மை டியர் ஜீபா!

"மை டியர் ஜீபா... பெங்குவின் பறவையால் ஏன் பறக்க முடிவதில்லை?''

- எஸ்.சக்திபாலன், கோயம்புத்தூர்.

மை டியர் ஜீபா!

"பெங்குவின், ஈமூ, கிவி என உலக அளவில் 40 வகையான பறக்காத பறவைகள் இருப்பதாகவும், இதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் என்றும் உயிரியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஒரு கழுகு, தனக்கான இரையைத் தேடி நீண்ட தூரம் பறக்கிறது. கிடைத்த இரையைத் தூக்கிக்கொண்டு மிக உயரத்துக்குச் செல்கிறது. இப்படிப் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்ததால், பார்வைக் கூர்மையாகவும், நகங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கு ஏற்ற வகையிலும் மாறின. பெங்குவின் பறவைகள், தான் இடம்பெயர்ந்த நிலப் பகுதியிலேயே தனக்கான உணவைத் தேடிக்கொண்டன. அதனால், பறக்கவேண்டிய அவசியம் இல்லாமலே போய்விட்டது. எனவே, அவற்றுக்கு இறக்கைகள் இருந்தும் பறப்பது இல்லை."

“ஹலோ ஜீபா... ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் எப்போது உருவாக்கப்பட்டது?”

- செ.நவீன் குமார், அன்னூர்.

மை டியர் ஜீபா!

“ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா ஆகிய ஐந்து கண்டங்களையும் குறிப்பிடுவதுதான், ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்கள். ஐந்து கண்டங்களின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் 1913-ல் வடிவமைக்கப்பட்டு, 1914-ல்  அங்கீகரிக்கப்பட்டது. 1920-ம் ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில், முதல் முறையாக இந்தச் சின்னம் பயன்படுத்தப்பட்டது. ஐந்து வளையங்களின் நிறங்களான நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை மற்றும் சிவப்பு என்பது நாடுகளைக் குறிக்கின்றன. அதாவது, எல்லா நாடுகளின் தேசியக்கொடிகளிலும், இந்த ஐந்து நிறங்களில் ஒன்று நிச்சயம் இருக்கும்.”

“ஹாய் ஜீபா... படுத்துக்கொண்டு படிக்கக் கூடாது என்று சொல்வது ஏன்?”

- ஆர்.ரஞ்சனி, அரியலூர்.

மை டியர் ஜீபா!

“உடல் பாகங்களுக்கு மூளைக்கும் ஓய்வு கொடுக்கும் செயல்தான் படுத்துக்கொள்வது. அப்படி நாம் படுத்திருக்கும்போது, உடலின் தசைப் பகுதிகளில் ‘லாக்டிக்’ எனும் அமிலம் சுரந்து, ரத்தத்தில் கலக்கும். அதனால், ரத்தத்தில் இருக்கும் வழக்கமான ஆக்சிஜன் அளவு குறையும். இந்த நிலையில், படிக்கும்போது, உடலில் இருந்து அதிகப்படியான ரத்தத்தை மூளை எடுத்துக்கொள்ளும். அதில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால், சிரமப்பட்டு அந்த வேலையைச் செய்யும். அதனால்தான் படுத்துக்கொண்டு படிக்கக் கூடாது என்கிறார்கள். நம்மில் பலர், படுத்துக்கொண்டே நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்கிறோம். இதுகூட தவறுதான். அப்போது, கண்கள் மட்டுமல்ல, காட்சியைக் கிரகிப்பதற்காக மூளையும் ஓயாமல் வேலை செய்கிறது. அதனால், படுக்கைக்குச் சென்றதும் தொலைக்காட்சியை நிறுத்திவிடுவது ரொம்ப நல்லது.’’

“ஹாய் ஜீபா... நாய்க்கு நன்றி உணர்வும், நரிக்குத் தந்திர புத்தியும் உருவானது எப்படி?”

- கே.சுபலட்சுமி, சென்னை- 108.

மை டியர் ஜீபா!

“ஒவ்வொரு விலங்கும், தான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சில சிறப்புக் குணங்களைப் பெற்றிருக்கும். மனிதன், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாயை வீட்டு விலங்காகப் பழக்கப்படுத்தினான். பாசமுடன் உணவளித்து, வீட்டு உறுப்பினர்களில் ஒருவர் போல நடத்தினான். அதனால், மனிதர்களோடு மிகவும் நெருக்கமாகி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடக்கும் தன்மை நாய்க்கு இருக்கிறது. காடுகளில் வாழும் விலங்குகள், எதிரிகளிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றன. பூச்சிக்கும் இந்த எச்சரிக்கை உணர்வு உண்டு. அப்படித்தான், நரியும் எதிரிகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும். ஆனால், பயங்கர திட்டத்தோடு ஸ்கெட்ச் போட்டு, பிற விலங்குகளைத் துன்புறுத்துவது போல நரியைச் சொல்வது, கதைகளில் உண்டாக்கிய பில்டப்.”

“ஜீபா ஒரு டவுட்... ‘கோபத்தில் கண்கள் சிவந்தன’, ‘கண்கள் சிவக்க அழுதான்’ என்று சொல்கிறார்களே...அப்படி கண்கள் சிவக்கக் காரணம் என்ன?”

- கா.வி.நித்யானந்தன், திருவண்ணாமலை.

“இது, ஹார்மோன் செய்யும் வேலை. நாம் கோபப்படும்போதோ, அழும்போதோ உடலில் சில உணர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. அதனால், ரத்தத்தின் ஓட்டத்திலும் மாற்றம் உண்டாகிறது. ரத்தம், சராசரியைவிட அதிக வேகத்தில் உடல் முழுவதும் திடீர் பாய்ச்சல் நிகழ்த்துகின்றன. கண் பகுதி மிகவும் மென்மையானது என்பதால், ரத்த ஓட்டம் திடீரென அதிகரிப்பது பளிச் எனத் தெரிந்துவிடுகிறது. அழும்போது கண்களைக் கசக்குவதாலும் சிவந்துவிடும். இப்படி, அடிக்கடி ரத்தம் திடீர்ப் பாய்ச்சல் செய்வது நல்லது அல்ல. அதனால்தான், கோபம் கூடாது என்கிறார்கள்.”

 “ஹலோ ஜீபா... என் நண்பன் ஒருவனுக்கு சுருட்டை முடி. இப்படி சுருட்டை முடி உருவாவது எதனால்?”

- எஸ்.விக்னேஷ்வரன், பாபநாசம் (தஞ்சாவூர்).

“தலைமுடி வளர்வதற்கு, தலைப் பகுதியில் இருக்கும் ஃபாலிக்கிள் (Hair follicle) என்கிற செல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தலைச் சருமத்தின் மேல் பகுதியில் ஆரம்பித்து, உள்பகுதி வரை இந்தச் செல்கள் பரவி இருக்கும். இவை, மனிதர்களின் மரபணுவைப் பொறுத்து, வட்டம் அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும். இந்தச் செல், ஒருவருக்கு வட்ட வடிவத்தில் இருந்தால், தலைமுடி நீளமாக இருக்கும். முட்டை வடிவத்தில் இருந்தால், முடி சுருண்டு வளரும். உங்கள் நண்பனிடம் சென்று, ‘உனக்கு முட்டை, எனக்கு வட்டம்’ என ஜாலியாகக் கலாய்த்து, இந்த விஷயத்தைச் சொல்லு விக்னேஷ்.’’

மை டியர் ஜீபா, சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு