Published:Updated:

எனக்கு போட்டி நானேதான் !

Vikatan Correspondent

சச்சின் பாதையில் சுட்டிகள் பயணம் !

எனக்கு போட்டி நானேதான் !

கிரிக்கெட் என்றால் சச்சின். சச்சின் என்றால் சாதனைகள்! தனக்குப் போட்டியாக யாரையும் கருதாமல், தன்னையே தனக்குப் போட்டியாகக்கொண்டு ஒவ்வொரு சாதனையையும் செய்து வரும் சச்சின், சுட்டிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.

உதாரணத்துக்கு... டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் ஐந்து சதமடித்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார் சச்சின். இந்த ஆண்டு ஏழு சதங்கள் அடித்து, தன் சாதனையைத் தானே முறியடித்தார். தன்னைத் தானே வெற்றிகொள்வதன் மூலம் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம். நீங்களும் மற்றவர்களைப் போட்டியாக நினைக்காமல், நீங்கள் முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களைப் போட்டியாக நினைத்து, அதை முந்த முயலுங்கள். அதுதான் உங்களை மேலே மேலே உயரச் செய்யும்.

சச்சினின் சமீபத்திய சாதனை, டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்களை அடித்தது. முன்பு சுனில் கவாஸ்கர் 34 சதங்களை எடுத்தது தான் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை சச்சின் முறியடித்த பிறகு, அவர் அடிக்கும் ஒவ்வொரு சதமுமே ஒரு சாதனைதான். இந்தச் சாதனையை இனிமேல் யாராலும் முறியடிக்க முடியாது என உறுதியாகச் சொல்கிறார் பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.  

##~##

டெஸ்ட் போட்டிகளில் சச்சின் 50 சதங்கள் அடித்ததைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு இந்தியாவின் மிகவும் கௌரவமிக்க விருதான 'பாரத் ரத்னா’ தரப்பட வேண்டும் என இந்தியாவே எதிர்பார்க்கிறது. இந்தக் கருத்துக்குப் பலம் சேர்க்கும் விதமாக விஸ்வநாதன் ஆனந்த், ககன் நரங், விஜயேந்தர் சிங், சாய்னா நெஹ்வால், அஸ்வினி போன்ற விளையாட்டு வீரர்களும், இசைக் குயில்களான ஆஷா போன்ஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோரும் கருத்துத் தெரிவித்து உள்ளனர். லதா மங்கேஷ்கர் இன்னும் ஒரு படி மேலே போய், 'சச்சினே ஒரு பாரத் ரத்னாதான்’ என்றிருக்கிறார். இதைவிட என்ன பெருமை வேண்டும் சச்சினுக்கு!

ஹாய் சுட்டீஸ்..! சச்சினுக்கு பாரத் ரத்னா விருது அளிப்பதற்கு ஆதரவு பெருகி வரும் வேளையில்... அவருக்கு பாரத் ரத்னா விருதைத் தரலாமே என உங்களுக்குத் தோன்றுகிறதா?

அதற்கு வலுவான காரணமாக எதை நீங்கள் சொல்வீர்கள்? அதை அஞ்சல் அட்டையில்  சுருக்கமாக எழுதி உடனே அனுப் புங்கள். சிறந்த காரணங்களை எழுதும் சுட்டிகளுக்குப் பரிசு காத்திருக்கிறது!

உங்கள் முகவரியை செல் போன் எண்ணுடன் தெளிவாக எழுதி அனுப்பவும்.

கடைசித் தேதி: ஜனவரி 12
அனுப்ப வேண்டிய முகவரி:
சச்சின் சாதனைகள்,
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.