மூக்கால் பார்க்கலாம்... காதுகளால் படிக்கலாம்!
கண்கள் பார்ப்பதற்கு, காதுகள் கேட்பதற்கு என்பதுதான் மனித இயல்பு. ஆனால், எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஹர்ஷித், ‘‘நான் எதையும் மூக்கால் பார்ப்பேன்’’ என்கிறார்.

ஹர்ஷித்தின் கண்களைக் கட்டிவிட்டு, ரூபாய் நோட்டைக் காட்டினால், அது 100 ரூபாயா... 500 ரூபாயா என்பதைச் சொல்வதோடு, அதன் சீரியல் நம்பர் வரை சரியாகச் சொல்வார். ஒரு புத்தகத்தை அவர் முன்பு நீட்டினால், அதன் தலைப்பைப் படிப்பார். ஒரு பொருளை அவர் முன்பு காட்டினால், அதன் நிறம் மற்றும் வடிவத்தைச் சொல்வார். நாம் என்ன சைகை செய்கிறோமோ, அதை அப்படியே திருப்பிச் செய்து அசத்துவார். ‘‘என்னப்பா, நீ இப்படிப் பண்றியேப்பா... எப்படிப்பா?’’ எனக் கேட்டோம்.
“இதுக்கு, ‘மிட் பிரெயின் ஆக்ட்டிவேஷன்’ என்று பெயர். நம்முடைய மூளை, அபாரமான திறன் படைத்தது. அதன் ஆற்றலில் 10 சதவிகிதத்தைத்தான் நம் வாழ்நாளில் பயன்படுத்துகிறோம். சில பயிற்சிகள் மூலம், மூளையைச் சரியாகப் பயன்படுத்தினால், பார்ப்பதற்கு கண்கள் தேவை இல்லை. மூக்கால் பார்க்கலாம். காதுகளால் கேட்கலாம்’’ என்று சிரிக்கிறார் ஹர்ஷித்.

சென்னை, முகப்பேரில் இருக்கும் ‘ஜீனியஸ் மைண்ட் அகாடமி’ என்ற நிறுவனத்தில் பயிற்சிபெற்று இதைச் செய்கிறார்.

‘‘இது, நமது முன்னோர்கள் பயன்படுத்திய கலைதான். யோகா, தியானம் மூலம் நமது மூளையின் நுண்ணிய ‘பீனியல் கிளாண்ட்’ பகுதியை விழிப்படையச் செய்து, பல்வேறு ஆச்சர்யங்களைத் தந்திருக்கிறார்கள். அதையேதான் இப்போது பயிற்சியின் மூலம் வெளிக்கொண்டுவருகிறார்கள். குறிப்பிட்ட இசையை, குறிப்பிட்ட அதிர்வெண்கள் வரை கேட்கும்போது, நமது மூளையின் பீனியல் கிளாண்ட் விழிப்படையும். அப்படி இரண்டு நாட்கள் இசைப் பயிற்சி அளித்தார்கள். அதன் பிறகு 10 வாரங்களுக்கு, 2 மணி நேரப் பயிற்சி. இதில், SUPER SENSORY DEVELOPMENT, SUPER SENSORY READING என்ற இரண்டு வகைப் பயிற்சிகளை நான் முடித்திருக்கிறேன். மேஜிக் செய்து, அடுத்தவர்களை ஆச்சர்யப்படுத்துவது இந்தப் பயிற்சிகளின் நோக்கம் அல்ல. மனதை ஒருநிலைப்படுத்துவது, கூர்ந்து கவனிக்கும் திறன், வேகமாகக் கற்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்வதே இதன் உண்மையான நோக்கம்’’ என்று சிரிக்கிறார் ஹர்ஷித்.
- டி.ஸ்ரீ.ஹிரஜித், ஹ.ந.ஸ்ரீஹரிணி