இந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதைத் தட்டியிருக்கிறது, ‘பியர் ஸ்டோரி’ (Bear story) எனும் ஸ்பானிஷ் மொழிப் படம். இந்தப் படம், ஆஸ்கர் விருதுடன் 50-க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்திருக்கிறது.

உங்களுக்கு பயாஸ்கோப் தெரியுமா? ஒரு பெட்டியின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைச் சுழற்ற, சின்னத் துளை வழியே குட்டி சினிமா பார்க்கலாம். மேலே இருக்கும் புனலில் இசை ஒலிக்கும். அதை மையமாகவைத்து, உருவான உணர்ச்சிபூர்வமான கதை இது.
ஒரு கரடி, பயாஸ்கோப் பெட்டியைத் தயார்செய்கிறது. பெட்டிக்குள் ஃபிலிமுக்குப் பதில், பொம்மை பற்சக்கரங்கள் மூலம் நடக்கவும் ஓடவும் செய்கிறது. அந்தப் பெட்டியுடன் நகரத்துக்கு வருகிறது. அங்கே, அப்பா கரடியுடன் வரும் ஒரு குட்டிக் கரடி ஓடிவந்து படம் பார்க்கிறது. அந்தப் படத்தில்...
ஒரு குட்டிக் கரடி, அன்பான அம்மா கரடியோடும் பாசமான அப்பா கரடியோடும் வாழ்ந்துவருகிறது. அப்போது, சர்க்கஸ் நடத்துவதற்கு விலங்குகளைப் பிடிக்க வரும் மனிதர்கள், குட்டிக் கரடியின் வீட்டுக்குள் நுழைந்து, அப்பா கரடியை இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். சர்க்கஸில், அப்பா கரடி சைக்கிள் ஓட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்களின் அடி, உதைகளுக்கு இடையே அப்பா கரடியின் ஒரே ஆறுதல், அதனிடம் இருக்கும் டாலர். அந்த டாலரில் அப்பா, அம்மா, குட்டிக் கரடி சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம். அதை அடிக்கடி பார்த்துக்கொள்ளும். ஒரு நாள் துணிச்சலோடு சர்க்கஸை விட்டு தப்பித்து, வீட்டுக்கு வந்து, குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வதாக பயாஸ்கோப்பில் ஓடும் படம் முடிகிறது.
படம் பார்த்த கரடி, பணம் கொடுத்துவிட்டு சென்றுவிடும். பிறகு, பயாஸ்கோப்பில் டாலரை எடுத்துப் பார்த்த கரடியைப் போல, பயாஸ்கோப் தயாரித்த கரடியும், ஒரு டாலரை எடுத்துப் பார்க்கும். அதில், மூன்று கரடிகள் இருப்பதாகப் படம் முடிகிறது.
தன்னுடைய கதையைத்தான் அந்தக் கரடி, பயாஸ்கோப் படமாக மாற்றியிருக்கிறது. ஆனால், பயாஸ்கோப் படம்போல இந்தக் கரடியின் வாழ்க்கை இல்லை. ஆரம்பக் காட்சியிலேயே, அந்தக் கரடி தனிமையில் இருப்பதையும், படுக்கையில் குட்டிக் கரடியின் பொம்மை மட்டும் இருப்பதையும் காட்டுவார்கள்.

11 நிமிடங்களே ஓடும், வசனமே இல்லாத இந்தக் குறும்படத்தை இயக்கியவர், கேப்ரியல் ஓசோரியோ வர்கஸ் (Gabriel Osorio Vargas) என்ற சிலி நாட்டுக்காரர். அற்புதமான அனிமேஷனை உருவாக்கியவர், ஆன்டனியா ஹெரேரா (Antonia Herrera). இந்தக் குறும்படத்தைப் பார்த்ததும், சர்க்கஸில் விலங்குகளை நாம் பார்க்கும் கோணம் நிச்சயம் மாறும்.
மினியன்ஸ் அனிமேஷன் கேரக்டர்களை வைத்து பியர் ஸ்டோரிக்கான ஆஸ்கர் விருதை அறிவித்தது ஹைலைட்.
இந்தக் குறும்படத்தை, https://www.youtube.com/watch?v=zc2RKhS4Ix8 இணையத்தில் பார்க்கலாம்.
- வி.எஸ்.சரவணன்.
இன் சைட் அவுட்!

நாம் விரும்பி ரசித்துப் பார்த்த ‘இன் சைட் அவுட்’ படம், இந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. ரைலி எனும் சிறுமியின் மனதில் இருக்கும் மகிழ்ச்சி, சோகம், பயம், வெறுப்பு, கோபம் ஆகிய ஐந்து உணர்வுகளும் உருவம்பெற்று வருவதுதான் கதை.
இந்தப் படத்துக்கான விருதை, டாய் ஸ்டோரி கதாபாத்திரங்களான, ‘ஊடி’ மற்றும் ‘பஸ்’ அனிமேஷன் கேரக்டர்களே அறிவித்தன.