மை டியர் ஜீபா!

‘‘ஹாய் ஜீபா... ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பைத் தொடங்கியவர் யார்? அந்த இயக்கத்தின் பணிகள் என்ன?’’

- ஆர்.சரவணன், ஈரோடு.

மை டியர் ஜீபா!
மை டியர் ஜீபா!

‘‘இந்தியாவில் வாழ்ந்த தலைசிறந்த ஆன்மிகவாதிகளில் ராமகிருஷ்ணர் முதன்மையானவர். மேற்கு வங்காளத்தில் பிறந்த இவர், பலருக்கும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கியவர். ‘பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய்’ போன்ற பொன்மொழிகளையும்,  கதைகள் மூலம் மக்களுக்கு நன்னெறிகளையும் போதித்தவர். ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடர் சுவாமி விவேகானந்தரால் 1897-ம் ஆண்டு, மே முதல் தேதி தொடங்கப்பட்டது ராமகிருஷ்ணா மிஷன். இதன் தலைமையிடம், கொல்கத்தாவில் உள்ள பேலூரில் உள்ளது. கல்வி பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சிக்கு உதவுதல், ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டுசெல்லுதல், மருத்துவச் சேவை மற்றும் நிவாரணப் பணிகள் ஆகியவை இந்த இயக்கத்தின் நோக்கம். உலகம் முழுவதும் 179 கிளைகள் இருக்கின்றன. இந்த இயக்கம், 1998-ல் காந்தி அமைதிப் பரிசு பெற்றது. 1957-ம் ஆண்டு கொல்கத்தா நரேந்திரப்பூரில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் சேவைக்காக, 2010-ம் ஆண்டு மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேசிய விருது, உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ல் குடியரசுத் தலைவரால் அளிக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு நிர்வகிக்கும் பள்ளி, கல்லூரிகளின் மூலம் கல்விச் சேவை செய்துவருகிறது.’’

‘‘செல்போனில் பயன்படுத்தப்படும் யூசி - ப்ரெளஸர் பற்றி கொஞ்சம் சொல்லு ஜீபா’’

- டி.சதீஷ்குமார், திருப்பூர்.

மை டியர் ஜீபா!

‘‘செல்போன் என்பது தொலைவில் இருப்பவருடன் பேசுவதற்கு, என்பதெல்லாம் மாறி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. நேரம் பார்க்கும் கடிகாரமாக, கணக்குப் போட உதவும் கால்குலேட்டராக என வளர்ந்து, இப்போது செல்போனில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. யூசி ப்ரெளஸர் என்பது செல்போனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன். இன்டர்நெட்டில் வலைதளங்களைத் தேடுவதற்கும், படிப்பதற்கும் தேவையான தகவல்களைப் பதிவிறக்கம் செய்யவும் யூசி பிரெளஸர் உதவும். உலகம் முழுக்க சுமார் 500 மில்லியன் பேருக்கும் மேல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறார்கள். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ், பிளாக்பெர்ரி போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களில், யூசி ப்ரெளஸர் கிடைக்கிறது. உனது பெற்றோரின் உதவியோடு செல்போனில் பார் சதீஷ்குமார்.’’

“பிளாஸ்டிக் அரிசி என்று பத்திரிகைகளில் குறிப்பிடுகிறார்களே... அது என்ன ஜீபா?”

- ம.அக்‌ஷயா, அரூர்.

மை டியர் ஜீபா!

‘‘மிக முக்கியமான கேள்வி கேட்டிருக்கிறாய் அக்‌ஷயா. பிளாஸ்டிக் அரிசி என்றதுமே, அது பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டது என்று நினைக்க வேண்டாம். வயலில் விளையும் நெல்லை, இயந்திரத்தில் அரைத்து அரிசியாக்குவது வழக்கமான முறை. அப்படி அரிசியாக்கும்போது உடையும் அரிசியை, குருணை என்பார்கள். இந்தக் குருணையை அரைத்து மாவாக்கி, அச்சில் வைத்து மீண்டும் முழு அரிசியாக்குவது ஒரு வகை. இன்னொரு வகை... மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கை அரைத்து, அவற்றுடன் சில வேதிப் பொருட்களைக் கலந்து உருவாக்கப்படுவது. இதில், ஒருவித பிசினும் கலப்பதாகக் கூறப்படுகிறது. இவை, பெரும்பாலும் சீனாவில் தயாராகிறது. மாத்திரை தயாரிப்பது போல வைட்டமின்களைச் சேர்த்து அரிசி தயாரிக்கும் முறையும் இருக்கிறது. இந்த மூன்று வகை அரிசிகளுமே பிளாஸ்டிக் தன்மைகொண்டவைதான். இந்த வகை அரிசிகள், பெரும்பாலும் தனியே விற்பது இல்லை. வழக்கமான அரிசியுடன் கலந்து, கலப்பட முறையில் விற்கப்படுகிறது. சாதாரணமாகப் பார்த்துக் கண்டுபிடிப்பது கடினம். இவற்றை வேகவைக்கும்போது, வழக்கமான அரிசிகள் போல இல்லாமல் விரைப்பாக இருக்கும். இதைச் சாப்பிட்டால், எளிதில் ஜீரணமாகாது. உடல் நலத்துக்கு பல்வேறு கெடுதல்களை உண்டாக்கும்.’’

‘‘டியர் ஜீபா... பிரான்ஸ் நாட்டு வாசனைத் திரவியங்களுக்கு மட்டும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைப்பது ஏன்?”

- கோ.இனியா, கிருஷ்ணகிரி.

மை டியர் ஜீபா!

‘‘மணம் வீசும் கேள்வி கேட்டிருக்கிறாய் இனியா. மன்னர்கள் காலங்களிலேயே சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களை உபயோகித்தார்கள். அதன் தரத்தை மெருகேற்றியவர்கள், பிரான்ஸ் நாட்டினரே. 16-ம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்டு வந்த ராணி, பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதில் வாசம் மிகுந்த மலர்களைத் தூவியும், அதன் சாறைப் பயன்படுத்தியிருக்கிறார். இன்று, நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கிறார்கள். பிரான்ஸ் வாசனைத் திரவியங்களின் சிறப்புக்கு, இயற்கை மலர்களே காரணம். பிரான்ஸ் நாட்டின் காலநிலையும் இதற்கு உதவுகிறது. குறிப்பாக, க்ராஸ் (Grasse) எனும் நகரில், ஜாஸ்மின் போன்ற மலர்களை விளைவிக்க ஏற்ற காலநிலை உள்ளது. அதனால், இயற்கையான மலர்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பிரான்ஸ் நாட்டு வாசனைத் திரவியங்களுக்கு, உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு