ன்பது வயதுப் பையனைப் பார்த்து, உலகின் டாப் பொம்மை கம்பெனிகள் நடுங்குகின்றன என்று சொன்னால், நம்புவீங்களா?

உண்மைதான் ஃப்ரெண்ட்ஸ். அந்தப் பையன் பேரு இவான் (Evan). அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், டிசம்பர் 6, 2005-ல் பிறந்த இவான், ரொம்ப ரொம்பச் சுட்டி. குழந்தைகள் பொம்மை வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டால், “ரெண்டு நாள்கூட உருப்படியா வெச்சுக்க மாட்டே. அக்கு வேறு, ஆணி வேறா பிரிச்சுப் போட்டுடுவே. பொம்மையும் வேணாம், ஒண்ணும் வேணாம்”னு அப்பாவோ, அம்மாவோ சொல்லும் டயலாக்கைக் கேட்டிருப்பீங்க.

இவான் வேற மாதிரி!

நம்ம இவானும் அதே டைப்தான். ஆனால், இவானோட அப்பா, இவானுக்குத் தடை போடலை. மாத்தி யோசிச்சார். இவான் கையில் பொம்மையைக் கொடுத்து, அவன் செய்றதை வீடியோவா எடுத்தார். இன்டர்நெட்டில், ‘இவான் டியூப்ஹெச்டி’ (EvanTubeHD) என்ற பெயரில் வெளியிட்டார். அந்த வீடியோ ஒவ்வொண்ணும் செம ஹிட். மில்லியன் கணக்கான வியூவர்ஸ். இப்போ, மில்லியன் கணக்கில்   டாலர்களைச் சம்பாதிச்சுக்கிட்டு இருக்கான். உலகின் பல சுட்டிகள், ஒரு பொம்மையை வாங்குறதுக்கு முன்னாடி, ‘நம்ம இவான் என்ன சொல்லி இருக்கான்னு பார்த்துடுவோம்’ எனத் தேட ஆரம்பிச்சுட்டாங்க.

இவான், அப்படி என்னதான் செய்வான்? அவன் கையில் கொடுத்த பொம்மையை வெச்சு விளையாடுவான். அந்தப் பொம்மை எப்படி இருக்கு...அவனுக்கு எந்த அளவுக்குப் பிடிச்சிருக்கு எனச் சொல்வான்.

இவான் வேற மாதிரி!

ஒவ்வொரு பொம்மையையும் நல்லா இருக்கு, நல்லா இல்லைங்கிறதை பளிச்னு சொல்லும் ஸ்டைல், அப்போது செய்யும் குறும்பு எல்லாம் பார்க்கப் பார்க்க அவ்வளவு அழகு. பொம்மைகளுக்கு அடுத்து, வீடியோ கேம்ஸ் பற்றியும் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சு, வீடியோ கேம்ஸ் தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பிச்சிருக்கான் இவான்.

இவானோட அம்மா, தங்கையும்  இப்போ வீடியோவில் வர ஆரம்பிச்சுட்டாங்க. கூரியரில் வரும் ஒரு பொம்மையை, இவானின் தங்கை வாசலில் இருந்து எடுத்து வர்றது, தன் விமர்சனத்தைத் தங்கையிடம் சொல்றது என, அதுக்குத் தனியா ஒரு சேனல் (EvanTubeRAW). அதுவும் பல மில்லியன் ஹிட்.

இவானின் இந்த அதிரடியைப் பார்த்து, பல பிரபல சேனல்கள், அவங்களோட சேனலில் விமர்சனம் செய்ய கூப்பிட்டாங்க. எவ்வளவு டாலர் வேண்டுமானலும் கொடுக்க ரெடி. ஆனால், இவானின் அப்பா, ‘நோ... நோ...’ சொல்லிட்டார். சரி, ஒரு பேட்டியாவது எடுப்போம்னு, ‘உங்க வெற்றியின் ரகசியம் என்ன?’ என்கிற ரீதியில் கேள்விகளைக் கேட்டாங்க.

இவான் வேற மாதிரி!

“ஐயையோ... இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. நமக்கு இன்டர்வியூ கொடுக்க எல்லாம் தெரியாது. ஒரு பொம்மையோடு விளையாடுறேன். அதான், என்னோட இன்டர்வியூ” எனச் சொல்லி, விளையாட ஆரம்பிச்சுட்டான்.

உலகின் நம்பர் ஒன் பொம்மை விமர்சகன் என்கிற பெயரோடு, புதுப் புது பொம்மைகளைப் பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருக்கான் இவான்.

- பா.நரேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு