Published:Updated:

தித்திக்கும் திருவிழாக்கள் !

தித்திக்கும் திருவிழாக்கள் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ஹாய் சுட்டீஸ்... தீபாவளி, பொங்கல் என வரிசையா பண்டிகைகள் வரப்போகுது.  குஷியோடு இருப்பீங்க. அதே மூடில்... சில நாடுகளில் நடக்கும் கலக்கல் பண்டிகைகளை, 'உலக உலா’ வருவோமா...

 ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் மாதிரி வந்ததுதான் ஆரஞ்சுத் திருவிழா. 1947-ல் ஆரஞ்சுப் பழங்கள் அதிகமா விளைஞ்சதைக் கொண்டாடவும்,  எல்லா பழங்களையும் விற்கவும் பாரிஸில் ஆரஞ்சுப் பழ வியாபாரிகள் ஒரு நிகழ்ச்சி நடத்தினாங்க. வறட்சி, கடும் மழை, புயல் இப்படி ஒவ்வொரு காரணத்தால் சில வருஷம் அது நடக்கலை. பிறகு, 1965-ல் இருந்து தொடர்ந்து நடத்தி, ஒரு பண்டிகையாகவே இப்போ மாறிடிச்சு. இப்ப, மற்ற நாடுகளிலும் ஆரஞ்சுத் திருவிழா களை கட்டுது. இந்தியாவில் நாக்பூரில் நடக்கும். ஆரஞ்சுப் பழங்களாலே பிரமாண்டமான உருவங்களைச் செய்து, பார்க்கிறவங்களை வாயைப் பிளக்க வைக்கிறதுதான் இந்தத் திருவிழாவின் ஸ்பெஷல்! (ஆச்சர்யத்துல தலை சுத்தல் வந்துட்டா, ஒரு பழத்தைப் பிழிஞ்சு குடிங்க... தெம்பாயிடும்!)

தித்திக்கும் திருவிழாக்கள் !
##~##

பூக்களின் வடிவம், வண்ணம், வாசனை எப்படிப்பட்ட மனதையும் மயக்கிடும். அதிலும் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகு இருக்கே... ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா... என குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே செர்ரி மரங்கள் இருக்கு. ஜப்பானில் பள்ளிகள், பொதுக் கட்டடங்களில் செர்ரி மரம் கண்டிப்பா இருக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் மரம் முழுக்க பூக்களாக இருக்கும். இதை ஜப்பானியர்கள் ஹனமி (பூக்களைப் பார்த்தல்) என்று கொண்டாடுறாங்க. கும்பல் கும்பலா பூங்காவுக்கு வந்து, செர்ரி மரத்தை அலங்கரிச்சு, இன்னும் அழகு படுத்துவாங்க. ஜப்பான் சுட்டிகள், பூக்களைத் தொட்டுத் தடவி பரவசப்படுவாங்க.(சுட்டிகள் தொட்டதும் பூக்கள் இன்னும் அழகா மாறிடுமோ!)

தங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக நடத்தின ஒரு நிகழ்ச்சியையே... பண்டிகையா மாத்தி இருக்கு தாய்லாந்து.  பாங்காங்கில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரம் லப்பூரி. அங்கே இருக்கிற 'ஸாம் யாட்’ கோயிலைச் சுற்றிலும் நிறைய குரங்குகள் இருக்கும். 2007-ல் தாய்லாந்து அரசு பழங்கள், பிஸ்கெட், கூல்டிரிங்ஸ், ஐஸ் எல்லாத்தையும் அங்கே குவிச்சாங்க. கிட்டத்தட்ட 600 குரங்குகள் வந்து, எல்லா ஐட்டத்தையும் ஃபுல் கட்டு கட்ட, இந்தச் செய்தி, உலகம் முழுக்க பேசப்பட்டது. ஐடியா க்ளிக் ஆகவே, வருஷா வருஷம் இதைத் தாய்லாந்து அரசு கொண்டாடுது. இந்தத் திருவிழாவுக்காக ஒவ்வொரு வருஷமும் சுமாரா 3000 கிலோ பழங்கள், காய்கறிகளைக் குரங்குகளுக்காக உபயோகிக்கிறாங்க. (சாப்பிட்டது செரிக்க, 'இஞ்சி முரப்பா’வையும் வைப்பாங்களோ!)

தித்திக்கும் திருவிழாக்கள் !

பிலிப்பைன்ஸ் நாட்டின் பழமையான திருவிழாக்களில் ஒன்று, அதி-அதிஹன் (Ati-Athihan. ஜனவரி மூன்றாம் வெள்ளியில் தொடங்கி, ஞாயிற்றுக் கிழமை முடியும். தீவுகள் அதிகம் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில், பல்வேறு பழங்குடி மக்கள் இருக்காங்க. அவங்களோட பண்பாடு, கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், குழந்தை யேசுவுக்கு மரியாதை செய்யவும் கொண்டாடப்படுது. பிலிப்பைன்ஸ் நகர வீதியில் பழங்குடி மக்கள், முகத்தில் கரி மற்றும் வண்ணங்களைப் பூசிக்கிட்டு, வித்தியாசமான ஆடைகளில், நடனமாடிகிட்டே வருவாங்க. பல்வேறு போட்டிகளும் நடக்கும். ('ஜிம்பாலே ஜிம்பாலே’ன்னு நாமும் கிளம்பிடுவோமா!)

ஆட்டம், பாட்டம் நிறைஞ்ச திருவிழாக்களில் பிரமாண்டமானது... பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் திருவிழாதான். இது 1723-ல் இருந்தே கொண்டாடப்படுது. பழங்குடியினரின் கலாசாரம், அதனுடன் நவீன விஷயங்களையும் சேர்த்து கலர்ஃபுல்லா கலக்குவாங்க. புகழ்பெற்ற சம்பா நடனமும் இதில் அடக்கம். உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் ரியோ டி ஜெனிரோ நகரில் குவிஞ்சுடுவாங்க. பகல், இரவு என நாள் முழுக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமா நகரமே ஸ்தம்பிச்சுடும்! (ஜெனிரோ வீதிகளில் ஜே... ஜே-ன்னு கூட்டம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு