Published:Updated:

மயில் - சில குறிப்புகள்!

Vikatan Correspondent

பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சர்யங்களில் ஒன்று மயில். தோகை விரித்து ஆடும் மயிலின் அழகுக்கு மயங்காதவர்கள் இல்லை. இந்தியாவின் தேசியப் பறவையைப் பற்றி சில துளிகள்...

மயில் - சில குறிப்புகள்!

•  ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock. பெண் மயிலின் பெயர் Peahen.

•  இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus).

•  ஆண் மயிலுக்கு தமிழ் மொழியில், சேவல் என்ற பெயர் உண்டு.

•  1972-ம் ஆண்டு இயற்றிய இந்தியச் சட்டப்படி, மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

•  அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாட்களைவிட, மழைக் காலங்களில் அதிக முறை ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல் மூலம், புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

மயில் - சில குறிப்புகள்!

•  பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும்.

•  ஆண் மயிலின் வண்ணமயமான தோகை, பெண் மயில்களை ஈர்க்கவும், பிற விலங்குகள் தாக்க வரும்போது, தனது தோகையை விரித்துக் காட்டி பயமுறுத்தவும் பயன்படுத்தும்.

•  மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.

•  அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக்  குறிப்பிடுகிறார்கள்.

•  மயில் தோகையின் வேறு பெயர்கள்... சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி.

•  1963-ல் மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.

மயில் - சில குறிப்புகள்!

•  மயிலினங்களைத் தேசியப் பறவையாகக் கொண்ட வேறு நாடுகள்: மியான்மர் மற்றும் காங்கோ.

•  உலகின் பல்வேறு பகுதிகளில், வெள்ளை மற்றும் சாம்பல் நிற மயில்கள் காணப்படுகின்றன.

- கார்த்திகா முகுந்த்