சாதனை படைத்த பேப்பர் தாஜ்மஹால்!
ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது என்றால் இதுதான். சென்னை, மாதவரம் பகுதியில் உள்ள

செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 1,500 மாணவ, மாணவியர் ஒன்று சேர்ந்து, 27,000 காகிதக் கோப்பைகளால் பிரமாண்டமான தாஜ்மஹாலை உருவாக்கி, ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை படைத்திருக்கிறார்கள்.
பள்ளியின் முதல்வர் சுதேயஸ், ‘‘முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்துவது, உலக அதிசயமான தாஜ்மஹாலை உருவாக்குது, நமது தேசியக் கொடியின் நிறங்களை அதில் கொண்டுவருவது என்பதுதான் எங்களின் மூன்று மாங்காய்த் திட்டம். இதற்காக, மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து, பயிற்சி அளித்தோம். வண்ண நீர் ஊற்றப்பட்ட காகிதக் கோப்பைகளை டிசைனுக்கு ஏற்றபடி வைத்து, ஆறு மணி நேரத்திற்குள் நிகழ்த்தி முடிப்பது எனத் திட்டமிட்டோம். ஆனால் எங்கள் மாணவர்கள், 4 மணி 30 நிமிடங்களிலேயே முடித்து, பார்வையிட வந்த ஏசியன் புக் குழுவினரை திகைக்க வைத்துவிட்டார்கள்’’ என்கிறார் உற்சாகமாக.
சபாஷ், கப் மஹால்!


- சூர்யா கோமதி
படம்: ரா.வருண் பிரசாத்