Published:Updated:

கதை கதையாம் காரணமாம்...

கதை கதையாம் காரணமாம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கதை கதையாம் காரணமாம்...

புதிய பகுதி

கரத்தின் புகழ்பெற்ற பள்ளியில் ஆகாஷும் பூரணியும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இறை வணக்கம் முடிந்து, வகுப்பு தொடங்கியது.

ஆசிரியர், ‘‘F O R E S T - ஃபாரெஸ்ட். ஃபாரெஸ்ட்னா காடு. காடுனா என்னன்னு யாருக்காவது தெரியுமா?’' என்று கேட்டதும் அமைதியாக இருந்த வகுப்பறையில் ஒரு பிஞ்சுக் கை மட்டும் உயர்ந்தது. அது பூரணியுடையது.

`‘காடுனா சிங்கம், கரடி, மான், முயலெல்லாம் இருக்கும். நெறைய நெறைய மரங்கள் இருக்கும். சிங்கம்தான் காட்டுக்கு ராஜா. அது ஒருநாளு மானை விரட்டிக்கிட்டு ஓடும்போது பெரிய பள்ளத்துல விழுந்துடுச்சு...’' என்று பூரணி சொல்லிக்கொண்டே போக, ஆசிரியர் உட்பட அனைவரும் கதை கேட்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். மொடமொட என்று இருந்த புது யூனிஃபார்மைத் தடவிக்கொண்டே கையை நீட்டி நீட்டிப் பூரணி சொன்ன கதை முடிந்தபோது, காடு என்றால் என்னவென்று வகுப்பிலிருந்த மாணவர்களுக்குப் புரிந்திருந்தது. அவர்கள் இனிமேல் ‘F O R E S T - ஃபாரெஸ்ட்' என்பதை வார்த்தையாக நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டதால், எப்போதும் மறக்காது.

கதை கதையாம் காரணமாம்...

சரி... ஆகாஷால் ஏன் கை உயர்த்த முடிய வில்லை... பூரணியால் எப்படி முடிந்தது? பூரணியின் அம்மாவும், அப்பாவும் தினமும் அவளுக்குக் கதைகள் சொல்கிறார்கள். அந்தக் கதையில் வரும் புலி, டைனோசர், சிங்கம், டோரா, ஸ்பைடர் மேன் எல்லாமே பூரணியின் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டனர். பூரணியின் பெற்றோர் கதை சொல்ல ஆரம்பிக்கும்போது, காடு என்றால் இன்னவெல்லாம் இருக்கும் என ஒருநாளும் சொன்னதில்லை. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் காட்டில் நடந்தன. பூரணி, காடு என்றால் என்னவென்று அவளே புரிந்துகொண்டாள். அதனாலேயே பூரணியின் கை உயர்ந்தது. உங்கள் வீட்டுப் பூரணிகளின் கை உயர வேண்டுமா? கதைகள் சொல்லுங்கள்.

கதை சொல்லும் நேரத்தில் `ஏபிசிடி' சொல்லிக்கொடுத்தால், படிப்பதற்கு உதவியாக இருக்கும் என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அதைக் கற்றுக்கொள்ளத்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள் என் பதை மறந்துவிடுகிறோம். கதைகள் சொல்வதன் மூலம் குழந்தைகளுக்கும் உங்களுக்குமான நெருக்கம் அதிகமாகும். குழந்தைகள் புதிய சொற்களை, அதன் அர்த்தம் விளங்கக் கற்றுக்கொள்வர்; சொல்லும் செய்தியைக் கற்பனையில் காட்சியாக்கப் பழகிக்கொள்வர்; கதைகளில் வரும் உறவுகளுக்கான மதிப்புகளை உணர்ந்து கொள்வர். உரையாடும் தன்மை இயல்பாக செழுமைப்படும். ஒரு செய்தியைக் குழப்பம் இல்லாமல் சரியாகச் சொல்வதற்கு, தன்னை அறியாமலே தயார் ஆவர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, கதை கேட்கும் போது உங்கள் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர்.

