Published:Updated:

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கறுப்பி மற்றும் சிகப்பியின் கதை..!

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கறுப்பி மற்றும் சிகப்பியின் கதை..!
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கறுப்பி மற்றும் சிகப்பியின் கதை..!

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கறுப்பி மற்றும் சிகப்பியின் கதை..!

முறுக்கு. முறுக்கை நொறுக்குவது மிகப்பெரிய வன்முறை. முறுக்கு நொறுங்கும் அந்தச் சத்தம் மாபெரும் மரண ஓலம். அந்த முறுமுறு முறுக்கை பற்களில் போட்டு, அரைத்து கூழாக்கி விழுங்குவது வன்மத்தின் உச்சம். அந்த முறுக்கின் சுவையை சிலாகித்து, ரசித்து சிரிப்பது கொடூரம். ஆம்...உண்மை. ஒவ்வொரு முறை முறுக்குகளைப் பார்க்கும்போது, அந்த முறுக்குகளை யார் சாப்பிடுவதைப் பார்த்தாலும் எனக்குள் இந்த எண்ணங்கள் எழும். அந்த எழவு இடத்திலிருந்து தப்பிப் போக பார்ப்பேன். 

அடர் கறுப்பின் ஆழம் பிடித்துப் போனதால், என் வாழ்க்கையை கறுப்பு சூழ அனுமதித்தேன். என் வாழ்வின் பல கட்டங்கள் கறுப்பால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒவ்வொரு நாளும் அதை மறக்கத்தான் நினைப்பேன். ஆனால், தினம் காலையில் என் கறுப்பு வண்டியின்,கறுப்பு சீட்டில் அந்தக் கறுப்பு பூனையின் நகத்தடங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் கதை எனக்கு ஞாபகத்திற்கு வந்துவிடவே செய்கிறது. என்றோ எங்கோ நடந்த அந்த நிகழ்வின்  ஞாபகம் என் மூளையின் ஏதோ ஓர் மூலையில் முடங்கித்தான் கிடக்கும். ஆனால், எனக்குள் இருக்கும் பலரில் ஒருவன்... அவன் அதை எப்படியாவது தேடிப்போய் அந்த நினைவுப் பெட்டியை எடுத்து வந்து மூளையின் முதல் வரிசையில் வைத்துவிடுவான். அவன்மீது எனக்குக் கோபம்தான். ஆனால், அவனை நான் திட்டவும் முடியாது.  அவன் செய்வதும் நியாயம் தானே! நான் இதுவரை மன்னிப்புக் கேட்காத இரண்டு குற்றங்களில் ஒன்று அது. இனி மன்னிப்பும் கேட்டிட முடியாத இரண்டு குற்றங்கள். அதில் ஒன்றைத்தான் இவன் அவ்வப்போது எனக்கு நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறான்.  

சிகப்பி கதை 1:

கறுப்பியின் அந்தக் கதைக்கு முன், சமீபத்தில் நான் கடந்து வந்த  இரண்டு சிகப்பிகளின் சிரிப்புக் குறித்துச் சொல்ல வேண்டும். இரு வேறு திருப்பங்களில் நிகழ்ந்த திருப்புமுனை சம்பவங்கள் அவை. முன் வருவது ஏது என்று தெரியாத அந்தத் திருப்பத்தில், பின் வருவதைக் கவனியாமல், முன் என்றோ நடந்த சம்பவங்களின் நினைவுகளோடு திரும்பினேன். அவள் அங்கு நின்றுகொண்டிருந்தாள். திடீரென உள்புகுந்தவள் அல்ல. நான்தான் அவளை பயமுறுத்தும்விதமாக திடீரென உள் நுழைந்தேன். என் வண்டியைப் பார்த்த அதிர்ச்சி அவளுக்கு. மரணித்துவிடுவோமா என்ற பயம் தெரிந்ததாகத் தெரியவில்லை. மரணம் என்ற வார்த்தையின் வீரியமும், அர்த்தமும் தெரிந்தவள் அல்ல அவள். சின்னப் பெண். தன் நான்கு கால்களையும் கல்லென ஆக்கி, சிலையென  நின்றாள். என் வண்டியின் நான்கு சக்கரங்களும், கொலை ஆயுதங்களாக தாங்கள் மாறிவிடக் கூடாது என்ற தவிப்பில் பெரும்பாடுபட்டு நின்றன.  

