ஸ்பெஷல்
Published:Updated:

மானிட்டர் மைதானம்

ந.வினோத்குமார்படங்கள் : எம்.உசேன்

##~##

'வீடியோ கேம்ஸ்..!’ என்று சொன்னவுடன் உற்சாகக் கூச்சல் நிச்சயம் கேட்கும். இன்றைய தினத்தில் டாப் டென் வீடியோ கேம்ஸ் எவை?

கிராண்ட் மாஸ்டர்: உடலுக்கு யோகாபோல் மூளைக்கு கிராண்ட் மாஸ்டர். அரை மணி நேரம் விளையாடினாலே மூளை நரம்புகளின் நியூரான்கள் முறுக்கேறும். செஸில் நீங்கள் ஆரம்ப ஆட்டக்காரரோ, கில்லாடியோ உங்களின் லெவலுக்கு வந்து விளையாடும். விதிகளுக்குப் புறம்பாக காய் நகர்த்தினால்...'பாங்’ என்ற சத்தம் ஒலித்து எச்சரிக்கும். செஸ்ஸில் கிராண்ட் மாஸ்டர் ஆக இந்தப் பயிற்சி நிச்சயம் உதவும்.

டிராகன் ஏஜ் ஆரிஜின்ஸ்: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, டிராகன்ஸ் எல்லாம் இருந்த காலம் என்று கற்பனையாக ஒரு காலத்தை உருவாக்கி... அதில் ஒரு நாட்டையும் நிர்மாணித்து ஆட்டத்துக்கான களத்தை அமைத்து இருக்கிறார்கள். அந்நிய தேசம் ஒன்றுக்கு அகதியாகப் போகும் ஒருவன், டிராகன்களிடம் இருந்து அந்தத் தேசத்தையும் மக்களையும் மீட்பதே விளையாட்டு. இந்த டிராகன்களை வீழ்த்தும் வீரன் நீங்கள்தான். உங்கள் தோற்றம், நிறம், நண்பர்கள்... எல்லாவற்றையும் நீங்களே தேர்வுசெய்து ஆடலாம்.

மானிட்டர் மைதானம்

கமாண்டோஸ்: இரண்டாம் உலகப் போரில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு. போரின்போது எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட பிரிட்டிஷ் கமாண்டோக்கள் தப்பிப்பதே ஆட்டம். இந்த விளையாட்டில்... ஏழு முக்கிய கேரக்டர்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரிடமும் அசாத்தியத் திறமை ஒன்று இருக்கிறது. அதை வைத்து எப்படி எல்லாம் எதிரிகளை வீழ்த்துகிறார்கள் என்பதுதான் பரபரப்பு.

கிரிக்கெட் கேப்டன்: கிரிக்கெட் பிரியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. நிஜ கிரிக்கெட்டின் அதே விதிகள். ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வோர் ஆட்டக்காரருக்கும் தனித்தனியாக ஸ்கோர் பக்கங்கள் இருக்கும். டீம்களைத் தேர்வுசெய்துகொண்டு உங்கள் திறமையைக் காட்டலாம். தற்சமயம், 'இன்டர்நேஷனல் கிரிக்கெட் சாம்பியன் 2011’ கடைகளில் ஹிட்.

மானிட்டர் மைதானம்

ஹாரி பாட்டர்: ஜே.கே.ரௌலிங் உருவாக்கிய இந்த நாயகனின் சாகஸங்களைப் படித்தது, பார்த்ததோடு மட்டும் அல்லாமல், அந்தக் கதைகளில் நாமும் பங்கேற்று விளையாடினால், அந்த சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்?

நீட் ஃபார் ஸ்பீடு: கார் ரேஸ், பிரியர்களுக்கான கேம். ஒவ்வொரு போட்டி தொடங்குவதற்கு முன்னும்... என்ன வகையான கார், போகும் தடங்கள் எனச் சகலத்தையும் முடிவுசெய்துகொள்ளலாம். தனி நபராகவும் விளையாடலாம். நண்பர்களுடன் 'லான்’ இணைப்பில் இணைந்தும் விளையாடலாம். போலீஸ் கார்கள் உங்கள் காரைப் பின்தொடர்ந்து வந்து தாக்க முயற்சிக்கும் த்ரில்லிங்கும் இந்த கேமில் உண்டு.

ஃபிஃபா ஸாக்கர்: கால்பந்தாட்டத்துக்குத் தீவிர ரசிகர்கள் உடைய நாடுகளில் ஃபிஃபா ஸாக்கர் கேம் சக்கைப் போடு போடுகிறது. மைதானக் கால்பந்து விளையாட்டில் உள்ள அதே விதிகளுடன் விளையாட வேண்டும். டீமைத் தேர்வுசெய்துவிட்டு, கணினியில் செட் செய்து இருக்கும் டீமுடன் விளையாடுவது நிறைய சுவாரஸ்யம், கொஞ்சம் சிரமம். உங்கள் டீமில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் பந்தை பாஸ் செய்து, எதிர் அணியிடம் இருந்து தடுத்து, கோல் போடுவது அட்டகாசம்.

ஷெர்லாக் ஹோம்ஸ்: புத்தகம், டி.வி. சீரியல், ஹாலிவுட் சினிமாவாகவும் வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்திய துப்பறியும் கேரக்டர். 2002 முதல் பெர்சனல் கம்ப்யூட்டரில் விளையாடக் கூடிய கேமாகவும் வருகிறது. இப்போது வரை ஐந்து பகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த விளையாட்டில்... நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகவோ, அவரின் நண்பர் வாட்ஸன் ஆகவோ விளையாடலாம். ஒவ்வொரு லெவலிலும் புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து ஸ்கோர் செய்ய வேண்டும். மூளைக்கு வேலை கொடுக்கும் விஷயமாக இருப்பதால், இது 'சிறந்த சாகச வீடியோ கேம்-2007’ விருதை வென்றது.

பேட்மேன்: அடிதடி ஆக்ஷன்களுக்குப் பஞ்சமே இல்லை. எங்கு எல்லாம் குற்றவாளிகள் தங்களின் கைவரிசையைக் காட்டுகிறார்களோ... அங்கே, தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்துவார் பேட்மேன். ஆல் டைம் ஃபேவரைட் கேம்களில் இதுவும் ஒன்று.

ஸ்டார் வார்ஸ்: திரைப்படமாக வந்தபோது கிடைத்த அதே வெற்றி, வீடியோ கேமாக வந்தபோதும் தொடர்கிறது. இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஸ்டார் வார்ஸ் கேம்கள் வந்திருக்கின்றன. திரைப்படத்தில் வருகின்ற அதே காட்சிகள், இதில் கேமாக மாற்றப்படுகின்றன. இரண்டு பேர் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம். புதிர்களை விடுவிப்பது, ஸ்பேஸ் கிராஃப்ட்களை இயக்குவது, எதிரிகளுடன் சண்டையிடுவது என இந்த விளையாட்டில் சுவாரஸ்யங்கள் நிறைய.

வீடியோ கேம்ஸ் தவிர, ப்ளே ஸ்டேஷன் வடிவத்திலும் இருக்கின்றன. விளையாட்டாக இருந்தாலும்கூட, மனதுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்க வேண்டும். ஆகவே, நல்லதைத் தேர்வுசெய்து ஆடலாம்... கொண்டாடலாம்!