உப்புச் சுரங்கம்!
உப்பு என்றதும் 1930-ம் ஆண்டு காந்தி நடத்திய உப்பு சத்தியாகிரகம் பற்றி படித்தது ஞாபகம் வருகிறதா? இந்த மார்ச் 12-ம் தேதி வந்தால், 86 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக, பிரிட்டிஷாரின் வணிக ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டமாக அது அமைந்தது. மதிப்பு வாய்ந்த சந்தைப்பொருளாக உப்பு உலகம் முழுவதும் உள்ளது.

கடல் மூலம் எடுக்கப்படும் உப்பு போல, சுரங்கத்தில் இருந்து உப்பு எடுக்கப்படுகிறது. தெற்கு போலந்தில் உள்ள விலிஸ்கா நகரில் உள்ள, விலிஸ்கா உப்புச் சுரங்கம் (Wieliczka Salt Mine) உலகின் மிகப் பழமையான உப்புச் சுரங்கம். 13-ம் நூற்றாண்டில் ஆரம்பித்து, 2007 வரை இந்த உப்புச் சுரங்கம் இயங்கியது.
1,073 அடி ஆழமும் 287 கிலோமீட்டர் நீளமும்கொண்ட இந்தச் சுரங்கம், இப்போது அந்த நாட்டின் வரலாற்றுச் சின்னமாக மாற்றப்பட்டு, அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்தச் சுரங்கத்தைக் காண வருகிறார்கள்.
அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில், பாறை உப்பில் வடிவமைக்கப்பட்ட வரலாற்றுச் சிலைகள், புராணக் கதாபாத்திரங்களைப் பிரதிபலிக்கும் குடைவுகள், சுரங்கத்தை அழகுபடுத்து கின்றன. இந்தச் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சாண்ட்லியர் விளக்கு களிலும் கிறிஸ்டல்களுக்குப் பதிலாக பாறை உப்பையே பயன்படுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்டல் போன்ற தெளிவும் துல்லியமும் கிடைக்க, பாறை உப்பை நீரில் கரைத்து, அவற்றை கிறிஸ்டல் வடிவில் செய்து, சாண்ட்லியர்களில் பொருத்தி இருக்கிறார்கள்.
யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில், இந்த உப்புச் சுரங்கம் இடம்பிடித்துள்ளது.
52G ஹோட்டல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்கு 2G போன், 3G போன் என்றால் G என்பது ஜெனரேஷனைக் குறிக்கும் என்பது தெரியும். அந்த வகையில் 52-வது தலைமுறை ஓட்டல் ஒன்று ஜப்பானில் இருக்கிறது தெரியுமா? 100 வயதைக் கடந்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று ஜப்பான். அவர்களுக்கு கொள்ளுத் தாத்தாவாக உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஒன்று ஜப்பானின் யமனாஷி (Yamanashi) மாநிலத்தில் இருக்கிறது. கி.பி705-ல் தொடங்கப்பட்ட இந்த விடுதியின் பெயர், நிஷியாமா ஆன்சென் கியுன்கான் (Nishiyama Onsen Keiunkan).

52 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டில், ‘உலகின் பழைமையான ஹோட்டல்’ என கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த ஹோட்டலில், ஒரு நாள் வாடகை 52,000 யென். இந்திய மதிப்பில் சுமார் 30,000 ரூபாய்.
பொன்னான கடிகாரம்!


500 வருடங்களுக்கு முன்பு தயாரித்த ஒரு கடிகாரம், இப்போதும் தன் வேலையைச் சரியாக செய்துகொண்டிருக்கிறது. 1530-ல், ஜெர்மனியின் நியூரெம்பர்க் (Nuremberg) நகரில் தயாரானதாகக் கருதப்படும் இந்த பாக்கெட் கடிகாரம், ஜெர்மனியின் புகழ்பெற்ற சீர்திருத்தவாதியான பிலிப் மெலாங்ஸ்தன் (Philip Melanchthon) பயன்படுத்தியது. ஒரு முறை சாவி கொடுத்தால், 12 முதல் 16 மணி நேரம் ஓடும். மூடியைத் திறக்காமல் நேரத்தைப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘பிலிப் மெலாங்ஸ்தன், எல்லாப் புகழும் இறைவனுக்கே, 1530’ என ஜெர்மன் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கடிகாரம், தற்போது அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரில் உள்ள வால்ட்டர்ஸ் ஆர்ட் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காலத்தைப் போல பழைய கடிகாரமும் பொன் போன்றதுதான்.
- கார்த்திகா முகுந்த்