பிரீமியம் ஸ்டோரி

டியர் ஜீபா! வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை... அந்த நாளில் நாம் ஏன் லீவ் எடுத்துக்கறோம்? சீரியஸா பதில் சொல்லு!

-மா.ஹரிணி, திருச்சி.

!சரி, சீரியஸாவே சொல்றேன். ஆனா, அடுத்த கேள்விக்கு ஜோக்கா பதில் சொல்வேன்... டீலா?

மை டியர் ஜீபா !
##~##

கிறிஸ்துவர்களின் புனித நூலான விவிலியத்தில், 'கடவுள் ஆறு நாட்களில் உலகத்தைப் படைத்தார்... ஏழாவது நாளில் ஓய்வு எடுத்துக் கொண்டார்’ன்னு இருக்கு. அந்த ஏழாவது நாள்... அதாவது, உலகம் முழுமை அடைஞ்ச முதல் நாள்தான் ஞாயிற்றுக் கிழமை. அதையே ஆங்கிலேயர்கள் தங்களுக்கான வார விடுமுறையா எடுத்துக்கிட்டாங்க. அப்புறம், இந்தியா உட்பட பல நாடுகளைக் கைப்பற்றி ஆண்டபோது, அதை இங்கேயும் சட்டம் ஆக்கினாங்க. அவங்க போன பிறகும் எப்படி அவங்களோட சட்டம், சட்டை எல்லாத்தையும் நாம மாத்திக்காம இருக்கோமோ, அதுமாதிரியே வார விடுமுறையையும் கடைப்பிடிக்கிறோம். ஆனா, அரபு நாடுகள் உட்பட வேறு சில நாடுகள்லே வெள்ளிக் கிழமைதான் வார விடுமுறையா இருக்கு.

மொட்டை அடிக்கும்போது ஏன் ஜீபா தலையில தண்ணீர் தெளிக்கறாங்க?

-சி. மகாலட்சுமி, திரூர்.

!நகம், முடி இதெல்லாம் வெட்டினா வலிக்காது. நகத்திலாவது நகக்'கண்’ இருக்கு... ஒட்ட வெட்டினா வலிக்கும். முடிக்கு அப்படி கண் எல்லாம் இல்லை. ஒட்ட ஒட்ட மொட்டை அடிச்சாலும் அழ ஆள் கிடையாது. அதுக்காக நாம என்ன பண்றோம்னா... செயற்கைத் 'கண்ணீரை’ அது மேலே தெளிச்சு, அழச் சொல்றோம்... என்னை முறைக்காதே மகாலட்சுமி... போன கேள்வியிலேயே 'ஜோக்கா சொல்வேன்’னு டீல் போட்டு இருக்கேன். அதனால, என்ன கோவமா இருந்தாலும் திரூர்ல இருந்து நீ கிளம்பி திருச்சிக்குப் போய், ஹரிணிகிட்டே சண்டை போட்டுக்கோ!

மாத்திரைகள் ஏன் கசப்பா இருக்கு ஜீபா?

-ஜி.எம்.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

!'மூத்தோர் சொல்லும் முதிய நெல்லியும் முன்னால் கசக்கும் பின்னால் இனிக்கும்’ன்னு சொல்லுவாங்க. நோய் இல்லாம வாழ எதைச் சாப்பிடணும், எப்படி நடந்துக்கணும்னு அவங்க சொன்னபடி வாழறது கசப்பான விஷயம்தான். அதுமாதிரி நடந்துக்கிட்டா பின் நாளில் வாழ்க்கை இனிக்கும். ஆனா, நாம அப்படி செய்றதில்லையே... இப்ப இனிக்கிற எல்லா அட்டூழியங்களையும் அடுக்கடுக்கா செய்றோம்... அப்புறம், நோய் நொடின்னு அவஸ்த்தைப்படும்போது கசப்புதானே மருந்தா கிடைக்கும்!?

மை டியர் ஜீபா !

மீன் சாப்பிடும்போது முள் குத்தாம இருக்க என்ன செய்யணும் ஜீபா?

-ஜி.பிரகாஷ்ராஜ், தஞ்சாவூர்.

!வெரி வெரி சிம்பிள்! முள் குத்தற இடத்தை விட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் சாப்பிடச் சொல்லி மீனுக்கு அட்வைஸ் பண்ண வேண்டியதுதான்! எப்பூடி!?

கண் தெரியாதவர்களுக்குக் கனவு வருமா ஜீபா?

-எம்.தீனதயாளன், கொடுமுடி.

!கனவு என்பது வெறும் காட்சி சம்மந்தப்பட்டது மட்டும் இல்லே... ஓசைகள், உணர்வுகள், நடந்த சம்பவங்கள்னு எல்லாம் சேர்ந்து நம்ம மனசிலே பதிவான விஷயங்கள்தான் கனவா வருது. கற்பனைகளுக்கும் இதுல நிறைய பங்கு இருக்கு. பார்வை இல்லாதவங்களைப் பொறுத்தவரை... சக மனுஷங்களோடு பேசியதும், சொந்த சிந்தனைகளும் கனவா வரலாம். காட்சிகளுக்கு அங்கே முக்கியத்துவம் இருக்காது. பிறக்கும்போது பார்வை இருந்து, பிறகு பார்வை இழந்தவர்களுக்கு... அவங்க மனசில் அதுவரை படிஞ்ச காட்சிகள் கனவில் வருமாம். அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்’னு எல்லோருக்கும் சொன்னார். பார்வை இருக்கறவங்க 'அந்த’ கனவை காண்றாங்களோ இல்லையோ, பார்வை இல்லாதவங்க ரொம்பவே அருமையா அந்தக் கனவை கண்டு முன்னேறிட்டு இருக்காங்க!

வயர்லெஸ்ஸில் பேசிக் கொள்பவர்கள் இடையிடையே 'ஓவர்...ஓவர்’ என்று சொல்லிக்கொள்வது ஏன் ஜீபா?

-ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

!'ஹலோ’ மாதிரி ஒரு குறியீடுதான் ஓவர்ங்கறதும். நடுக்கடல், உயர்ந்த மலை, அடர்ந்த காடுன்னு 'சிக்னல்’ இல்லாத ஏரியாக்கள்லதான் வயர்லெஸ் யூஸ் ஆனது. அங்கே எல்லாம் அவ்வளவு தெளிவா, தொடர்ச்சியா நாம பேசறது எதிராளுக்கு கேட்க வாய்ப்புகள் கம்மி. அந்த மாதிரி சமயத்துல நாம பேசிட்டோமா, பேசிட்டு இருக்கோமா, இன்னும் பேசப் போறோமா, சிக்னல் கட் ஆயிடுச்சா... இப்படி எதிராளுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வர வாய்ப்பு இருக்கு இல்லையா? அதனால, ஒவ்வொரு பேச்சு முடிவிலேயும் 'நான் பேசி முடிச்சுட்டேன். நீ பேசு...’ங்கறதை உணர்த்தவே 'ஓவர்’ சொல்லிக்கறாங்க. 'மொத்தமா பேச்சுவார்த்தை முடிஞ்சுடுச்சு... கட் பண்ணப் போறேன்’... அப்படினா, 'ரோஜர்’ன்னு சொல்லி முடிச்சுக்குவாங்க. இதெல்லாம் வயர்லெஸ்ஸுக்குதான் மகா! செல்போன்ல எல்லாம் 'ஓவர் ஓவர்...’ னு பேசினா அது ரொம்ப ஓவரா போய் 'மகா’ கேவலமாயிடும் மகா!

ஹாய் ஜீபா! தங்கம் விலை இப்படி அதிகமாகிட்டே போகுதே... கம்மி ஆகிற வழியே இல்லையா?

ஆர்.மலர்விழி, கடலூர்.

!கவலைப்படாதே மலர்விழி... விலை ஏறும் ஸ்பீடை பார்த்தா அடுத்த பத்து வருஷத்துல தங்கம் சவரன் லட்ச ரூபாய்னு கூட விற்கும் போல இருக்கு. அந்த சமயத்துல இந்த ரேட்டை பாரு... உனக்கு கம்மியா இருக்கும்! எப்பூடி!?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு