Published:Updated:

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!
உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

தேர்வுக்குத் தயாராக டானிக் டிப்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

 அன்பு மாணவர்களே...

அனைவருக்கும் வணக்கம்.


தேர்வு நேரம் நெருங்கிவிட்டது. மூளைக்கு அதிகம் வேலை கொடுத்து கடுமையாகப் படித்துவரும் உங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்களின் உடல்நலத்தையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவு தேவையா? நொறுக்குத் தீனி சாப்பிடலாமா? படித்துக்கொண்டே டி.வி பார்க்கலாமா? இரவு சாப்பிட்ட உடனே தூங்கலாமா? மனநிலையை உற்சாகமாகவைத்துக்கொள்வது எப்படி? உடற்பயிற்சிகளில் கவனிக்கவேண்டியவை, சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியம் எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

மருத்துவர், உணவு ஆலோசகர், உடற்பயிற்சி நிபுணர் ஆகியோர் அக்கறையுடன் சொன்ன சிறந்த ஆலோசனைகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறோம். தேர்வுக்குத் தயாராகிவரும் உங்களுக்கு, இது சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

படிப்பைப் போல உடல் நலத்திலும் ‘ஏ’ கிரேடு எடுக்க வாழ்த்துகள்!

அன்புடன்

ஆசிரியர்

 உணவு

உணவில் இருந்துதான் நம் ஆரோக்கியம் தொடங்குகிறது.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

காலை உணவு அவசியமா?

நிச்சயமாக. எவ்வளவு அவசரமாகக் கிளம்பினாலும், காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். பள்ளிக்கு சீக்கிரம் செல்வதாக இருந்தால், காலை உணவையும் எடுத்துச் சென்று அங்கேயே சாப்பிடுங்கள்.

காலை உணவில் சேர்க்கவேண்டியவை என்ன?

கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பருப்பு நிறைந்த சாம்பாருடன், இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளை உண்ணலாம். காலையிலும் சோறு உண்பவர்கள், ஒன்று அல்லது இரண்டு வகையான காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது சிறந்தது. தினமும் மூன்று வேளைக்குப் பதிலாக, நான்கு வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது.

சாப்பிடாமல் சென்றால் என்னவாகும்?

காலை உணவைத் தவிர்ப்பதால், நாள் முழுக்க சோர்வாக இருக்க நேரிடும். கற்றல் திறனும் குறைந்துவிடும். உடலில் உள்ள உயிரணுக்கள் கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்களை எடுத்துக்கொள்ளும். ஆனால், மூளையில் உள்ள உயிரணுக்களுக்கு ‘குளுக்கோஸ்’ அவசியம் தேவை. இதை உணவில் இருந்துதான் பெற முடியும்.

லன்ச் பேக்

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

லன்ச் பெல் அடிப்பதற்கு முன்னரே சிலருக்கு வயிற்றில் பசி பெல் அடிக்க ஆரம்பித்துவிடும். லன்ச் பெல் அடித்ததும் நண்பர்களைத் தேடுவார்கள். ஒரு வழியாக இடம்பிடித்து லன்ச் பேக்கைத் திறந்தால், வழக்கமாக அம்மா கொடுக்கும் சாம்பார் சாதமோ, வெஜ் பிரியாணியோ இருக்கும்.

இது போதுமா? மதிய உணவில் இன்னும் சுவையும் சத்தும் அவசியம் அல்லவா?

வழக்கமான உணவோடு  வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய்கறிகளையும் கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களையும் எடுத்துச் செல்லுங்கள்.

பல வகையான காய்கறிகளைப் பச்சையாக வெட்டி, சாலட் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அத்தகைய காய்கறிகளை வெதுவெதுப்பான தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு, நறுக்கித் தரச் சொல்லுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான காய்கறிகளில் பொரியல், கூட்டு செய்து தரச் சொல்லி எடுத்துவந்தால், அதில் சின்னத் துணுக்கும் வீணாகாது.

மதிய உணவாக அம்மாவிடம் இன்னும் என்னவெல்லாம் கேட்கலாம்?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

சாண்ட்விச் போல செய்து, உள்ளே காய்கறிக் கலவையை வைத்துச் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும். அதைச் செய்துதரச் சொல்லுங்கள்.

தினமும் ஒரு பழச்சாறு அல்லது இளநீர் பருகுவது நல்லது. பழச்சாறை வீட்டிலேயே செய்து, எடுத்து வந்து குடியுங்கள். கடைகளில் விற்கும் பாக்கெட் அல்லது பாட்டில் குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது முக்கியம். எனவே, சுண்டல் செய்து தரச் சொல்லுங்கள். சுவையாகவும் இருக்கும். சத்தும் நிறைந்தது.

கேழ்வரகு இட்லி, கம்பு அடை போன்ற சிறுதானிய உணவுகள் மிகவும் நல்லது. அதைச் சுவையாகவும் செய்ய முடியும். அம்மாவிடம் சொல்லி, உடலுக்குச் சத்து மிகத் தரும் இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். உங்கள் நண்பர்களுக்குக் கொடுக்கும்போது, வித்தியாசமான டிஷ் சாப்பிட்டதை எல்லோரிடமும் சொல்வார்கள்.

மதிய உணவுக்குப் பின், புதுத் தெம்போடு படிக்கத் தொடங்குங்கள்.

உணவுக்கு முன் - பின்

நாங்கள் என்ன, மாத்திரையா சாப்பிடப் போகிறோம். உணவுக்கு முன், பின் என்று சொல்கிறீர்களே என்கிறீர்களா? உடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவே  மருந்து போன்றதுதான்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

நாம் சாப்பிடும் உணவின் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்க, சில பழக்கங்களைச் செய்வதும், சில பழக்கங்களைச் செய்யாமல் விடுவதும் முக்கியம்.

உணவுக்கு முன் என்ன செய்ய வேண்டும்?

உணவு சாப்பிடுவதற்கு முன், ஒரு மணி நேரத்துக்கு எந்த விதமான நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடக் கூடாது. சத்து இல்லாத அவை, வயிற்றை நிரப்ப மட்டுமே பயன்படும். இதனால், சத்துள்ள சாப்பாட்டை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போய்விடும். சிலருக்கு நொறுக்குத் தீனி தின்றதுமே பசி நீங்கிவிடும். உணவையே தவிர்த்துவிடுவார்கள். சிலருக்கு, விளையாடிக்கொண்டிருந்தால், சுத்தமாகப் பசிக்காது. எனவே, சாப்பாட்டுக்கு முன்பு வயிற்றைக் காயப்போடுங்கள்.

சரி, சாப்பிடும்போது என்ன செய்ய வேண்டும்?

உணவை சுவைத்து, நன்கு மென்று விழுங்க வேண்டும். சிப்ஸ், சாக்லேட் போன்றவற்றை இடையிடையே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள். அம்மாவின் அன்பும் அக்கறையும் கலந்த அந்த உணவுதான் உங்கள் உடல்நலனுக்கு ஏற்றவாறு, தயாரிக்கப்பட்டிருக்கும். சிப்ஸ், இனிப்பு போன்றவை, அந்த அக்கறையையே கெடுத்துவிடும்.

உணவுக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

சாப்பிட்டு முடித்த பின், 15-20 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கலாம். இது, செரிமானத்துக்கு  உதவும். உணவுக்குப் பின் குளிர்பானம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனடியாகக் கைவிடுங்கள். இது, உணவு செரிமானம் ஆவதற்குப் பெரும் தடையாக இருக்கும். சாப்பிட்டு முடித்ததும் பரபரவென ஓடாதீர்கள். சில நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். பிறகு 2 அல்லது 3 மணி நேரம் சுறுசுறுப்பாக விளையாடுங்கள்; படியுங்கள். இரவில் சாப்பிட்ட உடன் படுக்கைக்குச் செல்வது நல்லதல்ல. சிறிது நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள். வீட்டில் உள்ளோருடன் சிறிது நேரம் கலகலப்பாகப் பேசிவிட்டு, பிறகு உறங்கச் செல்லுங்கள்.

இந்தப் பழக்கம் உங்களை இன்னும் ஆரோக்கியமாக்கும்.

உணவு... இன்னும் சில விஷயங்கள்!

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டுக்கொண்டே படிக்கலாமா?

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் வேண்டாமே. நொறுக்குத் தீனியே தவறு. படித்துக்கொண்டே அதைச் சாப்பிடுவது இன்னும் தவறு. படிக்கும் மும்முரத்தில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்கிற அளவு தெரியாமல் சாப்பிட நேரிடும். அல்லது படிப்பின் மீதான கவனம் நீங்கி, நொறுக்குத் தீனி மீது சென்றுவிடும். அதிக நொறுக்குத் தீனி, உடல் பருமனுக்கு வழி வகுக்கும். படிப்புக்கு இடையே ஓய்வு எடுக்கும்போது சாப்பிடலாம். அப்போதும், உலர்ந்த பழங்கள், சிறுதானியச் சுண்டல், வேர்க்கடலை, கைக்குத்தல் அரிசி, அவல், பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  

எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

மைதாவில் செய்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஃப்ராங்கி, ரோல், பர்கர், பீட்சா போன்ற ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைத் தொடாமல் இருப்பது மிகவும் நல்லது.

