ஸ்பெஷல்
Published:Updated:

அணில் தவ்வு

யுவா பொன்.காசிராஜன்

##~##

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஆரம்பித்து, உள்ளூரில் நடக்கும் அத்லடிக் போட்டி வரை எல்லாவற்றிலும் தவறாமல் இருக்கிற விளையாட்டு ஹைஜம்ப். இதில் ரன்னிங் ஹைஜம்ப், ஸ்டேண்டிங் ஹைஜம்ப் என்று இரு பிரிவுகள் இருக்கு. விக்கிபீடியாவில் போய் பார்த்தால், 100 வருட ஹைஜம்ப் ரிக்கார்ட் தகவல்களாகக் கொட்டும். ஆனால், இது எல்லாத்தையும் மிஞ்சும் வகையில் கிராமங்களில் காலங்காலமாக சுட்டிகள் இந்த விளையாட்டை விளையாடிட்டு இருக்காங்க.

அப்பா, தந்தை, தகப்பன், அய்யா... இப்படிக் கூப்பிடும் சொற்கள் வேறுபட்டாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான். அப்படித்தான் இந்த விளையாட்டும். ஊருக்கு ஊரு... மாவட்டத்துக்கு மாவட்டம் இதன் பெயர் மாறும். பச்சைக் குதிரை, கால்தாண்டி எனப் பல பெயர்கள். தேனி மாவட்டத்தில் இதை 'அணில் தவ்வு’ என்ற அழகான வார்த்தையில் சொல்வாங்க. அணில் மாதிரி தாவி விளையாடுவதால் அப்படி ஒரு பெயர்.

இந்த விளையாட்டுக்குச் சுட்டிகளின் எண்ணிக்கை இத்தனைதான் என்று கணக்கு கிடையாது. எத்தனைப் பேர் வந்தாலும் இடம் உண்டு. மைதானம் தேடி கவலைப்பட வேண்டாம். ஆற்றங்கரை ஓரம், ஆல மரத்தடி, அட... அதுவும் இல்லைன்னா, ஒரு தெரு போதும். பிள்ளைகளின் எண்ணிக்கை கூடக்கூட தாவுறவங்களுக்குக் கொண்டாட்டம்... தடுப்புக் கட்டைக்குத் திண்டாட்டம். பின்னே... தடுப்புக் கட்டையே சக சிறுவன்தானே!

அணில் தவ்வு

கூட்டத்தில் ஒருவனை சாட் பூட் த்ரீ போட்டுத் தேர்ந்தெடுத்து, அந்த சிறுவனை குனிஞ்சு நிக்கவெச்சு, மத்தவங்க அவன் முதுகின் மேலே தங்கள் கைகளை ஊன்றி, இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்துக்கு கால்படாமத் தாவணும். இதுதான் ஆட்டம். குனிஞ்சு நிற்கும் சிறுவனின் உடலில் எந்த இடத்திலும் தாவும் சிறுவனின் கால் பட்டுவிடக் கூடாது. அப்படி பட்டுடுச்சுன்னா அவன் அவுட். அதனால், கால் படாமல் இருக்க வானத்துக்கும் பூமிக்குமாகத் தாண்டணும்.

கொஞ்சம் கொஞ்சமாக உயரம் கூடிட்டே போகும். கை விரல்களின் நுனியால் கால் விரல்களைத் தொட்டு குனிஞ் சுட்டு இருக்கிற பையன், தடுப்பை உயர்த்துவான். அதாவது கரண்டைக்காலு, கால் மூட்டு, இடுப்பு என கொஞ்சம் கொஞ்சமாக நிமிருவான். கிரிக்கெட்டில் வரிசையாக விழுகிற விக்கெட் மாதிரி, தாவுகிறவங்க எண்ணிக்கை குறைஞ்சுட்டே போகும். கடைசியாக தலையை மட்டும் வணங்கி, சாமி கும்பிடற மாதிரி நிற்பான். அதையும் தாண்டுவாங்க சில சூப்பர்மேன் பசங்க. அவங்கதான் அந்தக் கிராமத்து மன்னாதி மன்னன்கள்... வில்லாதி வில்லன்கள்.

அணில் தவ்வு

எல்லா விளையாட்டுக்களைப் போல இங்கேயும் நடக்கும் கலாட்டா. 'அவுட்டு’னு அலறுவான் தடுப்புக் கட்டைச் சிறுவன். 'கால் படலை’ என்று கத்துவான் ஜம்ப்பிங் ஜாம்ப வான். டிவி ரீப்ளே எல்லாம் கிடையாது. அதனால், அவங்களே சமாதானமாக ஒரு முடிவுக்கு வந்தால்தான் ஆட்டம் தொடரும். இல்லைன்னா அந்தரத்தில் நின்னுடும்.

இந்த விளையாட்டால் உடம்பு வில்லு மாதிரி வளையும். சொன்ன சொல்லைக் கேட்கும். விளையாடி முடிச்சு வீட்டுக்குப் போய் படுத்தால், தூக்கம் கண்ணைச் சொக்கும்.

       (அடுத்த ஆட்டம்?)