FA பக்கங்கள்
சாதனைச் சுட்டிகள்
Published:Updated:

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

‘என் பள்ளி என் சுட்டி’க்காக நாங்களும் நிருபர்கள் ஆகிட்டோம். யாரையாவது பேட்டி எடுக்கணுமே...    டிவி-யில், பெரிய பெரிய தலைவர்களை உட்காரவெச்சு தைரியமா கேள்விகள் கேட்கும் நிகழ்ச்சி நெறியாளரையே சந்தித்து கேள்விகள் கேட்டால்?

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

பேட்டி எடுத்த மாதிரியும் இருக்கும், அவர்கிட்டே நிருபர் ஆக டிப்ஸும் கேட்டுக்கலாம். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என முடிவுசெய்தோம். புதிய தலைமுறை சேனலின் ‘நேர்படப் பேசு’, அக்னிப் பரீட்சை நிகழ்ச்சிகளின் நெறியாளர் குணசேகரன் அங்கிளை, அவர் நிகழ்ச்சி நடத்தும் இடத்திலேயே சந்தித்தோம்.

‘‘பல பிரபலங்களைப் பேட்டி எடுக்கிறீர்கள். விவாதங்கள் நடத்துகிறீர்கள். ஒவ்வொரு முறையும் எப்படி உங்களைத் தயார்செய்துகொள்கிறீர்கள்?’’

‘‘இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவாதங்களை நடத்தி இருக்கிறேன். ஒவ்வொரு விவாதத்தையும் பலதரப்பட்ட மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். மிகவும் அப்டேட் ஆக இருக்கிறார்கள். எனவே, எந்த விவாதத்துக்கு முன்பும் இரண்டு, மூன்று மணி நேரம் அதுகுறித்துப் படித்துத் தயார்செய்துகொள்வேன். நிருபராக, பத்திரிகையாளராக இருப்பதற்கு இது மிகவும் முக்கியம். எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.’’

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

‘‘எல்லாருடைய வெற்றிக்குப் பின்னாலும் அவர்களின்  குடும்பம் இருக்கும். உங்கள் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உங்கள் குடும்பத்தைப் பற்றி கூறுங்கள்.’’

‘‘ஊடகத்துறையில் வெற்றிபெற குடும்பத்தினரின் பங்கு முக்கியம். ஏனென்றால், இது கால நேரமற்ற  பணி. அதிக நேரத்தை குடும்பத்துடன் செலவுசெய்ய முடியாது. அதைப் புரிந்துகொண்ட குடும்பம் அமைந்தால், மகிழ்ச்சி. இந்த விஷயத்தில் எனது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி.’’

‘‘நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றைச் சொல்லுங்கள்.’’

‘‘நான், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும்போது, என்.எஸ்.எஸ் எனப்படும் நாட்டுநலத் திட்டத்தில் ஈடுபட்டுவந்தேன். எங்கள் குழுவின் சார்பாக, 50 ஏக்கர் நிலத்தில் 5,000 தேக்கு மரக்கன்றுகள் நட்டோம். தினம் ஒரு வகுப்பு மாணவர்கள், தண்ணீர் பாய்ச்சிப் பராமரிக்க வேண்டும். ஏப்ரல், மே கோடை காலத்தில்தான் நீர் அதிகம் தேவைப்படும். அப்போது, விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எங்களது ஆசிரியர், தண்ணீர் ஊற்றும் பொறுப்பை எனக்கும் என் நண்பனுக்கும் கொடுத்தார். நாங்கள் தினமும் 20 கிலோமீட்டர் வந்து, தண்ணீர் ஊற்றினோம். இப்போது, அந்த இடம் பெரிய காடு போல மாறிவிட்டது. அங்கே இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் தண்ணீர் ஊற்றி இருக்கிறேன் என்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.’’

‘‘ஊடகத்துறையில் சாதிக்க ஆசை. அதற்கு உங்கள் அறிவுரை என்ன?’’

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

‘‘நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். சமூகப் பொறுப்புடன், சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து செய்திகளை அணுக வேண்டும். பரபரப்பான விஷயங்களை மட்டும் தேடி ஓடாமல் எல்லாவற்றையும் உள்வாங்க வேண்டும். உண்மையின் பக்கம் நின்று பேச வேண்டும். செய்திகளை சுவாசிக்க வேண்டும், உரையாடலை நேசிக்க வேண்டும். தேடலையும் வாசிப்பையும் நிறுத்தக் கூடாது. எளிமையான, குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும். இதை ஒரு வேலையாகக் கருதாமல், விரும்பிச் செய்ய வேண்டும்.’’