‘நான் கதை புத்தகங்கள் படித்துப் பழக்கமே இல்லையே... எப்படிக் கதை சொல்வது..?’ என்ற தயக்கம் வேண்டாம். சிறு வயதில் கேட்ட கதையை, இப்போதைய சூழலுக்கு கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கள். காக்கா எத்தனை காலம்தான் வடையையே தூக்கிச் செல்வது? உங்கள் கதையில் பீட்சா, பர்கரைத் தூக்கிச் செல்லட்டுமே..! கதை சொல்வது என்றதுமே தூங்கும்போது சொல்வது என்று நினைக்க வேண்டாம். காலை எழுந்ததும் பல் துலக்க அடம்பிடிக்கும் குழந்தையிடம், ‘அன்னிக்கு அப்படித்தான் டைனோசர் டூத் பிரஷ்ல வெள்ளை கலர் பேஸ்ட்டை பிதுக்கும் போது, அப்படியே புளூவா மாறிடுச்சாம்’ என்று குழந்தையின் கவனத்தை அடம் பிடிப்பதில் இருந்து கதைக்கு மாற்றுவதில் இருந்தே, இருவருக்குமான கதை உரையாடல் தொடங்கலாம்.

கதை சொல்வதற்கென்றே நேரத்தை ஒதுக்குங்கள். சில நாட்களில் ஆறு மணியாகி விட்டாலே கதை நேரம் ஸ்டார்ட் என்று மனதில் அலாரம் அடிக்கத் தொடங்கிவிடும். கதைகள் சொல்லும்போது முக பாவனை, உடல்மொழியோடும் சொல்லப் பழகுங்கள். புதிய கதைகளை எப்படி உருவாக்குவது, கதை சொல்வதை சுவாரஸ்யமாக்குவது எப்படி என்பதை அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.

சரி, இப்போது ஒரு சுவாரஸ்யப் பயிற்சி. கீழே உள்ள கதையில் முடிவு கொடுக்கப்படவில்லை. அந்த முடிவை நீங்களே உருவாக்கி, குழந்தைக்குக் கதை சொல்லுங்கள் பார்க்கலாம்..!

ஒரு ஊரில் நாகன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் ஒரு காதைப் பொத்திக்கொண்டேதான் இருப்பான். ஏனென்று கேட்டால், `‘இந்தக் காது வழியே நான் கேட்கிற தகவல்கள் எல்லாம் மறு காது வழியே வெளியே போய்விடுகிறது. என்னிடம் யார் என்ன சொன்னாலும், அதை நான் சொல்லாவிட்டாலும்கூட, எப்படியோ மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது’' என்பான்.

அவனுடைய அப்பா அரண்மனையில் காவலாளியாக இருக்கிறார். அந்தப் பெரிய நாட்டை ஆண்டுகொண்டிருந்த ராஜாவுக்கு கொஞ்ச நாட்களாக ஒரு வித்தியாசமான பிரச்னை. தாங்க முடியாத அளவுக்கு தலை அரித்தது. ஒருநாள் கண்ணாடியைப் பார்த்தபோது, தன் தலையில் இரண்டு இடங்களில் லேசாக வீங்கியிருப்பதுபோல தெரிந்தது. சில நாட்களுக்குப் பிறகு பார்த்தால், மாட்டுக்கு இருக்கும் கொம்புபோல முளைத்துவிட்டது. இதை அரண்மனையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தார். தூங்கும்போது, குளிக்கும்போதும்கூட கிரீடத்தைக் கழற்றுவதே இல்லை.

ரகசியம் என்றாலே எப்படியும் வெளியே தெரிந்துவிடும் அல்லவா? அப்படித்தான் காவலாளி ஒருவருக்குத் தெரிந்துவிட்டது. நாகனின் அப்பாதான் அந்தக் காவலாளி. நாகனிடம் வாய்தவறி ராஜா பற்றிய ரகசியத்தைச் சொல்லிவிடுகிறார் அவன் அப்பா. அது ஊர் முழுக்க, நாடு முழுக்கப் பரவிவிடுகிறது. இதற்கு யார் காரணம் எனத் தேடி, நாகனையும் அவன் அப்பாவையும் ராஜா முன் நிறுத்துகிறார்கள்.

கோபத்தோடு வந்த ராஜா...

கன்டீனியூ... ப்ளீஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விஷ்ணுபுரம் சரவணன்