கேன்டீனில் சாப்பிடலாமா…?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

வீட்டில் தயார்செய்யப் பட்ட உணவுகள்தான் எப்போதுமே ஆரோக்கியமானவை. தவிர்க்க முடியாத சூழலில்  மட்டும் கேன்டீன் உணவைச்  சாப்பிடலாம். ஆனால், தினமும் சாப்பிட்டால், நிச்சயம் உடலுக்கு கெடுதல்தான். மேலும், கேன்டீனில் தயார் செய்யப்படும் சமோசா போன்ற சிற்றுண்டிகளையும், சிப்ஸ் வகைகளையும், கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

சில கடைகளில் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் ரசாயனப் பொருட்கள்  உங்களின் உணவுமுறைக்கு சரிவராது.

பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியை சத்தான பொருட்கள் வாங்கிச் சாப்பிடப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

உணவின் விளைவுகள்!

உடலுக்குத் தகாத உணவுகளைத் தெரியாமல் சாப்பிட்டுவிட்டீர்கள் என்றால், ஆசைப்பட்டு சாப்பிட்ட அந்த உணவு, உடலுக்குள் சென்றதும் சும்மா இருக்குமா?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

என்ன செய்யும்? அதனால் ஏற்பட்ட  பிரச்னைகளை எப்படித் தடுக்கலாம்?

சுகாதாரம் இல்லாமல், ஈ, கொசு மொய்க்க தெருவில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு பல்வேறு உபாதைகளை உண்டுசெய்யும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபட, சிலவற்றை அம்மாவிடம் செய்துதரச் சொல்லலாம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

1. நார்ச்சத்து நிறைந்த வெந்தயத்தையும் சீரகத்தையும் தண்ணீரில் கலந்து, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். இந்தச் சுடுநீரை, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.  வெந்தயத்தையும் சீரகத்தையும் எடுத்துவிடக் கூடாது.

2. மாலை நேரங்களில், ‘க்ரீன் டீ’ குடிப்பதாலும் அஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபடலாம். இது, உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.

3. நெஞ்சு எரிச்சல் ஏற்படும் நேரங்களில் குளிர்ந்த பால்  குடிப்பது சிறந்தது.

அதிகமான வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லவும்.

தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் வந்தால்?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

பள்ளியில், மாணவர்கள் பலருக்கும் சிறுநீரை அடக்கும் பழக்கம் உண்டு. வீட்டைத் தவிர, வேறு கழிவறைகளைப் பயன்படுத்தப் பிடிக்காமல் இப்படி இருக்கலாம். இதனால், சிலர் தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது. நிறைய தண்ணீர் குடியுங்கள். சிறுநீர் வரும்போதெல்லாம் தயங்காமல் கேட்டுச் செல்லுங்கள். இடைவேளையின்போது அவசியம் இல்லை என்றாலும், சிறுநீர் கழிக்கச் செல்லுங்கள்.

எவ்வாறு கை கழவ வேண்டும்?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!
உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

விளையாடிவிட்டு வந்ததும், பள்ளியிலிருந்து திரும்பியதும் கண்டிப்பாக கை கழுவ வேண்டும். சாப்பிடும் முன்பும் சரி, சாப்பிட்ட பிறகும் சரி, சோப் போட்டு கை கழுவுங்கள். அப்படி கை கழுவும்போது, அரைகுறையாகவும் அவசரமாகவும் செய்ய வேண்டாம். இங்கே உள்ள படங்களைப் பாருங்கள்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

உள்ளங்கையில் சோப்பை வைத்து, நன்கு தேய்க்கவும். இரண்டு கை விரல்களையும் கோத்து அழுத்தவும். கை விரல்களால் உள்ளங்கை யில் லேசாகச் சுரண்டவும். பிறகு, மணிக்கட்டுப் பகுதியிலும் சோப்பைத் தேய்க்கவும். பிறகு, நன்கு தண்ணீர் விட்டுக் கழுவவும்.

கைகளைக் கழுவி முடித்ததும், சுத்தமான மெல்லிய துணியால் கைகளைத் துடைக்கவும்.

தண்ணீர் குடி!

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

நீர் குடிப்பதற்கும் கணக்கு இருக்கிறது.

கோடைக் காலத்தில், ஒரு நாளைக்கு 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில், 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும். நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம்.  இல்லையென்றால், அதுவே பிரச்னையாகிவிடும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

தண்ணீர் அதிகம் குடிக்க விரும்பாதவர்கள், எலுமிச்சைச்  சாறு அல்லது இளநீர் குடிக்கலாம். இதனால், தாதுச் சத்துக்களும் கிடைக்கும், உடல் வறட்சியையும் தடுக்கலாம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

பள்ளிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் பாட்டிலைத் தினமும் நன்கு சுத்தம் செய்யவும்.

காலை எழுந்தவுடன் படிக்க...

படிப்பதற்காக அதிகாலையில் எழும்போது, எவ்வாறு கவனத்தை ஒருமுகப்படுத்துவது?

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்றால், முந்தைய தினம் சீக்கிரமே தூங்கச் செல்வது அவசியம். இரவு கண் விழித்துப்  படித்தால், உடல் சோர்வாகிவிடும், அதிகாலையில் எழ முடியாது. அப்படியே எழுந்து படித்தாலும் எதுவும் மனதில் பதியாது.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

டீ, காபி குடித்துவிட்டு சிலர் படிக்கத் தொடங்குவர். டீயைத் தவிர்த்து பால் அருந்தலாம். பாதாம் பருப்புகள் 3 அல்லது 4 சாப்பிடலாம். இதனால், மூளை    சிறப்பாகச் செயல்படும். சின்னதாக உடற்பயிற்சி செய்துவிட்டு படிப்பை ஆரம்பித்தால், சுறுசுறுப்பாக இருக்கும்.

மேடை என்றால், திக் திக்!

படிப்புக்கும் நம் அன்றாட செயல்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதைச் சரிசெய்துகொள்வதன் மூலம், படிப்பிலும் ஜொலிக்கலாம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

நண்பர்கள் கிண்டல் செய்தாலோ, ஆசிரியர்கள் திட்டினாலோ அதை எதிர்கொள்வது எப்படி?

நண்பர்கள் கிண்டல்செய்தால், அதை முடிந்தவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது. ‘ஏன் கிண்டல்செய்கிறாய்?’ எனச் சண்டைக்குப் போனால், இன்னும் கூடுதலாக கிண்டல் செய்வார்கள். வெளிநாடுகளில், கிண்டல் செய்வதைத் தடுப்பதற்குத் தனிச் சட்டமே உள்ளது. ஒரு எல்லைக்கு மேல் கிண்டல் செய்தால், ஆசிரியர்களிடம் புகார்செய்து பிரச்னையை முடிவுக்கு கொண்டுவாருங்கள்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

ஆசிரியர்கள், உங்களைப் படிப்பு காரணத்துக்காகத்  திட்டினால், பிரச்னைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும். ஆசிரியர்கள், சராசரியாகப் படிக்கும் மாணவராக இருந்தால், அது குறித்து வெட்கப்படாமல் சொல்லுங்கள். அப்போதுதான், ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

வகுப்பறையில் திடீரெனப் பேசச் சொன்னாலோ, மேடையில் பேசச் சொல்லிவிட்டாலோ, தயங்குபவரா நீங்கள்?

முதலில், ஏன் தயக்கம் வருகிறது என்பதை யோசிக்க வேண்டும். சில சொற்களைக் கூறும்போது திணறுவதால், வகுப்பில் பேசுவதற்குத் தயங்கலாம். அவர்கள், அதுபோன்ற சொற்களைப் பட்டியலிட்டு, தனியாக இருக்கும்போது சத்தமாகச் சொல்லி பழக வேண்டும். அந்தச் சொற்கள் அமைந்த வாக்கியங்களை நண்பர்களோடு பேசிப் பழக வேண்டும். சிலருக்கு, பேசும் உரையைத் தயாரிக்கக் கூடுதலான காலம் தேவைப்பட்டால், அதைத் துணிந்து ஆசிரியரிடம் கூறலாம். உரைக்குத் தேவையான புத்தகங்கள், குறிப்புகளை ஆசிரியரே தந்து உதவலாம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

மேடையேறி கூட்டத்தில் பேசுவதற்கு கூச்சப்படுபவர்கள், முதலில் நண்பர்கள் வட்டத்தில் பேசிப் பழக வேண்டும். நண்பர்களும் அவரை உற்சாகப்படுத்தி, திருத்திக்கொள்ளவேண்டியது ஏதேனும் இருந்தால் குறிப்பிட வேண்டும்.

மேடையில் பேசும்போது, பரிசு கிடைக்க வேண்டும் என நினைக்காமல், உங்களுக்கு என்ன தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கான செய்திகளைத் தெளிவாகப் பேசினால் போதும் என நினைத்துப் பேசுங்கள்.

இதுபோன்ற பழக்கங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, படிப்பில் ஏற்றத்தை அளிக்கும்.

 நிமிர்ந்து உட்கார்!

படிப்பதற்குத் தயாரானதும் எப்படிப் படிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் உடல்மொழி முக்கியம். எந்தப் பாடத்தை முதலில் படிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்து, அதற்கு உரிய புத்தகத்தை எடுப்பதைப் போல, படிப்பதற்கும் சரியான பழக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

ஒவ்வொருவரும், அவர்களுக்கு வசதியானபடி உட்கார்ந்து படிக்கத்தான் விரும்புவர். அதில் தவறு இல்லை. அதில் ஒரு ஒழுங்குமுறை இருக்க வேண்டும். நாற்காலியில் அமர்ந்து, மேசையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதும், தரையில் அமர்ந்து, கையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதும், படிப்பதற்குச் சிறந்த முறைகள். முதுகை வளைத்து உட்காராமல், நிமிர்ந்து உட்கார வேண்டும். நாற்காலியில் அமரும்போது, உங்கள் கால்கள் தரையில் நன்கு பதிய வேண்டும். படுத்துக்கொண்டு படிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். படுத்துக்கொண்டு படிப்பதால், தூக்கம் வரும். பாடத்தில் கவனம் இல்லாமல் போகும். நடந்துகொண்டே படித்தால், கண்களும் உடலும் சீக்கிரம் சோர்ந்துபோய்விடும்.

புத்தகத்தை கண்களுக்கு மிக அருகில் வைத்துப் படிக்காமல், குறிப்பிட்ட இடைவெளியில் வைத்துப் படிக்க வேண்டும்.  உங்களைச் சுற்றிப் போதுமான வெளிச்சம் நிச்சயம் இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான இடமாக இருப்பதும் மிக முக்கியம். சத்தம் இல்லாத இடமாகத் தேர்ந்தெடுக்கவும்.

தூங்கும் நேரத்தில் படிக்கலாமா?

இரவில் எவ்வளவு நேரம் கண்விழித்துப் படிக்கிறோமோ, அவ்வளவு மார்க் அதிகமாக எடுக்கலாம் எனச் சிலர் தவறாக நினைப்பார்கள்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

தேர்வு நெருங்கும் சூழலில், படிக்கவேண்டிய பகுதிகள் நிறைய இருக்கலாம். சிலர், படித்த பாடங்களைத் திருப்புதல் செய்யும் நிலையில் இருக்கலாம். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுப்பது இரவு நேரத்தைத்தான்.  தூங்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிவிடலாமே என நினைத்து சிலர் இப்படிச் செய்வார்கள்.

நம் உடலுக்கு உணவு, உடற்பயிற்சியைப் போல ஓய்வும் மிக முக்கியம். தூங்கும்போதுதான் உடலின் பல பாகங்கள் முழுமையான ஓய்வில் இருக்கும். இதுவே, அடுத்த நாள் உற்சாகமாக இயங்க உதவும். தூங்கும் நேரத்தைக் குறைத்தால், சோர்வு ஏற்படும். ஆனால், தேர்வு நேரத்தில் அதிகம் படிக்கவேண்டியது இருக்கும். வழக்கமாகத் தூங்கச் செல்லும் நேரத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை எடுத்துக்கொண்டு படிக்கலாம். காலை நேரத்தில் சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும். அன்றைய நாள், என்னென்ன படிக்கப்போகிறோம் எனப் பட்டியலிட்டுக் கொண்டு படியுங்கள். திட்டமிட்டு தேவையில்லாதவற்றைத் தவிர்த்தாலே,  இரவில் கண் விழிக்கவேண்டிய அவசியம் இல்லை.

எனவே, இரவில் கடிகாரத்தோடு போட்டிபோடாமல், காலையில் நிதானமாகப் படியுங்கள்.

ஒரு கண், புத்தகத்தில்; இன்னொரு கண், டி.வி-யில்!

டி.வி பார்ப்பது பிடித்த விஷயம்தான். மூன்று வயது வரை குழந்தைகள் டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நாம்தான் மூன்று வயதைக் கடந்துவிட்டோமே எனச் சொல்லக் கூடாது. கார்ட்டூன் சேனல் என்றால், மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

பள்ளி செல்லும் மாணவர்கள், வார நாட்களில் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையிலும், வார இறுதிகளில் இரண்டு அல்லது மூன்று மணி நேரமும் டி.வி பார்க்கலாம். நேர அளவின்றி டி.வி பார்த்துக்கொண்டே இருப்பது உடலுக்கும் மனதுக்கும் தீங்கை  விளைவிக்கும். டி.வி-யில் அறிவியல்  நிகழ்ச்சிகளைப் பார்ப்பது நல்லது. செய்திச் சேனல்களில் நடப்புச் செய்திகள், உலகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகளைப்  பார்ப்பது பொதுஅறிவுக்கு உதவும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

சிலர் டி.வி-க்கு மிக அருகில் உட்கார்ந்து பார்ப்பார்கள். இது, கண்களைப் பாதிக்கும். இதை, உடனே கைவிட வேண்டும். 6 முதல் 9 அடிகள் இடைவெளியில்தான் டி.வி-யைப் பார்க்க வேண்டும். நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து, திரையும் கண்களும் நேர்க்கோட்டில் இருப்பதுபோல பார்ப்பதுதான் சரியான முறை.  இல்லாவிட்டால், கழுத்து வலி ஏற்படும்.

டி.வி-யைப் பார்த்துக்கொண்டே படிக்கலாமா? 

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

இது நல்லதல்ல. சிலருக்கு குறைவான சத்தத்தில் பாடல்களை இசைக்கவிட்டு படிப்பது பிடிக்கும். ஆனாலும், பாடலைக் கேட்கும் ஆர்வத்தில், படிப்பது திசை மாறும் வாய்ப்பே அதிகம். அதிலும் காட்சி ஊடகமான தொலைக்காட்சியில் பாடல்களைக் கேட்டவாறு படிப்பது சாத்தியம் இல்லை. உங்களுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டின் விளம்பரம் டி.வி-யில் வரும். உடனே உங்கள் மனது அந்த சாக்லேட்டின் ருசி, அதைக் கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்பதைச் சுற்றி பறக்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் தடைப்பட்டு டி.வி அணைந்துவிட்டால், ஏதோ ஒன்று குறைகிறதே என மனம் நினைக்கத் தொடங்கிவிடும். இது, ஆழ்ந்து படிக்கும் திறனைப் பாதிக்கக்கூடும். டி.வி-யைப் பார்த்தவாறு படிப்பது, அந்த நேரத்தில் சோர்வாகத் தெரியாவிட்டாலும், வகுப்பில் சோர்வை உண்டாக்கிவிடும். எனவே, அமைதியான சூழலில் படிப்பதே நல்லது.

படிக்கச் செல்லும் முன் செய்யவேண்டிய  பயிற்சிகள்!

விடியற்காலையில் எழுந்து, ஆவலுடன் புத்தகத்தை எடுத்தும் சிலருக்கு மறுபடியும் தூக்கம் வரும். புத்தகத்தில் உள்ள எழுத்துகள் மங்கலாகி, இமைகள் தானாக மூடும். இப்படி ஏற்படாமல் இருக்க, காலை எழுந்தவுடன் சில பயிற்சிகளைச் செய்துவிட்டு படிக்கத் தொடங்கலாம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

மூச்சுப் பயிற்சி செய்வதால்,  உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். சம்மணம் இட்டோ, பத்மாசன நிலையிலோ உட்கார வேண்டும்.  மெதுவாக காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட வேண்டும். இந்த மூச்சுப் பயிற்சியை, தினமும்          10 முதல் 15 முறை செய்துவந்தால், பாடத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்.

இதே பயிற்சியை இன்னொரு முறையிலும் செய்யலாம். முதலில் வலது பக்க மூக்கை கைவிரலால் மூடி, இடது பக்க மூக்கால், காற்றை இழுக்க வேண்டும். பிறகு, இடது பக்க மூக்கை கைவிரலால் மூடி, வலது பக்க மூக்கால், காற்றை வெளிவிட வேண்டும். இதை 10 முதல் 15 முறை செய்யலாம்.

எளிமையான உடற்பயிற்சிகள் என்ன செய்யலாம்?

காலையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த உடற்பயிற்சி இது. உடலை முழுமையாக வளைத்து, முழங்கால்கள் வளையாமல், கை விரல்களால் கால் விரல்களைத் தொடுங்கள். கால் விரல்களைத் தொட்டபடியே சில நிமிடங்கள் இருக்க வேண்டும். இதனால், இரவு முழுதும் ஓய்வில் இருந்த உடல், இயங்கும் நிலைக்கும் வரும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

தெருவில் நடக்க வாய்ப்பு இருப்பவர்கள், சிறிது தூரம் நடந்துவிட்டு வாருங்கள். அந்த நேரம், கைகளை வீசி, காற்றை நன்கு உள்ளே இழுத்தவாறு நடக்க வேண்டும்.

இதையெல்லாம் அதிக நேரம் எடுத்துச் செய்யக் கூடாது. பிறகு, சீக்கிரம் எழுந்த நோக்கமே வீணாகிவிடும். மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை 10 முதல் 15  நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும்.

பிறகு, முழுக் கவனத்தையும் பாடத்தில் செலுத்துங்கள். படிக்கும்போது, தூக்கம் வராது.

அழகிய கண்களை அசந்துபோக வைக்கலாமா?

‘படிப்பு என வந்துவிட்டால், கடிகாரத்தைப் பார்க்க மாட்டோம்’ என்று நீண்ட நேரம் அசையாமல் படிப்பவர்கள்  உண்டு. அப்படிப் படிப்பதால், கண்கள் சீக்கிரமே சோர்ந்துவிடும். கண்கள் களைப்படையாமல் இருக்க, படிப்புக்கு இடையே சில பயிற்சிகளைச் செய்யலாம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

நமது கண் விழிகளை வலப்புறமாக    10 முறையும், இடப்புறமாக 10 முறையும் பொறுமையாகச் சுழற்ற வேண்டும். இதனால், கண்கள் புத்துணர்ச்சி அடையும். இதேபோல, கண் விழிகளை மேலேயும் கீழேயுமாக 10 முறை பொறுமையாக நகர்த்த வேண்டும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

இதேபோல கழுத்தையும் இடது மற்றும் வலதுபுறமாகவும், மேல் மற்றும் கீழ் நோக்கியும் 10 முறை திருப்ப வேண்டும்.

பள்ளி ஓய்வு நேரத்தில்சில பயிற்சிகள்!

வகுப்பறையில், ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருப்பதால், தொடைப் பகுதிகளில் ரத்தம் ஓட்டம் குறைந்துவிடும். ஒரு வகுப்பு முடிந்து, அடுத்த வகுப்பு தொடங்குவதற்கு முன்பு, சில எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

மாணவர்கள், தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று, கால்களைத் தரையில் ஊன்றவும். பிறகு, பின்னங்கால்களை மட்டும் தூக்க வேண்டும். மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 10 முறை செய்யவும். இதனால், தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் சீராகும். இந்த உடற்பயிற்சியை ஆங்கிலத்தில், காஃப் ரெய்ஸ் (Calf raise) என்பார்கள்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

தோப்புக்கரணம் போடுவதும் குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய சிறந்த உடற்பயிற்சியே. இது, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்த ஓட்டத்தை அளிக்கும்.

தூங்குவதற்கு முன் சில பயிற்சிகள்!

அதிகாலையில் எழுந்து படித்து, பள்ளிக்குச் சென்று, வகுப்பில் நடக்கும் பாடங்களைக் கேட்டு வீடு திரும்பியதும், ‘அப்பாடா ஒரு வழியா இன்றைய நாள் முடிந்தது, இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கவேண்டியதுதான்’ என நினைப்போம்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

ஆனால், தூங்கும் முன் சில பயிற்சிகளைச் செய்வதால் நல்ல தூக்கம் வரும். படுத்தால் தூக்கம் வந்துவிடுமே, இதுக்கு எதற்கு பயிற்சி எனச் சிலர் நினைக்கலாம்.

இரவு உணவை முடித்தவுடனே தூங்கச் செல்லக் கூடாது. இது, உணவு செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, வாயுத் தொல்லைகளுக்கும் வழிவகுக்கும். சாப்பிட்ட பின், 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால், உணவு நன்றாக ஜீரணம் ஆகும். இதேபோல சைக்கிள் பயிற்சியும் செய்யலாம். இதுபோன்ற பயிற்சிகள், உடல் களைப்பை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும். பிறகு, நன்றாகத் தூங்கலாம்.

மாலை நேரத்தில், வீட்டுப் பாடம் முடித்த பின் விரல்களுக்குப் பயிற்சி செய்யலாம். கீபோர்டு வாசிப்பது போல, பொறுமையாக ஐந்து விரல்களையும் மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும்.

கதை சொல்; கதை கேள்!

காலை, இரவு இரண்டு வேளைகளிலும் பல் துலக்குவது நல்ல பழக்கம். ஆனால், இரவு உணவு சாப்பிட்டதும் பல் துலக்கக் கூடாது. சாப்பாட்டை நன்கு மென்று சாப்பிடுவதால், பற்களுக்கு நிறைய வேலை கொடுத்துவிடுகிறோம். அதனால், பல் ஈறு மென்மையாகி இருக்கும். அது மீண்டும் இறுக்கமாக, அரை மணி நேரமாவது ஆகும். அதன் பிறகே பல் துலக்க வேண்டும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

படுத்த பிறகு டி.வி பார்க்க வேண்டாம். நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தில் அதிக நேரம் செலவிட்டுவிடுவீர்கள். கண்களும் சோர்ந்துவிடும். அதனால், காலையில் எழுந்திருக்க முடியாது. டி.வி பார்ப்பதற்குப் பதில், பெற்றோரிடம் கதை கேட்கலாம். தங்கை, தம்பிகளுக்கு கதை சொல்லலாம். எல்லோரும் சிரித்து மகிழ்ந்துகொண்டே தூங்கினால், மனமும் புத்துணர்ச்சி அடையும்.

நகங்களைப் பாதுகாத்தல்!

நாம் சாப்பிடும் எதுவும் நம்முடைய நகத்தைத் தொட்ட பிறகே வயிற்றுக்குள் செல்கிறது. எனவே, நகங்களைப் பராமரிப்பது மிக மிக அவசியம். நகங்களைப் பார்த்தே ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஒருவருக்கு சத்து குறைவாக இருப்பதை நகத்தை அழுத்திப் பார்த்தே சொல்லிவிடுவார்கள்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

நகத்தைக் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், உடனே  அதை விட்டுவிட வேண்டும். நகத்தில் உள்ள அழுக்குகள் மூலம் கிருமிகள் வயிற்றுக்குள் சென்று, பிரச்னைகளை உருவாக்கும். பல் ஈறுகளையும் வலுவிழக்கச் செய்துவிடும். நகம் கடிக்கும் பழக்கம் உடையவர்கள், தங்களுடைய சின்ன வயதில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், இன்றும் தொடர்வதாகச் சொல்கின்றனர். அதனால், சின்ன வயதிலேயே இந்தப் பழக்கத்தை விட்டு விடலாம்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். நகங்களை வெட்டும்போது, சதையோடு ஒட்டி இருக்கும் தோலுடன் சேர்த்து வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால், மீண்டும் நகம் வளரும்போது வலியை உண்டாக்கும்.

நகங்களை வெட்டும்போது, விரல்களை சில நொடிகள் நீரில் வைத்திருந்து வெட்டினால், சீராக வெட்டலாம்.

கைகளைச் சுத்தம் செய்யும்போது, நக இடுக்குகளுக்குத் தனிக் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

விளையாடும்போது, நகங்களில் அடிபடாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். நகங்களில் அடிபட்டுவிட்டாலோ, நகச்சுத்தி வந்தாலோ, அலட்சியமாக இருந்துவிடாமல், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மருதாணி இலைகளை அரைத்துப் போடுவது, நகங்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். மருதாணி, மருத்துவக் குணம்கொண்டது.

நகங்களை முறையாகப் பராமரிப்பது, நமக்கும் நம் நண்பர்களுக்கும் நல்லது. விளையாடும்போது, உங்களை அறியாமலேயே நண்பர்களின் மேல் நகம் பட்டு காயப்படுத்தாமல் இருக்க உதவுமே.

ஓடி ஆடி விளையாடு!

‘‘விளையாட்டா? ஓ... எங்க அப்பா மொபைலில் நிறைய நிறைய கேம்ஸ் விளையாடுவேனே’’ என்று சொல்வதுதான் இப்போதைய ஃபேஷன். புதிய தொழில்நுட்பத்தை நாம் கற்றுக்கொள்வது சரியே. ஆனால், அதிக நேரத்தை அதிலேயே வீணாகக் கழிக்கக் கூடாது.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

விளையாட்டு என்றால், மைதானம் அல்லது  தெருக்களில் ஓடி ஆடி விளையாட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 30 நிமிடங்களாவது விளையாடுவது அவசியம்.

விளையாடுவதன் மூலம், உடலின் அனைத்துப் பாகங்களும் சுறுசுறுப்பாகும். விளையாடும்போது புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள்.  கபடி போன்ற விளையாட்டுகள், சிறந்த உடல் மற்றும் மூச்சுப் பயிற்சிக்கு உதவும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

மாணவிகளில் சிலர், விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள். இது தவறு. இரு பாலினரும் விளையாடுவது அவசியம். பருமனாக இருக்கும் குழந்தைகள் மட்டும் அல்லாது அனைவருமே விளையாட வேண்டும். அது, புத்துணர்ச்சி தந்து மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும்.

படிப்பின் மீது அதிகக் கவனம் செலுத்துவதால், விளையாடுவதைச் சிலர் தவிர்த்துவிடுவர். இதுவும் சரியானது அல்ல. படிப்பு மட்டுமே மூளைக்கு வேலைகொடுக்கும் விஷயம் அல்ல. விளையாட்டிலும் மூளைக்கு வேலை இருக்கிறது. இதனால், படிப்பிலும் கவனம் சீராக இருக்கும்.

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

ஓடி ஆடி விளையாடி, உற்சாகமாகப் படியுங்கள். தேர்வுகளைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!

 இந்த இதழ் குறிப்புகளை வழங்கியவர்கள்...

உடலும் உள்ளமும் உற்சாகம் ஊறட்டும்!

பி.பி.கண்ணன் (மனநல மருத்துவர்):  டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மனநல மருத்துவத்தில் MD பட்டம் பெற்றவர். மனநல மருத்துவத்தில் 13 ஆண்டுகளும், குழந்தைகளுக்கான மனநல மருத்துவத்தில் 6 ஆண்டுகளும் அனுபவம் பெற்றவர். தற்போது, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

தீபலேகா பானர்ஜி (டயட்டீஷியன்): கொல்கத்தாவில் உள்ள ஜடாவ்புர் பல்கலைக்கழகத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் MSC பட்டம் பெற்றவர். அப்பல்லோ மருத்துவமனை உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர். சென்னையில், ‘360 டிகிரி நியூட்ரிகேர்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

விஜய் ஸ்டீஃபன் (உடற்பயிற்சி நிபுணர்): சர்வதேச விளையாட்டு மற்றும் அறிவியல் சங்கம் (ISSA) மூலம் உடற்பயிற்சி நிபுணருக்கான சான்றிதழ் பெற்றவர். உடற்பயிற்சியில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். சென்னை, கொளத்தூரில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். குழந்தைகளின் உடற் பருமனைக் குறைக்கவும், விளையாட்டுத் திறனை அதிகரிக்கவும் சிறப்புப் பயிற்சிகளை வழங்கிவருகிறார்.

தொகுப்பு: ஜெ.விக்னேஷ், ஐ.மா.கிருத்திகாபடங்கள்: வி.சதீஸ்குமார், க.சதீஷ்குமார், ஓவியங்கள்: பிள்ளை, ராம்கி, மகேஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு