Published:Updated:

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

Published:Updated:

‘‘நாங்கள் மிகவும் நேசிக்கும் அப்துல் கலாம் அவர்களின் பெயரில் கிடைத்திருக்கும் இந்த விருதும், அதைப் பெற்ற காரணத்தையும் எங்களால் மறக்கவே முடியாது’’ என மகிழ்ந்து, நெகிழ்கிறார்கள் அந்தச் சகோதரிகள்.

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் எஸ்.ஆர்.சி மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார் அக்கா பவித்ரா; அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார் தங்கை இலக்கியா. நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு வழங்கும் 2015-ம் ஆண்டுக்கான இக்னைட் (Ignite) விருதைப் பெற்றிருக்கிறார்கள் இந்தச் சகோதரிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“புஞ்சைப்புளியம்பட்டியில் இருக்கும் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் நிறையக் கைத்தறிக் கூடங்கள் இருக்கு. நானும் இலக்கியாவும் அடிக்கடி அங்கே போவோம். அப்படி ஒருமுறை போனப்போ, கைத்தறியின் பெடலை மிதிச்சு மிதிச்சு கால்கள் வலிக்குதுனு சொல்லிட்டிருந்தார் ஒரு நெசவாளர். இதுக்கு நாம ஏதாவது செய்யணும்னு பேசிக்கிட்டோம். அதுதான், நாங்க கண்டுபிடிச்ச புது வடிவக் கைத்தறி மெஷின்” என்கிறார் அக்கா பவித்ரா.

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

“தறிக்கூடத்தில் குழிவெட்டி, அதற்குள் கைத்தறியை செட் பண்ணுவாங்க; குழிவெட்டாமலேயே தரைக்கு மேல செட் பண்ற கைத்தறிகளும் இருக்கு. நாங்களும் குழியில் இல்லாத தறியையே புதுசா வடிவமைச்சு, பெடலுக்குப் பதிலாக, இரண்டு சென்சாரை வெச்சோம். தறியை இயக்குபவரின் சீட்டுக்கு வலது மற்றும் இடது புறத்தில் இருக்கும் பீம்ல, தலா ஒவ்வொரு மெட்டல் சென்சாரை வெச்சோம். தறியை இயக்குபவரின் கை, சென்சார் அருகில்  போகும்போது, தானாகவே பிஸ்டன் மூலம் மேலும் கீழுமா இயங்கும்’’ என்கிறார் தங்கை இலக்கியா.

இந்த கைத்தறி இயந்திரம், இக்னைட் விருதுக்குத் தேர்வாக குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதைப் பெற்றிருக்கிறார்கள் இந்தச் சாதனைச் சகோதரிகள்.

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

‘‘இந்த விருது எனக்கு ரெண்டாவது முறை கிடைக்குது. எளிய முறையில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடிச்சதுக்காக, போன வருஷம் இதே விருது கிடைச்சது. ‘இந்தக் கண்டுபிடிப்புக்கும்  உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும்’னு  நம்பிக்கையோடு அப்பா உற்சாகப்படுத்தினார்.கடந்த அக்டோபர் மாதம் அப்பா இறந்துட்டார். அவருக்கு இந்த விருதை சமர்பிக்கிறோம்” என்றபோது, பவித்ராவின் கண்கள் கலங்கின.

அக்காவின் தோளை ஆறுதலுடன் இலக்கியா தொட்டதும், சட்டென முகம் மலர்ந்து, ‘‘நான் எட்டடி பாய்ஞ்சா, என் தங்கை இலக்கியா பதினாறடி பாய்ஞ்சுட்டா. அது பற்றி கேளுங்க” என்றார் பவித்ரா.

தேசம் போற்றும் நேச சகோதரிகள்!

புன்னகைக்கும் இலக்கியா, ‘‘பாதாளச் சாக்கடைக் கழிவுகளை இப்பவும் மனிதர்கள்தான் சுத்தம் செய்றாங்க. விஷவாயு தாக்கி பலர் உயிர் இழக்க நேருது. அதைத் தடுக்க, ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிச்சு இருக்கேன். அதைச்  பாதாளச் சாக்கடைக்குள் இறக்கி இயக்கினால், இயந்திரத்தில் இருக்கும் பெல்ட், கன்வேயரில் பொருத்தப் பட்டிருக்கும் சிறிய பக்கெட்டுகளில் சாக்கடைக் கழிவுகளை அள்ளி,  மேலே கொண்டுவரும். வெளியே இருந்தபடியே கழிவுகளை பக்கெட்டில் கொட்டிக்கலாம்’’ என்கிறார்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக மாவட்ட, மாநில அளவில் பல விருதுகளை வென்றிருக்கிறார் இலக்கியா. கடந்த வாரம், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் தேசிய அளவிலான சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக           என்.சி.இ.ஆர்.டி (National Council of Educational Research and Training) அமைப்பினால் வழங்கப்படும் தேசிய விருதையும் வென்றிருக்கிறார்.

‘‘எங்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் எளிய மனிதர்களுக்குப் பயன்படும் விதமாகவே இருக்கும். எங்களைச் சுற்றி எப்போதும் இருப்பது இந்தப் பாசமான மனிதர்களே” என்கிறார்கள், இந்த நேச சகோதரிகள்! 

- கு.ஆனந்தராஜ், அட்டை, படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism