Published:Updated:

கனவு நாயகனுக்கு மரியாதை!

கனவு நாயகனுக்கு மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
கனவு நாயகனுக்கு மரியாதை!

ஜூலை 27 அப்துல் கலாம் நினைவுநாள்

கனவு நாயகனுக்கு மரியாதை!

க்டோபர் 15, 1931-ம் ஆண்டு, ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாமின் முழுப் பெயர், ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். ஆவுல் என்பது அவருடைய கொள்ளுத் தாத்தா பெயர். பக்கீர் என்பது தாத்தாவின் பெயர். பெற்றோர் பெயர், ஜைனுலாபுதீன், ஆஷியம்மா.

• அப்துல் கலாமை விஞ்ஞானியாகத் தூண்டியது, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம் நடத்திய பறவைகள் பறப்பது குறித்த பாடமே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கனவு நாயகனுக்கு மரியாதை!

• டாக்டர் அலெக்ஸிஸ் கேரல் எழுதிய அறியப்படாத மனிதன் (Man, the Unknown), திருக்குறள், புனித குர்ஆன் ஆகியவை அப்துல் கலாமுக்கு பிடித்த நூல்கள்.

• சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள பழைய புத்தகக் கடையில் 1950-களில் தான் வாங்கிய ‘பல விளக்குகளிலிருந்து ஒளி' என்ற நூலை 60 வருடங்களாகப் பாதுகாத்துவந்தார்.

• திருச்சி, ஜோசப் கல்லூரியில் படித்தபோது அசைவ உணவு சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்பதால், சைவ உணவுக்கு மாறினார். அதன்பின், இறுதி வரை சைவ உணவையே சாப்பிட்டுவந்தார்.

கனவு நாயகனுக்கு மரியாதை!

• அப்துல் கலாம் எம்.ஐ.டி-யில் படித்தபோது, ‘நமது விமானத்தை நாமே தயாரிப்பது எப்படி?' என்ற கட்டுரையைத் தமிழில் எழுதிப் பரிசு பெற்றார். எழுத்தாளர் சுஜாதா, இவரின் வகுப்புத் தோழர்.

• பறவைகளின் பிரியர். ஒடிஸாவில், தான் வேலைசெய்த சந்திப்பூர் ஆய்வு மையத்தில், மாநில அரசின் உதவியுடன் ஏழு ஏக்கர் பரப்பளவில் இரண்டு குளங்களை வெட்டி, பறவைகள் சரணாலயமாக மாற்றினார். தும்பா ஆய்வு நிலையத்தில் வேலையில் இருந்தபோது, தினமும் 30 கிலோ கோதுமையை அந்தப் பகுதியில் உள்ள பறவைகளுக்கு உணவாகப் போடுவார்.

• ‘பெரிலியம்' என்ற தாதுப் பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்குத் தர மறுத்தபோது, இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மண்ணில்  ஆய்வுசெய்து, பெரிலியம்  இருப்பதைக் கண்டறிந்தார்

கனவு நாயகனுக்கு மரியாதை!

• நீல நிற ஆடைகளையே விரும்பி அணியும் அப்துல் கலாம், எஸ்.எல்.வி திட்டத்தை ஆரம்பித்த பிறகே, காதுகளை மறைக்கும்படியான நீண்ட கூந்தலை வளர்க்க ஆரம்பித்தார்.

• பொக்ரான் அணுகுண்டுச் சோதனையில் முக்கியப் பங்காற்றியவர். திரிசூல், அக்னி, நாக், பிரித்வி, ஆகாஷ் ஆகிய ஏவுகணைகளின் தயாரிப்புத் திட்டக்குழுவின் தலைவராகவும் இருந்தார். ‘அக்னியின் தந்தை' என அழைக்கப்பட்டார்.

• அக்னி ஏவுகணை ஏவப்படுவதற்கு முந்தைய நாள் இரவு நடந்த கூட்டத்தில், ‘அக்னியின் வெற்றியைக் கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டார் பாதுகாப்புத் துறை அமைச்சர். ‘இந்த வளாகத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளைக் கொடுங்கள்' என்றார் கலாம்.

கனவு நாயகனுக்கு மரியாதை!

• தன் நண்பர் அருண் திவாரியுடன் இணைந்து, தமிழில் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்' சுயசரிதை நூல்,  குறுகிய காலத்தில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது.

• பொது நிகழ்ச்சிகளில் அதிக முறை திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசியவர், அப்துல் கலாம்.

• 40 பல்கலைக்கழகங்களில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற அப்துல் கலாம், வீணை வாசிப்பதில் ஆர்வமுடையவர்.

• பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, இங்கிலாந்து மன்னர்  இரண்டாம் சார்லஸ் பெயரில் வழங்கப்படும் ‘ராயல் சொஸைட்டி விருது' பெற்ற இரண்டாவது வெளிநாட்டவர், அப்துல் கலாம்.

கனவு நாயகனுக்கு மரியாதை!

• ஜூலை 25, 2002-ம் ஆண்டில் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அந்த நிகழ்வுக்கு, தான் வசித்து வந்த ஏஷியாட் கிராமத்தின் தோட்டக்காரரையும் அழைத்திருந்தார்.

• ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட சமயத்தில், முடி அலங்காரம் எப்படி இருக்க வேண்டுமென கம்ப்யூட்டரில் வரைந்து, அப்துல் கலாமிடம் காட்டினார்கள். ‘முடி அலங்காரத்தை மாற்றும் திட்டம் இல்லை' எனச் சொல்லிவிட்டார்.

• ‘நீங்கள் விஞ்ஞானியா, தொழில்நுட்ப அறிஞரா, ஒரு முஸ்லீமா அல்லது இந்தியனா?' என்ற  கேள்விகளுக்கு, ‘முதலில் நான் மனிதன்' என்றார்.

• குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய அரசின் உயரதிகாரிகளுக்கு வழங்கும் விருந்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டுவந்த உடைக் கட்டுப்பாடுகளை நீக்கியவர், அப்துல் கலாம்.

கனவு நாயகனுக்கு மரியாதை!

• குடியரசுத் தலைவராக இருந்தபோது, தன்னுடைய குடும்பத்தினர் டெல்லியில் ஒரு வாரம் தங்கி சுற்றிப்பார்த்த செலவுத் தொகையான மூன்றரை லட்சம் ரூபாயை செக்காகச் செலுத்தினார்.

• மணிக்கு 1,500 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் சுகோய் போர் விமானத்தை ஓட்டிய முதல் குடியரசுத் தலைவர், அப்துல் கலாம்.

• குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளில், 163 இந்திய நகரங்களுக்கும், ஏழு வெளிநாடுகளுக்கும் சென்றவர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. தன் பதவிக்காலம் முடிந்த பின்னரே அங்கு சென்றுவந்தார்.

• தன் காலுறைகளைக் கழற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பணியாளரை, இறுதி வரை அப்துல் கலாம் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை.

கனவு நாயகனுக்கு மரியாதை!

• இந்திய ஜனாதிபதிகளில், அப்துல் கலாம் மட்டுமே எந்த ஓர் இயக்கத்தையும், அரசியல் கட்சியையும் சேராதவர்.

• தன் பதவிக்காலம் முடிந்தபோது, தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் அரசாங்கத்திடமே ஒப்படைத்துவிட்டார்.  உடைமைகள் அடங்கிய இரண்டு சிறிய பெட்டி, சொந்தப் புத்தகங்கள் நிரம்பிய ஒரு பை ஆகியவற்றை மட்டுமே தன்னோடு எடுத்துச் சென்றார்.

• பத்ம பூஷண் (1981), பத்ம விபூஷண் (1990), பாரத் ரத்னா (1997) உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளைப் பெற்ற அப்துல் கலாமின் புகழ் மிக்க வாசகம், ‘கனவு காணுங்கள்'.

• ஜூலை 27, 2015-ம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடம் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, திடீர் உடல்நலக் குறைவால் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிர் இழந்தார். அப்போது, வயது 84.

கனவு நாயகனுக்கு மரியாதை!

• அப்துல் கலாமின் நினைவிடம், ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள ‘பேக்கரும்பு' என்ற இடத்தில் அமைந்துள்ளது. அவர் பிறந்த வீட்டின் முதல் மாடியில், அவருடைய புத்தகங்கள், அவர் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியகம் உள்ளது.

• அப்துல் கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்திய அரசால் சிறப்புத் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. அவரின் பிறந்த தினமான அக்டோபர் 15, மகாராஷ்ட்ராவின் ‘வாசிப்பு நாள்' ஆகவும், தமிழ்நாடு அரசு ‘இளைஞர் எழுச்சி நாள்' ஆகவும் அறிவித்து, செயல்படுத்திவருகிறது.

- மு.கோபி சரபோஜி, அட்டைப் படம்: ஜெ.விக்னேஷ், படம்: உ.பாண்டி ஓவியங்கள்: ஸ்யாம்