Published:Updated:

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘ஒரு முட்டையை வைத்து உடம்பைக்கூட தேற்ற முடியாது. உலக சாதனை செய்ய முடியுமா?’’ எனக் கேட்டால், நீங்கள் இன்னமும் முட்டை ஓவியர் சிவசண்முகத்தைப் பார்க்கவில்லை என அர்த்தம்.

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

மேச்சேரியைச் சேர்ந்த சிவசண்முகம், முட்டையில் சின்னதாகத் துளையிட்டு, அதுக்குள்ளே ஓவியங்களைத் தீட்டி, லிம்கா சாதனை படைத்திருக்கிறார். நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோயில் தெய்வங்களுக்கான வாகனங்களையும் செய்பவர். 

அவரை பேட்டி எடுக்க வீட்டுக்குச் சென்றால், பலவித விலங்குகளின் முகமூடிகள் எங்களை வரவேற்றன. அங்கே இருந்த பேய் முகமூடியை எடுத்து மாட்டிக்கிட்டு, எங்களை ரொம்பவே பயமுறுத்திட்டான் தமிழ். எங்களின் சத்தத்தைக் கேட்டு சிரித்துக்கொண்டே வந்தார், ஓவியர் சிவசண்முகம்.

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘இதுவரைக்கும் எத்தனையோ பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கேன். ஆனா, இப்போ கொஞ்சம் பயமா இருக்கு. ஏன்னா, பெரியவங்களுக்கு ஈஸியா பதில் சொல்லிடலாம்  சின்னப் பசங்க கேள்விக்குத்தான் பதில் சொல்ல முடியாது. அதனால, கேள்விகளைக் கேட்கிறதுக்கு முன்னாடி என்னுடைய கேலரியைப்  பார்த்துடலாம் வாங்க’’ என்றபடி அழைத்துச் சென்றார்.

அழகான ஓவியங்கள், நாட்டுப்புறக் கலைகளுக்குத் தேவையான குதிரை, கிரீடங்கள் என ஒவ்வொரு பொருளையும் கைகளால் தொட்டுப் பார்த்து, கண்களால் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டோம். பிறகு அவரோடு பேசினோம்.

‘‘எந்த வயதில் இருந்து முட்டையில் ஓவியம் வரைய ஆரம்பிச்சீங்க, எப்படி இந்த ஐடியா வந்தது?’’

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘மெட்ராஸ் பச்சையப்பா கல்லூரியில் ஒரு ஓவியப் போட்டி நடத்தினாங்க. எனக்கு அப்போ 19 வயசு. நான் ஒரு பேப்பர் டிராயிங் வரைஞ்சு அனுப்பினேன். என்னோட ஓவியம் தேர்வாகவில்லை. சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தேன். வீட்டில் ஆம்லெட் போடுறதுக்காக முட்டை வாங்கிட்டு வரச்சொன்னாங்க. அப்பதான் எனக்கு அந்த ஐடியா தோணுச்சு. அதன் பிறகு அண்ணாவைப் பற்றி ஓவியப் போட்டி நடந்தபோது முதன்முதலா முட்டைக்குள்ளே அறிஞர் அண்ணா ஓவியம் வரைஞ்சு அனுப்புனேன். அதைப் பார்த்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என்னை அழைத்துப் பாராட்டினார். அப்படித்தான் ஆரம்பித்தது என் ஓவியப் பயணம்.’’

‘‘முட்டைக்குள் எப்படி வரையறீங்க?”

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘முட்டையில் ஒரு மில்லிமீட்டர்  அளவில் துளையிட்டு, கொஞ்சம் கொஞ்சமா மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கருவை வெளியேற்றிவிட்டு முட்டையைக் காயவைக்கணும். அப்புறம், நான் பிரத்யேகமா உருவாக்கி இருக்கும் பிரஷ்ல பெயின்ட்டை நனைத்து, துளைக்குள் விட்டு வரைவேன். துளை வழியே விளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சினால், ஓவியம் தெரியும்.”

‘‘ஓர் ஓவியம் வரைந்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும். எத்தனை முட்டைகள் வீணாகும்?’’

‘‘அது கணக்கே இல்லை. ஒரு ஓவியம் வரையணும்னா குறைஞ்சது 500 முதல் 600 மணி நேரம் தேவைப்படும். ஓவியம் முடியும் நேரத்தில், அதாவது 599-வது மணியில், கொஞ்சம் கவனம் பிசகினாலும் முட்டை உடைஞ்சிரும். அவ்வளவுதான்,  முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.’’

‘‘இதன் மூலம் நீங்க படைச்ச சாதனைகள் என்ன?’’

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘என்னோட இந்தச் சாதனை லிம்காவில் இடம்பிடிச்சு இருக்கு.  கின்னஸ் பரிசீலனையில் இருக்கு. நிறைய விருதுகள், பாராட்டுகள் பரிசுகள் வாங்கிஇருக்கேன். ஒவ்வொரு முறை விருது பெறும்போதும் அடுத்த முயற்சியை இதைவிட சிறப்பா செய்யணும்னு நினைப்பேன்.’’

‘‘உங்க டிராயிங் பிரஷ் லண்டன் வரை டிராவல் பண்ணியிருக்காமே?’’

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘ஆமாம். டிராயிங் பிரஷ் மட்டுமல்ல, நானும்தான் போனேன். 1986-ம் வருடம் லண்டனில் முட்டைக்கு மேல ஓவியம் வரைவதும், அதுக்குப் பரிசு கொடுப்பதுமே பெரிய ஆச்சர்யமான விஷயமா  இருந்தது. ஆனால், நான் முட்டைக்கு உள்ளே வரைவதைப் பார்த்து பிரமித் துவிட்டார்கள். எலிசபத்  மகாராணி, நான் முட்டைக்குள் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டினார். அங்கு வெளிவந்த பல பத்திரிகைகளில் என்னோட ஓவியம் பற்றிய செய்திகள் வந்தன. லண்டனில் என்னுடைய ஓவியங்களுக்காக பிரத்யேகக் கண்காட்சி அரங்கு இருக்கு. இப்போது போனால்கூட பார்க்கலாம்.’’

‘‘இதுவரைக்கும் வரைஞ்சதிலேயே மறக்க முடியாத, ஸ்பெஷல் முட்டை ஓவியம் எது?’’

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘எல்லாமேதான். ஆனாலும், ஒரு சிட்டுக்குருவியின் முட்டைக்குள் 9 விநாயகர்களை வரைஞ்சது என்னால மறக்க முடியாதது. அது ரொம்ப ஸ்பெஷல்.’’

‘‘இதோட உங்கள் சாதனைகள் முடிஞ்சுடுச்சா?’’

‘‘அப்படி ஒரு நாளும் நினைச்சது இல்லை. நாட்டுப்புறக் கலைகள் பக்கமா திரும்பி இருக்கேன். நாடகம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளுக்குத் தேவையான பொருட்களை வடிவமைச்சுக் கொடுக்கிறேன். இந்தக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகணும்.’’

‘‘உங்களின் இந்தக் கலைகளை யாருக்காவது சொல்லிக்கொடுத்து இருக்கீங்களா?’’

ஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்!

‘‘இதுவரைக்கும் இல்லை. யாரும் வரலை.  இதை  கத்துக்க பொறுமையும் அமைதியும் தேவை. வந்தா கற்றுத்தரலாம்.’’

‘‘அந்தத் தகுதியோட நாங்கள் வந்தால் கற்றுக் கொடுப்பீங்களா?’’

‘‘இந்த வார்த்தையைக் கேட்கவே சந்தோஷமா இருக்கு. அதுக்கென்ன, நிச்சயமா வாங்க கண்ணுங்களா!’’

- மேகலா தேவி,ஆர்.பி.ரஞ்சனா, கிருபாகரன், பெஞ்சமின், ரோஹித், ஜோதிபாஸ், கலையரசன், தமிழ், வனிஷா, சர்வேந்திரா, ஜெ.ரஞ்சனா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு