‘‘தமிழரான சுந்தர் பிச்சை, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அப்படியான ஒரு பெருமையை என் மூலம், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வேண்டும்” என கணீர் குரலில் சொல்கிறார் விசாலினி.

திருநெல்வேலி, ஐ.ஐ.பி லட்சுமிராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் விசாலினி, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையில், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநாடுகளில் விசாலினி சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறார். பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கு நெட்வொர்க்கிங் குறித்து வாரந்தோறும் வகுப்பு எடுக்கிறார். சிசிஎன்ஏ, ஐஇஎல்டிஎஸ், சிசிஎஸ்ஏ எனப் பல கணிப்பொறி திறன் தேர்வுகளை எழுதி, வீடு முழுவதும் சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகளால் நிறைத்திருக்கிறார்.

IQ ராணி!

‘‘குழந்தையா இருந்தபோது விசாலினிக்கு சரியா பேச்சு வரலை. ‘ரெண்டு வயசு குழந்தை எவ்வளவு பேசணும்... இவள் அமைதியாக இருக்கிறாளே!’ என ரொம்ப கவலைப்பட்டோம். நிறைய டாக்டர்களிடம் காட்டினோம். ‘போகப்போக சரியாயிடும்’னு சொன்னாங்க. அப்புறமா, இவள் பேச ஆரம்பிச்சு கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் எங்களால் பதில் சொல்ல முடியலை. அவ்வளவு கேள்விகள். ஸ்கூலில், ஆசிரியர்களும் பதில் சொல்ல முடியாமல் திணறும் அளவுக்கு கேள்விகளால் துளைச்சு எடுக்க ஆரம்பிச்சா. இப்பவும் இவளோட கேள்விகள் தொடருது. ஆனா, எங்ககிட்டே இல்லை... பெரிய பெரிய அறிஞர்களிடம், கணிப்பொறி நிபுணர்களிடம்” எனப் பெருமையோடு சொல்கிறார், விசாலினியின் அம்மா சேது ராகமாலிகா.

விசாலினியின் ஐ.க்யூ எனப்படும் நுண்ணறிவுத்திறன் அளவு 225. மூன்று வயசுக் குழந்தையாக இருக்கும்போதே, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைச் சந்தித்து பாராட்டைப் பெற்றார்.

IQ ராணி!

‘‘ஸ்கூலில் ரெண்டு முறை டபுள் புரமோஷன் கொடுத்தாங்க. அதனால், கிடைத்த இரண்டு ஆண்டுகளில் ஹரியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில்  தங்கி, கணிப்பொறித் துறையில் சிறப்புப் பயிற்சி எடுத்திருக்கிறாள். சமீபத்தில், டெல்லியில் நடந்த கூகுள் கல்வியாளர் உச்சி மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக விசாலினியை அழைச்சாங்க. அந்த மாநாட்டில் ஒரு மணி நேரம் பேசினாள்” என்கிறார் விசாலினியின் அப்பா கல்யாணகுமாரசாமி.

இந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி நடந்த ‘குரு உத்சவ்’ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் கேள்விகள் கேட்டனர். அதில் விசாலினியும் ஒருவர்.

‘‘60 ஆசிரியர்கள், 800 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. எனது முறை வந்ததும், ‘வணக்கம்’ எனத் தமிழில் சொன்னேன். அவரும் வணக்கம் சொன்னார். ‘இந்த நாட்டுக்கு நான் எந்த வகையில் சேவை செய்ய முடியும்?’னு கேட்டேன். அதற்கு பிரதமர் என்னைப் பாராட்டி விரிவாகப் பதில் சொன்னார்” என்கிறார் விசாலினி.

IQ ராணி!

விசாலினியின் அறிவுத்திறனுக்கு மகுடமாக வந்திருக்கிறது ஒரு வாய்ப்பு. விருதுநகர் மாவட்டம்,  கலசலிங்கம் பல்கலைக்கழகம் இவரை அழைத்து,  கணிப்பொறியியல் துறையில் பி.டெக் முதலாம் ஆண்டு  படிக்க வாய்ப்பு அளித்துள்ளது.

‘‘நெட்வொர்க்கிங் பிரிவில் மேல் படிப்பு படிக்கணும்.  வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியமான பிரச்னையாக இருக்கிறது ஹேக்கிங் என்கிற கணினி வழி திருட்டு. நம்ம நாட்டிலும் அது அதிகரிச்சுக்கிட்டு இருக்கு. இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்கணும். அதன் மூலம், நெட்வொர்க்கிங் பிரச்னைக்கு ஒரு இந்தியரால் தீர்வு கிடைச்சு இருக்குனு உலகம் பேசணும். இதுதான் என்னுடைய ஆசை” எனப் புன்னகைக்கிறார் விசாலினி.

- மு.விஜய்சங்கர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு