ஸ்பெஷல்
Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே..

சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் சூர்யா !ஒருங்கிணைப்பு: நா.கதிர்வேலன், கே.ஜெயராமன், ந.ஓவியா எம்.உசேன், என்.விவேக் கே.கணேசன் முத்து

##~##

கதை கேக்கறதுன்னா நம்ம எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரிதானே? நம்ம வீட்டுல இருக்கிற தாத்தா, பாட்டி, மாமா, மாமி, அப்பா, அம்மா இவங்க கதை சொல்லித்தானே கேட்டு இருப்போம். கொஞ்சம் ஸ்பெஷலா இப்ப நமக்கு கதை சொல்ல வரப்போறது யாரு தெரியுமா? சூர்யா அங்கிள்!

சூர்யா அங்கிளிடம் சொன்னா, ''என்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுங்க...''ன்னார். சூர்யா அங்கிள் சொன்ன நேரத்துக்கு அவர் வீட்டுக்கு சுட்டிங்களோட போனோம். எங்களை எல்லாம் பார்த்ததும் உடனே வாசலுக்கே ஓடி வந்து உள்ளே கூட்டிட்டுப் போனார் சூர்யா அங்கிள். சுட்டீஸ்லாம் ''ஹே... சூர்யா அங்கிள்...''னு சத்தம் போட்டு, சுத்தி ரவுண்டா நின்னுட்டாங்க. அப்புறம் தியா சுட்டியோட ஸ்டடி ரூமுக்குள் போனோம்.

எல்லோரையும் உட்காரச் சொன்ன சூர்யா அங்கிள், ''முதல்ல ஸ்வீட்... அப்புறம் ஸ்டோரி''ன்னு சொல்லி, தட்டு நிறைய சாக்லேடுகளைக் கொண்டுவந்து கொடுத்தார்.  

ஒரே ஒரு ஊரிலே..

சாக்லேட்டை வாயில் போட்டுக்கிட்டே, ''சூர்யா அங்கிள், நீங்க சின்ன வயசுல யாருகிட்ட என்ன கதை கேப்பீங்க?''ன்னு கேட்டான் ஆகாஷ்ங்கிற சுட்டி.

'சின்ன வயசுல கதை கேட்காம தூங்கவே மாட்டேன். அப்போ எல்லாம் நான்... சிவன், பார்வதி, பிள்ளையார் மாதிரி கடவுள் கதைகளைக் கேட்பேன். அப்பா நெறையக் கதை சொல்வார். எனக்கு நெறையக் கதைகள் தெரியும். உங்களுக்கு என்ன கதை வேணும்''னு கேட்டார் சூர்யா.

'நீங்களே ஒரு கதை சொல்லுங்க’ன்னு சுட்டீஸ் சொன்னதும், கதை சொல்ல ஆரம்பிச்சார் சூர்யா அங்கிள்.

ஒரு ஊருல... ஒரு அழகான தாமரைக் குளம் இருந்துச்சு. அதுல நிறையத் தவளைகள் இருந்துச்சு. அந்தக் குளத்தோட கரையில ஒரு எறும்புப் புத்து இருந்துச்சு.

அதுல இருந்த ஒரு குட்டி எறும்புக்கு எப்போதுமே ஒரு ஏக்கம். ஒரு நாளு அந்தக் குட்டி எறும்பு தன் அம்மாகிட்ட சொல்லிச்சு... 'அம்மா, அம்மா... இந்தத் தவளைங்க எல்லாம் நம்மளவிட சந்தோஷமா இருக்குதுல்ல..?''

ஒரே ஒரு ஊரிலே..

''ஏன்டா குட்டி அப்படிச் சொல்றே?''ன்னு குட்டி எறும்போட தலையைத் தடவிவிட்டுக்கிட்டே அம்மா எறும்பு கேட்டுச்சு.

குட்டி எறும்பு சொல்லுச்சு, ''தவளைங் களுக்குத் தண்ணிக்கு உள்ளாறயும் சாப்பாடு கிடைக்குது, தரையிலயும் சாப்பாடு கிடைக்குது. ஆனா, நமக்கு தரையில மட்டும்தான் சாப்பாடு கிடைக்குது...''னுது குட்டி.

''அப்படியாடா குட்டி?''னு கேட்டுச்சு அம்மா.

''ஆமாம்மா. அப்புறம்... தவளைங்க ராத்திரி ஆச்சுன்னா, பாட்டு பாடி எவ்வளவு சந்தோசமா இருக்குதுங்க. நாம அப்படியா இருக்குறோம்?''

ஒரே ஒரு ஊரிலே..

''இதுதான் உன் கவலையா?''ன்னு கேட்டுட்டு குட்டி எறும்புக்குப் பதில் சொல்ல ஆரம்பிச்சது அம்மா எறும்பு.

''நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வாழ்க்கையை இயற்கை நமக்கு கொடுத்திருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி நாம ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க வாழ்க்கையை அழகா வாழ்ந்தாப் போதும்''னுச்சு அம்மா எறும்பு.

''உங்களுக்கு மேத்ஸ் புரியலைன்னா அம்மாகிட்ட போயி 'அம்மா... அம்மா எனக்கு இந்த சம் புரியவே மாட்டேங்குதுமா...’ன்னு சொல்வீங்களே... அது மாதிரி 'போம்மா, நீ பேசுறது ஒண்ணும் புரியலை’ன்னு அந்தக் குட்டி எறும்பு சொல்லுச்சு.''

ஒரே ஒரு ஊரிலே..

''அப்புறம் கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாளு பகல்ல... குட்டி எறும்பு தன்னோட அம்மா எறும்போட குளக் கரையில அவங்களுக்குச் சாப்பாடு தேடிக்கிட்டு இருந்துச்சு. அப்போ, குளத்துல தாமரைப்பூ இருக்கு இல்லையா...''’

''ஹைய்யா... நான் தாமரைப்பூ பார்த்துருக்கேனே''ன்னு ஒரு சுட்டி ஜாலியா எம்பிக் குதிச்சா. அவளை அப்படியே கையைப் புடிச்சு இழுத்து தன்னோட மடியிலே உட்கார வெச்ச சூர்யா அங்கிள், கதையைச் சொன்னாரு.

''அந்தத் தாமரைப்பூ இலை மேல ஒரு தவளை உட்கார்ந்து இருந்துச்சு. அந்த நேரத்துல எங்க இருந்தோ பறந்து வந்த கழுகு ஒண்ணு, ’டக்’குனு அந்தத் தவளையைக் கொத்திக்கிட்டுப் பறந்துருச்சு.''

ஒரே ஒரு ஊரிலே..

''ஐயையோ... அங்கிள்... அப்புறம் என்னாச்சு அங்கிள்?''னு பதறிக் கேட்டான் ஒரு சுட்டி.

''ம்ம்... கழுகு தவளையைக் கொத்திட்டுப் போச்சா... அதைப் பார்த்த நம்ம குட்டி எறும்பு ரொம்பப் பயந்துடுச்சு. 'தண்ணிக்குள்ளே நம்மளோட சாப்பாட்டைத் தேடுறதுல இப்படி ஒரு ஆபத்து இருக்கா?’ன்னு யோசிச்சது அந்தக் குட்டி எறும்பு. அன்னிக்கு ராத்திரி அந்தக் குட்டி எறும்புக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்துச்சு.

ஒரு தவளை, குளக்கரையில உட்கார்ந்து பாடிக்கிட்டு இருந்துச்சு. அந்தச் சத்தத்தைக் கேட்ட பாம்பு ஒண்ணு மெள்ள ஊர்ந்து வந்து, அந்தத் தவளையை அப்படியே விழுங்கிடுச்சு. இதைப் பார்த்த அந்தக் குட்டி எறும்பால எதுவுமே பேச முடியலை.''னு சூர்யா நிறுத்தவும்...

எல்லாச் சுட்டிகளும் அவரையே உத்துப் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ சூர்யா அங்கிள், ''வர்ஷா நீ சொல்லு, பாம்பு தவளையை என்ன பண்ணிச்சு?''ன்னு கேட்டார்.

ஜாலியாக் கதை கேட்டுட்டு இருந்த வர்ஷா, ''தவளை, பாம்பை முழுங்கிடுச்சு''ன்னு சொன்னா. டக்குனு நாக்கைக் கடிச்சிட்டு ''ஐய... இல்லை... இல்லை... பாம்பு தவளையை முழுங்கிடுச்சு''ன்னா.

''குட்... கதையை ஒழுங்காக் கேட்டால்தான் நான் மொத்தக் கதையும் சொல்வேன்''னார் அங்கிள்.  சுட்டீஸ் எல்லாம் 'சரி’ன்னு தலையாட்டினாங்க. அப்புறம், ''கதையை எங்கே விட்டேன்?''ன்னு கேட்டார்.  

நேஹா, ''பாம்பு தவளையை முழுங்கிடுச்சு''ன்னு சொன்னாள்.  

ஒரே ஒரு ஊரிலே..

''ஆ... ஆமாம்... அப்புறம் 'ஆஹா... தண்ணியிலே மட்டுமில்லேடா தரையிலகூட தவளைக்கு ஆபத்து இருக்குதே! நமக்கோ தரையில மட்டும்தானே பிரச்னை. தவளைகள் பாடுறதைப் பார்த்து, நமக்குப் பாட முடியலையேன்னு வருத்தப்பட்டோமே... அது என்ன பாட்டா? உயிருக்கு உலை வைக்கிற வேட்டா? அம்மாடி... வேண்டாம்டா இந்தப் பொழைப்பைக் கெடுக்குற நெனைப்பு’ன்னு வடிவேலு அங்கிள் ஸ்டைலில் சொல்லிட்டு, அந்தக் குட்டி எறும்பு ஓடிப்போய் தன் அம்மாவைக் கட்டிக்கிச்சு.

அம்மா எறும்பு குட்டி எறும்பைத் தூக்கி தன் மடியில வெச்சுக்கிட்டு முத்தம் கொடுத்துச்சு''ன்னு சொல்லிட்டு கதையை முடிச்சார் சூர்யா அங்கிள்.

ஒரு கதை கேட்டுட்டுப் போலாம்னு வந்த சுட்டீஸ்க்கு சூர்யா அங்கிள்  சூப்பரா மூணு கதைகள் சொன்னாரு. சுட்டீஸ்க்கு செம சந்தோஷம். ஸ்கூலுக்குப் போயிட்டதால், தியாவைப் பார்க்க முடியலை. சுட்டீஸ்க்கு அதுதான் கொஞ்சம் வருத்தம். ''இன்னொரு தடவை வாங்க... அப்ப பார்த்துக்கலாம்''ன்னு சொல்லி சுட்டீஸ்களுக்கு டாட்டா காட்டினார் சூர்யா அங்கிள். சுட்டீஸும் டாட்டா காமிச்சிட்டு ஜாலியாக் கிளம்பினாங்க அவங்க அவங்க வீட்டுக்கு !