'டமால்...' என்ற சத்தம் பின்னிருந்து கேட்டது. புரிந்தும் விட்டது எனக்கு. பின்னால் வந்திருந்த மோட்டார் சைக்கிள் இடித்துவிட்டு நின்றது. ஹெல்மெட்டைக்கூட கழற்றாமல் வந்தவர், சில கெட்ட வார்த்தை அர்ச்சனைகளை செய்தார். வேறு எந்தச் சமயமாக இருந்திருந்தாலும், அந்த வார்த்தைகளுக்கான பதிலை நான் வேறு விதமாகத்தான் கொடுத்திருப்பேன். ஆனால், அன்று சிகப்பி என்னை அப்படிப் பேச அனுமதிக்கவில்லை. அவள் இன்னும் அங்கிருந்து முழுமையாக நகரவில்லை. இதையெல்லாம் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள், பழைய டிவிஎஸ் 50-யில் பின்னால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த அந்தச் சிறுமி. சிகப்பி அவள் தோழியாக இருக்கலாம். சிகப்பிக்காக நான் வண்டியை நிறுத்தியதையும், எவனோ ஒருவனிடம் நான் அர்ச்சனைகள் வாங்குவதையும் கண்டு ஒரு அழகான சிரிப்போடு எனக்குக் கைகளைக் காட்டினாள் அந்தச் சிறுமி. இன்று பள்ளியில் நிச்சயம் அவளுக்கு சிகப்பியின் கதைதான் ஓடும் என்பதை என்னால் சரியாக கணிக்க முடிந்தது. சிகப்பியையும், அந்தச் சிறுமியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தேன். இவரின் கோபம் தீர்ந்தபாடில்லை. மன்னிப்பும் கேட்டுவிட்டேன். சிகப்பி நகர்ந்ததும்...அவளுக்கு 'டாடா' சொன்னபடி அங்கிருந்து நகர்ந்தேன். அந்தச் சிறுமி பேசினாளோ இல்லையோ...அன்று முழுக்க என்னை சிகப்பியே ஆக்கிரமித்திருந்தாள். 

அன்று மாலை ஒரு மலைப்பாதையில்  போய்க்கொண்டிருந்தேன். ஒரு திருப்பம். திரும்பியதும்...நீண்ட தூரத்திற்கு வளையாத நேரான சாலை. இடது பக்கம் முழுக்க பைன் மரங்கள். தூறல் நின்றிருந்த சமயம். சாலையும், நெடிதுயர்ந்திருந்த அந்த மரங்களும் அந்த இடத்தையே பிரமாண்டமாக்கிக் காட்டின. அந்தப் பிரமாண்ட சாலையின் ஓர் ஓரத்தில் தன் அப்பாவின் கைபிடித்து நடந்துபோய்க் கொண்டிருந்தான் அந்த சிறுவன். அவன் மிகச் சிறியதாக தெரிந்தான். மிகவும் சிறியளவில் அவன் தெரிந்தான். அந்தத் திருப்பத்தில் திரும்பியதும், அந்தப் பிரமாண்டத்தின் நடுவே அவனைப் பார்த்தபோது...அவனை அன்று காலை நான் பார்த்த சிகப்பியாகவே எண்ணினேன். காரணம் தெரியவில்லை. 

சிகப்பி கதை 2:

ஒரு கொடூர கொலை நிகழ்ந்திருந்த கிராமம் அது. இதுவும் ஒரு திருப்பத்தில் நிகழ்ந்ததுதான். வண்டியைத் திருப்பிவிட்டேன். திருப்பத்தில் முதலாக இருந்த அந்த ஓட்டு வீட்டின் திண்ணையில் கையில் தன் சிகப்பியோடு உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் தனக்குள்ளான உலகத்தில் அதிக நேரத்தை செலவிடுபவள். எளிதாக... மனவளர்ச்சிக் குன்றியவள். அவள் கையிலிருந்த சிகப்பி என்ன நினைத்தாளோ தெரியவில்லை... திடீரென, அவளிடமிருந்து குதித்து சாலைக்கு வந்துவிட்டாள். சிகப்பி பதறவில்லை, அவள் பதறிவிட்டாள். அவள் ஒரு நொடி துடித்துப் போய்விட்டாள். கோணிப்போயிருந்த அவள் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. முட்டிக்குக் கீழ் வரை வரும் ஒரு பாவாடையையும், உடலோடு இறுகிப் போயிருந்த சட்டையையும் அணிந்திருந்தாள். கலைந்து போயிருந்த முடி. அவிழ்ந்து போயிருந்த ஜடை. சீரற்ற பல் வரிசை. பிதுங்கி நின்றிருந்த உதடுகள். மிகச் சிறிய காதுகள். மயிரற்ற புருவங்கள். மிக அழகான மூக்கு. குண்டு கண்கள். ஒட்டிப்போயிருந்த கன்னங்கள். பதறி எழுந்து ஓடிவந்தாள். சிகப்பியை எடுத்து அள்ளி அணைத்துக்கொண்டாள். "ங்ங்ஙேஜ்ஜேஜ்ஜாஜூ...." என ஒரு மொழியில் ஏதோ சொன்னாள். சிகப்பியோடு பேசினாள். சிகப்பியைத் திட்டியிருக்கக் கூடும். திட்டியபடியே எடுத்துக் கொஞ்சியிருக்கக் கூடும். அவளின் மொழி எனக்குப் புரியவில்லை. இரும்பு உடலோடு, கண்ணாடிக் கண்களோடு ஆடம்பரத் திமிரோடு அந்த வண்டிக்குள் உட்கார்ந்திருந்த என்னை ஒரே ஒரு நொடி ஆழமான பார்வை பார்த்தாள். அந்த நொடி மட்டுமே தன் உலகிலிருந்து அவள் வெளிவந்திருந்தாள். அந்த நொடி முடியும் தருணத்தில் மீண்டும் தன் உலகிற்குள் அவள் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டாள். 

கறுப்பி கதை:  

இரண்டு நாள்களில் மொத்தமே மூன்று மணி நேர தூக்கம் மட்டுமே கிடைத்திருந்தது. சாலையில் கூட்டம் இருக்கவில்லை. வேகத்தை தவிர இன்றைய நெடுஞ்சாலைகளில் ஏதும் இருப்பதில்லை. மனம் உடன்படாத நிலையில், சூழலின் காரணமாய், உணர்ச்சிகள் அற்று மரக்கட்டையாய் படுத்துக் கிடக்கும் அந்தப் பெண்ணின் மீது,  வழியும் காமத்தை ஊற்றி , ஊன் விளையாடி உறவாடி, ஈரம் முடிந்த நொடி... உறவாடும் அந்த ஒரே உணர்வும் செத்து... பணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நகரும் அந்த 'அவனை'ப் போலவே, நானும் அந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது டோல் கட்டணங்களைச் செலுத்தியபடி அதி வேகத்தில் வண்டியை இயக்கும்போது உணர்வேன். அன்றைய அந்த இரவிலும் அப்படித்தான் உணர்ந்தேன். வண்டி 140-யைத் தொட்டிருந்தது. 

யாரையும், எதையும் மதிக்காத ஒரு திமிர். சாலையைக் கடக்க வேண்டுமா? நீ நில். பைக்கா? ஓரமா போ... நான் போவது கார். 25 பைக்குகளை வாங்கிவிடலாம் இந்தக் காரை வாங்குவதற்கு. ஏசி... பாடல்...வேகம். மொத்தமாக வெளி உலகிலிருந்து அறுபட்டிருந்தேன். 

மிக நெருக்கத்தில்தான் அவளைப் பார்த்தேன். அடர் கறுப்பு. கழுத்தில் சிகப்பு பட்டை. அவளுக்குத் தெரிந்துவிட்டது. அப்படியே உறைந்து நின்றுவிட்டாள். அந்தச் சாம்பல் நிற கண்களின் வழி அத்தனை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தாள். என்ன செய்வதெனத் தெரியவில்லை. நிச்சயம் நிறுத்த முடியாது. வளைந்து செல்லும் வாய்ப்புகளும் இல்லை. ஒரே வழி மட்டும்தான் இருந்தது. நொடிக்கும் குறைவான நேரம் தான். அவளுக்கு அந்தச் சிகப்பு பட்டையை மாட்டிவிட்ட யாரோ ஒருத்தர் அவளுக்காகக் காத்திருக்கக் கூடுமே? அது ஒரு சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கலாம். சிகப்பியே உலகம் என வாழ்ந்த அந்த மன வளர்ச்சிக் குன்றிய அந்தப் பெண் போன்றவளாக இருக்கலாம்... யாராக இருந்தாலும்...யாருடையதாக இருந்தாலும்...இனி கறுப்பி அவர்களுக்குக் கிடையாது. இனி கறுப்பி யாருக்கும் கிடையாது. கறுப்பி சாகப் போகிறாள். நான் அவளைக் கொல்லப்போகிறேன். 

அவளை நேராக மோதி முதலில் சாலையோடு சேர்த்து அழுத்தினேன். தாடையும், பற்களும் நொறுக்கப்பட்டன. ஒன்றரை டன் எடை கொண்டிருந்த அந்த இரும்பு அவளை நசுக்கியது. முறுக்கைப்போல் நொறுக்கியது. அவளின் எலும்புகள் நொறுங்கி தூள்களாகின. தோல் பிதுங்கி உடல் உறுப்புகள் வெளிவந்தன. ரத்தமும், குழைந்துபோன உறுப்புகளும்  சக்கரத்தில் சிக்கி அதை வழவழப்பாக்கியது. சாலையோடு சக்கரத்திற்கு இருந்த பிடிமானம் சற்றுத் தளர்ந்தது. ஆனால், அடுத்தடுத்த வேகச் சுற்றுகளில் சக்கரத்தைப் பிடித்திருந்த சதைத் துண்டுகளும், ஒட்டியிருந்த ரத்தமும் சாலையில் கலந்து கரைந்து போயின. சில நொடிகளில் எந்தச் சலனமும் இல்லாமல் அதே வேகத்தில் வெகு சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. சென்றுகொண்டிருந்தேன். கறுப்பியின் அந்தக் கடைசிப் பார்வையை இன்னும் மறக்க முடியவில்லை. 

சிகப்பிகள் காப்பாற்றப்பட்டார்கள். கறுப்பி கொல்லப்பட்டாள். 

"உலகெங்கும் எதற்காகக் கொல்லப்படுகிறோம் என்பது தெரியாமலே மரித்து மண்ணாய் போகும் பிஞ்சு உயிர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்." 

( தாமதமாகத்தான் 'பரியேறும் பெருமாள்' படத்தின் கறுப்பி பாடலைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் பாடல் ஏற்படுத்திய தாக்கம்தான் இந்தக் கட்டுரை அல்லது கதை.) 

அடுத்த கட்டுரைக்கு