!

“உன் கேள்வியிலேயே பதில் இருக்கிறது அபிநயா. ரயிலில் பயணிப்பதற்கு நிறையப் பெட்டிகள் இருக்கும். இதில், கடைசிப் பெட்டி இது என்று தெரிவிக்கும் விதமாக X குறி பயன்படுத்தப்படுகிறது.’’

“ஹாய் ஜீபா... சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை பற்றி கொஞ்சம் சொல்லேன்”

- மூ.நந்தினி, வந்தவாசி.

மை டியர் ஜீபா!

‘‘ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் அமைந்திருக்கிறது. 1664-ம் ஆண்டு நவம்பர் 16-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால், அவர்களுடைய போர் வீரர்களின் நலனுக்காக சிறிய மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டது. தற்போது இருக்கும் ஏழு மாடிக் கட்டடம் 2005-ம் ஆண்டு திறக்கப்பட்டபோது, இதன் பெயர் சென்னை அரசு பொது மருத்துவமனை. 2011-ம் ஆண்டு, ‘ராஜீவ் காந்தி பொது மருவத்துவமனை’ எனப் பெயர் மாற்றப்பட்டது. 2,500-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் மருத்துவச் சேவை நடைபெறும்  இந்த மருத்துவமனைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக, உதவி மையம் ஒன்றும் இருக்கிறது. இந்த மருத்துவமனையுடன் இணைந்த சென்னை மருத்துவக் கல்லூரி, 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், ‘மதராஸ் மருத்துவக் கல்லூரி’ என்று இருந்தது. 1996-ல் சென்னை மருத்துவக் கல்லூரி என்று மாற்றப்பட்டது. உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான மேரி ஸ்கார்லெப் (Mary Scharlieb), 1878-ம் ஆண்டு பட்டம் பெற்றது இந்தக் கல்லூரியில்தான். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி இங்கே பயின்று, 1912-ம் ஆண்டு பட்டம் பெற்றார்.’’

ஜெயசூர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு