
ஆமை ஆமை ஆலிவ் ஆமை!
உங்களுக்கு ‘ஆலிவ் ரிட்லி’ பற்றி தெரியுமா?
இது ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. தரையிலும் இருக்கும் தண்ணீரிலும் இருக்கும் மிஸ்டர் ஆமையாரில் ஒரு வகை. 70 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடியது. சராசரியாக 40 கிலோ எடை இருக்கும். இந்த வகை ஆமைகள், பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் அதிகம் காணப்படும்.இப்போ ஏன் இந்த ஆமையாரைப் பத்தி பேசுறோம்?

சமீபகாலமாக, இந்த ஆமை இனம் அழிந்து வருகிறது. காரணம், மனிதர்கள்தான். கடத்தல்காரர்கள் மட்டுமில்லை, கடற்கரையில் நாம் வீசும் பிளாஸ்டிக் குப்பைகளும் ஆலிவ் ரிட்லிக்கு வில்லன்தான். இந்த ஆலிவ் ரிட்லி பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது.
‘சேவ் எ டர்ட்டில்’ (Save A Turtle) என்கிற அமைப்பும், வனத்துறையினரும் சேர்ந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், ஆலிவ் ரிட்லி மணல் சிற்பங்களை உருவாக்கினார்கள். கடற்கரைக்கு வந்திருந்த சுட்டிகளும் உற்சாகமாக இதில் பங்கேற்றார்கள்.
அங்கே வந்திருந்த சுட்டிகளிடம் பேசிய ‘சேவ் எ டர்ட்டில்’ அமைப்பின் நிறுவனர் ஹஃபிஸ்கான், ‘‘ஆலிவ் ரிட்லி ஆமைகள், டிசம்பர் முதல் மார்ச் வரை இனவிருத்திக்காக கடற்கரைக்கு வரும். ஓர் ஆமை 100 முதல் 150 முட்டைகளை இட்டு, மணலில் புதைத்துவிட்டு, கடலுக்குள் போய்விடும். இப்படி ஒரே பகுதியில் 1000 முட்டைகள் வரை இருக்கும். இன்றைய சூழ்நிலை மாற்றத்தால், 1000 முட்டைகளில் இருந்து பொரிந்து கடலுக்குள் செல்லும் ஆமைக் குஞ்சில் ஒன்றே ஒன்று பெரியதாக வளர்வதே சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு கடலின்் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இதற்காக, இந்த ஆமை முட்டைகளை இன்குபேட்டரில் பொரிக்கவைத்து கடலில் விடுவோம். சில சமூக அமைப்புகளும் வனத்துறையினரும் சேர்ந்து இதைச் செய்கிறோம்’’ என்றார்.
எதற்காக இவ்வளவு மெனக்கெட்டு செய்ய வேண்டும்?
‘‘இயற்கை, இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் உயிர்ச் சங்கிலியாக இருக்கின்றன. இதில், ஒன்று அழிந்தாலும், படிப்படியாக மற்றவையும் அழியும். ஆமைகள் அழிந்தால், கடலின் சூழ்நிலை மெள்ள மெள்ள மாறும். பின்னர் அது, பூமியின் சூழ்நிலையையே மாற்றிவிடும்’’ என்கிறார் ஹஃபிஸ்கான்.
ஆமைகளைப் பாதுகாக்க ஒரு விழிப்புஉணர்வு ஏற்படுத்த பிப்ரவரி 21 அன்று மெரீனா கடற்கரையில் ‘ரிட்லி ரன்-16’ மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். கடற்கரையின் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவோம். ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காப்போம்.
- பா.நரேஷ் படங்கள்: பா.அபிரக்ஷன்