Published:Updated:

கார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்!

கார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்!

- 'சுட்டி சாம்பியன்' பெருமாள்

“எனக்கு கார்ட்டூன் பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். நிஞ்சா ஹட்டோரி, சோட்டா பீம், ஜாக்கி சான் என ஆக்‌ஷன் கார்ட்டூன்ஸ் நிறையப் பார்ப்பேன். பறந்து பறந்து ஃபைட் பண்றது, வில் விடுறது இதெல்லாம் செம த்ரில்லிங்கா இருக்கும். அதைப் பார்த்துதான் வில்வித்தை கத்துக்க ஆசை வந்துச்சு. சும்மா ஜாலியாதான் டிரெய்னிங்கில் சேர்ந்தேன். இப்போ, நானும் ஒரு சாம்பியன்” என உற்சாகமும் வெட்கமும் கலந்த குரலில் சொல்கிறார் பெருமாள்.

கார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சேலம் மாவட்டம், வனவாசியில் உள்ள ஈஷா வித்யா ரமணியம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். உத்தரப்பிரதேசம், கான்பூர் பல்லிக்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கம் தட்டி வந்திருக்கிறார்.

இவரது பயிற்சியாளர் மதன்குமார், தேசிய அளவிலான வில்வித்தை வீரர். “பழங்காலம் முதல் நம் நாட்டு  விளையாட்டுகளில் வில்வித்தையும் ஒன்று.  கான்சன்ட்ரேஷன், ஐ பவர், உடல் வலிமை எனப் பல விஷயங்களை உள்ளடக்கிய விளையாட்டு இது’’ என வில்வித்தையின் பெருமைகளை அடுக்குகிறார்.

வில்வித்தையில் அவுட்டோர் மற்றும் இண்டோர் பிரிவுகள் உள்ளன.

‘‘இண்டோர் பிரிவில், இந்தியன் பேர் பெளவ், ரீக்கர்வ் பேர் பெளவ் மற்றும் காம்பவுண்ட் பேர் பெளவ் என மூன்று வகை உண்டு. அவுட்டோர் பிரிவில், இந்தியன் பெளவ் ஸ்டைல், ரீக்கர்வ் மற்றும் காம்பவுண்ட் என மூன்று வகை உள்ளன. இந்தியன் பெளவ் ஸ்டைலில் மூங்கிலால் செய்யப்பட்ட வில்லைப் பயன்படுத்துவார்கள். ரீக்கர்வ் மற்றும் காம்பவுண்ட் வகையில் ஃபைபர் மற்றும் கார்பனால் செய்த வில்லைப் பயன்படுத்துவார்கள். காம்பவுண்ட் வகையில், லென்ஸ் மற்றும் பாதரசம் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், நமது டார்கெட்டைத் துல்லியமாக அடைய முடியும்’’ என்கிறார் மதன்குமார்.

கார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்!

‘‘நான் தங்கம் வென்றது அவுட்டோர் காம்பவுண்ட் பிரிவில். ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்ப, டார்கெட் ஷீட்டின் தூரம் மாறுபடும். டார்கெட் ஷீட்டில் மொத்தம் 10 வளையங்கள் இருக்கும். 360 பாயின்ட்களுக்குப் போட்டி நடக்கும். முதல் வளையத்துக்கு ஒரு பாயின்ட், இரண்டாவது வளையத்துக்கு இரண்டு என 11-வது வளையம் வரை பாயின்ட்கள் இருக்கும். இதற்கு 10x எனப் பெயர். இதில், யார் அதிகம் ஸ்கோர் செய்கிறார்கள் என்பதைப் பொருத்து பதக்கம் கிடைக்கும்’’ என வில்வித்தையின் புள்ளிவிவரங்களைச் சொல்கிறார் பெருமாள்.

பெருமாள் போலவே வில்வித்தையில் பல பதக்கங்களை வென்ற சுட்டிகள் அங்கே தொடர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை அறிமுகப்படுத்திய மதன்குமார், ‘‘இந்தியன் பெளவ் வகையில் ஃபீல்டு ஆர்ச்செரி, டார்கெட் ஆர்ச்செரி என இரண்டு வகை உண்டு.  டார்கெட் ஆர்ச்செரி வகையில் 3D அனிமல் ஆர்ச்செரி என்ற பிரிவு உண்டு. மன்னன் வல்வில் ஓரியைச் சிறப்பிக்கும் விதமாக, வருடந்தோறும் கொல்லிமலையில் இதற்கான போட்டி நடைபெறும். யானை, மான், சிங்கம், புலி, உடும்பு ஆகிய விலங்குகள் பொறிக்கப்பட்ட டார்கெட் ஷீட் போட்டியில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் வெள்ளி வென்றிருக்கிறார்’’ என்றார்.

கார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்!

‘‘உத்தரப்பிரதேசத்தில் நடந்த அந்தப் போட்டியின் வேறு பிரிவுகளில் விளையாட  நாங்களும் போய் இருந்தோம். வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை ஜெயிச்சோம். தங்கம் வென்றதன் மூலம் எங்க எல்லோருக்கும் செல்லம் ஆகிட்டார் பெருமாள்’’ எனக் கொஞ்சுகிறார் முகமது இப்ராஹிம் என்ற மாணவர்.

“இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ்களின் என்கரேஜ்மென்ட் இருந்தால், 100 கோல்டுகூட வின் பண்ணுவேன். அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷப்பட்ட மாதிரி, நாடே சந்தோஷப்படணும். பெருமைப்படணும். அதுக்காக, இன்னும் நிறைய பயிற்சி எடுப்பேன். ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிப்பேன்’’ என்கிறார் நம்பிக்கைக் குரலில்.

- ச.ஆனந்தப்பிரியா