‘‘நீங்கள் தொலைக்காட்சித்  துறைக்கு வந்தது எப்படி?’’

‘‘தொலைக்காட்சித் துறைக்கு வந்தது எதிர்பாராத ஒன்றுதான். ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் 15 வருடங்களாகப் பணியாற்றினேன். எழுதும்போது, நான் விஷயங்களை ஆழமாகவும் விரிவாகவும் எழுதுவேன். அத்துடன் எனது விவாதிக்கும் ஆற்றலைப் பார்த்து, நீங்கள் தொலைக் காட்சி ஊடகத்தில் பணியாற்றினால் இன்னும் ஜொலிப்பீர்கள் என்று  நண்பர்கள் உற்சாகப் படுத்தியதால், தொலைக்காட்சிக்கு வந்தேன். எனது  வெற்றியில் என் குடும்பத்தைப் போலவே, என் நண்பர்களுக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது.’’

‘‘ஊடகத்துறை அல்லாது வேறு பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’’

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

‘‘மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை.’’

‘‘இன்றைய இளைஞர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?’’

‘‘அவர்களது கிரியேட்டிவிட்டி மற்றும் பலதுறைகள் பற்றியும் தெரிந்துவைத்திருப்பதுதான். அதேபோல உற்சாகத்துடன் பிரச்னைகளை எதிர்கொள்ளும் போராட்டக் குணத்தையும் கண்டு வியக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பல திறமைகள் இருக்கின்றன.”

‘‘உங்கள் சொல்வன்மையும் நேர்த்தியான உடையும் உங்களின் பிளஸ். அதுபற்றி...’’

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

(சிரித்துக்கொண்டே) ‘‘என் உடைகளைத் தேர்ந்தெடுப்பது என் மனைவி. அதனால், அந்தப் பெருமை அவரையே சாரும். சொல்வன்மைக்குக் காரணம், எனது ஆசிரியர்களும் அதிகமாக வாசிக்கும் பழக்கமும்தான். வாசிப்புப் பழக்கத்தை விடக் கூடாது. தேடித் தேடிப் படியுங்கள். வார்த்தைகள் வசப்படும்.’’

‘‘சமீபத்தில் உங்கள் மனதில் பதிந்த சம்பவமாக எதைக் கருதுகிறீர்கள்?’’

‘‘சமீபத்திய மழை நாட்களின்போது கடலூர் பகுதியில் இருந்தோம். அந்தப் பகுதி மக்கள், மழையால் பாதிக்கப்பட்டு, ‘‘எங்கள் கால்நடைகளுக்குத் தீவனம் கிடைக்கவில்லை, அதற்கு வழி செய்யுங்கள்’’ என்றனர். அதைத் தொடர்ந்து, அரசாங்கமும் பல நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளித்தனர். அதன் மூலம், நிறையக் கால்நடைகளைக் காப்பாற்ற முடிந்தது. அந்த ஊர்வாசிகள் பலர் இன்று வரை போனில் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.  அது என் நெஞ்சில் பதிந்த சம்பவமாக நினைக்கிறேன்.’’

‘‘உங்கள் நிகழ்ச்சி விவாதங்களில் சண்டை வலுக்கும்போது எப்படி சமாளிப்பீர்கள்?’’

கற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்!

‘‘ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், பங்கேற்கும் இரு தரப்பினரும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் தரப்பு நியாயத்துக்காக கோபமாகப் பேசுவார்கள்தான். அந்த நேரத்தில் பதட்டப்படாமல் விவாதம் மையக்கருத்தை விட்டு விலகாமல், அதே நேரம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் குறையாமல், பேலன்ஸ் செய்து நிகழ்ச்சியை செம்மைப்படுத்துவது ஒரு நெறியாளரின் கடமை. அந்தப் பணியை இன்றுவரை சரியாகச் செய்கிறேன் என்றே நினைக்கிறேன்.’’

எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதில் சொன்னவர், ‘‘சிறு வயதிலேயே இதுபோன்ற  தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சிகளை நீங்கள் பார்க்கிறீர்கள், சமூக நடப்புகளைத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிறையப் படியுங்கள், நிறைய விவாதியுங்கள்...’’ என்றார் புன்னகையுடன்.

- மா.கு.சரயு, இர.சத்யபிரியா, மகமது ஜெலியா, எஸ்.நீலாவதி, மு.மணீஷ் நந்தா, ரா.பார்கேஷ்வரன்,    ஜி.கைலாஷ், எஸ்,கவின்.