ஸ்பெஷல்
Published:Updated:

உயிர்த் தமிழ் பயிர் செய்வோம்

உயிர்த் தமிழ் பயிர் செய்வோம்

வணக்கம் நண்பர்களே...

உங்களுடன் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து இருக்கும் தோழன்... மாலையில் வழக்கம்போல் கையசைத்துவிட்டுச் செல்கிறான். மறுநாள் காலை பள்ளிக்கு நீங்கள் செல்கிறீர்கள். அந்த நண்பன் உள்ளே நுழைகிறான். அவன் தோற்றமே மாறி இருக்கிறது. பளிச் என மின்னும் புத்தம் புதிய சீருடை, புத்தகப் பை, சாப்பாட்டுப் பை எல்லாமும் மாறி இருக்கின்றன. புத்தகப் பையைத் திறந்தால், உள்ளே இருக்கும் ஜியாமெட்ரி பாக்ஸ் புதுசு... அதைத் திறந்தால், உள்ளே இருக்கும் பேனா, பென்சில், ரப்பர் எல்லாம் புதுசு. சாப்பாட்டுப் பையைத் திறந்தால், உள்ளே இருக்கும் டிபன் பாக்ஸ் புதுசு... அதைத் திறந்தால், அதில் இருக்கும் உணவும் புதுசு!

எப்படி இருக்கும் உங்களுக்கு?  

##~##

''என்னடா திடீர்னு ஆளே மாறிட்டே?'' என்று வியப்பீர்கள்.

அப்படித்தான் புது அவதாரம் எடுத்து இருக்கிறான் இப்போது உங்கள் கைகளில் தவழும் சுட்டி விகடன். இந்தச் சுட்டி விகடனில் இருக்கும் விஷயங்கள் புதுசு... அதை சொல்லும் வார்த்தைகளும் புதுசு!

'உங்கள் சுட்டி வளர்ந்தாச்சு டோய்’னு சொல்றீங்களே... வளர்ந்துட்டா எப்படிச் சுட்டி ஆவான்?’ என்று கேள்வி வருகிறதா? நியாயம்தான். வளர்ச்சி என்றால் உடலால் வளர்வது மட்டும் இல்லை. அறிவால் வளர்வது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகில் நொடிக்கு நொடி மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைச் சுட்டி விகடன் உங்களுக்கு உடனுக்குடன் தருவான். அது உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சாதனையாகவும் இருக்கும்... உள்ளூரில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் ஒரு சுட்டியின் மகா திறமையாகவும் இருக்கும். சந்தைக்கு வந்திருக்கும் புதிய ஆடைகளையும் கொடுப்பான்... காலப்போக்கில் மறைந்துபோன விளையாட்டுகளையும் திரும்பக்கொண்டு வருவான். வி.ஐ.பி-களை உங்களுடன் சந்திக்க வைப்பான். ஒரு கிராமத்தில் இருக்கும் சுட்டியை வி.ஐ.பி-யாக உயர்த்துவான். கலகலப்பான படக்கதைகளைத் தருவான்... பள்ளிகளுக்கு வந்து கலக்கலான நிகழ்ச்சிகளையும் நடத்தி அசத்துவான். அதேசமயம், சுட்டி விகடனுக்கே உரிய சிறப்பான 'க்ரியேஷன்ஸ்’, 'மாயா டீச்சர்’, 'மை டியர் ஜீபா’ பகுதிகளும் வழக்கம்போல தொடர்கின்றன. ஆனால், அவையும் ஆரம்பத்தில் சொன்ன பள்ளி நண்பன் மாதிரி ஆளே மாறி இருக்கின்றன. எல்லாவற்றையும் படியுங்கள். உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்.

வாருங்கள், நண்பர்களே... உயிர்த் தமிழில் பயிர் செய்வோம்!

- ஆசிரியர்