Published:Updated:

சூப்பர் பைக்ஸ்

சார்லஸ் கே.கார்த்திகேயன், வி.நாகமணி அனாஸ், இர்ஃபான், நவ்யா

பிரீமியம் ஸ்டோரி
##~##

லீவு விட்டால்... சைக்கிள் ஓட்டும் காலம் மலையேறிப் போச்சு. 'விர்ர்ர்ரூம்’ என மினி பைக்குகளில் தெருவை அதிரவைப்பதுதான் சுட்டிகளின் லேட்டஸ்ட் விளையாட்டு!

சூப்பர் பைக்ஸ்

எல்லா ஊர்களிலும் இப்போது விற்பனைக்குக் கிடைக் கிறது... மினி சூப்பர் பைக்ஸ். யமஹா ஆர்-1, ஹோண்டா சிபிஆர், சுசூகி ஹயபூஸா எனத் தோற்றத்தில் 1000 சிசி சூப்பர் பைக்குகள்போல் தோன்றும் இவற்றின் பவர் குறைவுதான். அதனால், ஓட்டிப் பழகப் பாதுகாப்பானது.

''மொபைலோ, பைக்கோ குட்டியாக இருந்தால் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால், இந்த மாதிரி சின்ன பைக்ஸை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்றாங்க. நம்ம ஊர் மெக்கானிக்ஸும் இதில் 30-40சிசி இன்ஜின்களைப் பொருத்தி,  சுட்டிகளுக்கு ஏத்தமாதிரி செஞ்சு கொடுக்கிறாங்க’' என்கிறார் சுட்டி பைக் ஸ்பெஷலிஸ்ட் அமீன்.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளைப் போலவே காட்சி அளிக்கும் இவற்றின் உயரம் 2 அடிக்கும் குறைவு. 2 ஸ்ட்ரோக் இன்ஜினில் கியர் இல்லாமலும் 4 ஸ்ட்ரோக் இன்ஜினில் கியருடனும்  கிடைக்கிறது. 6 முதல் 12 வயது வரையுள்ள சிறுவர்கள் வசதியாக ஓட்ட முடியும். 50 சிசி-க்கும் குறைவான இன்ஜின் என்பதால்... ரெஜிஸ்ட்ரேஷன், இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் எதுவும் கிடையாது. ஆனால், பொதுச் சாலைகளில் ஓட்டக் கூடாது. வீடு அல்லது தனியார் இடங்களில்தான் ஓட்ட வேண்டும்.

சூப்பர் பைக்ஸ்

''பெரிய பைக் அளவுக்கு இதில் நிறைய வசதிகள் வந்துவிட்டன. இந்த பைக்குகளில் கிளட்ச் பிடிக்காமலேயே கியரை மாற்றும் தொழில்நுட்பம் உள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இருப்பதால், பாதுகாப்புப் பிரச்னை இல்லை. பைக்கின் வேகத்தை 20 அல்லது 30 கிலோ மீட்டருக்குள் செட் பண்ணலாம். அதனால், அதிக  வேகமாக ஓட்டுவாங்களோ என்ற பயம் வேண்டாம். லிட்டருக்கு 60 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும்'’ என்கிறார் அமீன்.

சூப்பர் பைக்ஸ்

''என் அப்பா பைக் ரேஸர். அதனால், எனக்கும் பைக் ஓட்டும் ஆசை வந்துடுச்சு. இந்த பைக்கில் ரெண்டு பக்கமும் எக்ஸ்ட்ரா வீல் இருக்கு. அதனால், பாதுகாப்பா  ஓட்டுறேன். நானும் ஒருநாள் எங்க அப்பாவோடு பைக் ரேஸ் போய் கலக்குவேன்'' என்கிறார் நவ்யா. இவர் தேசிய பைக் ரேஸ் சாம்பியன் ரஜினியின் மகள்.

சூப்பர் பைக்ஸ்

''இந்த பைக் வந்ததில் இருந்து எங்க தெருவோட சூப்பர் ஸ்டார் நான்தான். எல்லோரும் ரவுண்டு போகக் கேட்பாங்க. பக்கத்துல இருக்கிற கிரவுண்டில் தினமும் அரை மணி நேரமாவது ஓட்டுவேன். பெட்ரோல் விலைதான் ஏறிட்டே போகுது'' என்று கவலைப்படும் இர்பான், ஐந்து வருடங்களாக ரவுண்டு அடிக்கிறார்.

10,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை இந்த பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சர்வீஸைப் பொருத்தவரை பெரிய டெக்னாலஜி எதுவும் இல்லை என்பதால், உள்ளூர் மெக்கானிக்குகளிடமே சர்வீஸ் செய்துகொள்ளலாம். அடுத்த 'வாலண்டினோ ராஸி'யைத் தமிழகத்தில் இருந்தும் எதிர்பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு