Published:Updated:

ட்ரிங்கபிள் புக்!

ட்ரிங்கபிள் புக்!

‘சுத்தமான தண்ணீரைக் குடிங்க’ எனப் புத்தகத்தில் படித்திருப்போம். அந்தப் புத்தகமே தண்ணீரைச் சுத்தம் செய்து தந்தால்?

இது, கதை இல்லை ஃப்ரெண்ட்ஸ். நாம் குடிக்கும் நீரில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் புத்தகம் வந்தாச்சு. இந்தப் புத்தகத்தின் பெயர், ட்ரிங்கபிள் புக் (Drinkable Book). இதை உருவாக்கியவர், டாக்டர் தெரசா டான்கோவிச் (Dr.Theresa Dankovich).

டான்கோவிச், நியூயார்க்கில் பிறந்தவர். ‘‘ஒரு மருத்துவராக வேண்டும் என்பது என் சிறு வயது ஆசை. ஆனால், ரத்தத்தைப் பார்த்தால் எனக்கு அலர்ஜி. அதனால், அறிவியலைப் பயன்படுத்தி, மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயலாற்ற விரும்பினேன். அதுவே என் கண்டுபிடிப்புக்கு அடிப்படை’’ என்கிறார்.

ட்ரிங்கபிள் புக்!

கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்ட ஆய்வின்போது, வெள்ளி நுண்துகள்களால் (silver nanoparticles) உருவாக்கப்படும் ஒரு வகைக் காகிதத்தைக் கண்டுபிடித்தார் டான்கோவிச். இந்தக் காகிதம், நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மைகொண்டது.

ஆய்வுப் பட்டம் பெற்ற பிறகு, வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் குடிநீர் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஒரு செயல்திட்டத்துக்காக, தென் ஆப்பிரிக்கா சென்ற குழுவில் இடம்பெற்றார். அந்தப் பயணத்தில், இவர் கண்டுபிடித்த காகிதம் பரிசோதிக்கப்பட்டு, அதன் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது. பிறகு, புத்தகத்தை உருவாக்கும் செயலில் இறங்கினார்.

இவரது கணவர் ஜோனாதன் லெவைன் (Jonathan Levine) சுற்றுச்சூழல் ஆய்வாளர். அவர்தான் இந்தப் புத்தகத்தை வடிவமைத்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நடந்த அமெரிக்க வேதியியல் கழகத்தின் 250-வது தேசிய மாநாட்டில், இந்தப் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது.                       
    
இந்தப் புத்தகத்தின் பக்கங்கள், வெள்ளி நுண்துகள்கள் அடங்கிய காகிதத்தால் ஆனவை. இதன் ஒவ்வொரு பக்கமும் 100 லிட்டர் நீரைச் சுத்தம் செய்யும். இந்த ஒரு புத்தகம் கையில் இருந்தால், ஒரு மனிதன் நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான குடிநீரைச் சுத்தம் செய்துகொள்ளலாம்.

 இதன் ஒரு பக்கத்தைக் கிழித்து, குடிநீர் வடிகட்டியில் பயன்படுத்தினால், நீரில் உள்ள மாசுக்களும் பாக்டீரியாக்களும் அழிக்கப்படும். ஒவ்வொரு பக்கத்தையும் 100 முறை பயன்படுத்தலாம். இந்தப் புத்தகத்தை எப்படிப் பயன்படுத்துவது என்கிற விளக்கங்கள், பல மொழிகளிலும் இதே புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். நீர் மேலாண்மை, சிக்கனம், சுத்தமான குடிநீருக்கான அவசியம் போன்ற தகவல்களும் இருக்கும். பிராக்டிக்கல், தியரி இரண்டும் ஒரே புத்தகத்தில்.

ட்ரிங்கபிள் புக்!

பங்களாதேஷ், கானா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் புத்தகம் பரிசோதிக்கப்பட்டது. இன்னும் பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்தத் தொழில்நுட்பம் மூலம், குறைந்த விலையில் அனைவருக்கும் தூய குடிநீர் வழங்க வேண்டும் என்பதே கோன்விச் குழுவினரின் நோக்கம். இதற்காக, ‘வாட்டர் இஸ் லைஃப்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு, உலகம் முழுவதும் பாராட்டுகளும், உதவிகளும் பெருகிவருகின்றன.

சுட்டி விகடன் சார்பாக, டாக்டர் தெரஸா டான்கோவிச் உடன் இ-மெயிலில் தொடர்புகொண்டபோது, ‘‘குழந்தைகளே, உங்கள் சிந்தனைக்குத் தடை போடாதீர்கள். எல்லையற்று சிந்தியுங்கள். உங்களின் கற்பனைத் திறனும் விடாமுயற்சியும் கனவுகளை அடைவதற்கான வழிகளைத் திறக்கும். இந்தியாவில் இந்தக் காகிதத்தைப் பரிசோதிக்க எண்ணியுள்ளேன். இந்த ஆய்வுக்காக, கூடிய விரைவில் இந்தியா வரும் திட்டம் இருக்கிறது” என்கிறார்.

சுத்தமான தண்ணீரைக் குடிச்சுட்டு, நீங்களும் உங்களின்  எல்லையற்ற சிந்தனைக்கான சிறகை விரியுங்கள் நண்பர்களே.

- கார்த்திகா முகுந்த்

அடுத்த கட்டுரைக்கு