ஸ்பெஷல்
Published:Updated:

எங்கெங்கு காணினும் பாரதியடா !

கே.கணேசன்எஸ்.சாய்தர்மராஜ்ஹரன்

##~##

'பள்ளி நாட்களின் கலகலப்புகளில் மாறுவேடப் போட்டிகள் மறக்க முடியாதவை.

இந்த இதழில்: மகாகவி சுப்ரமண்ய பாரதி.

ஓவர் டு கலைவாணி வித்யாலயா.

பிரேயருக்கு சற்று நேரம் முன்பு, முதல் பாரதியார் டூவீலரில் வந்து இறங்கினார். முண்டாசு ஆட, அப்பாவுக்கு டாட்டா சொன்ன பாரதியார், அஞ்சாவது படிக்கிறாராம். 'கவிதை எழுதுவீங்களா?’னு கேட்டதுக்கு 'வர்ரும்...ஆனா வராது’ ரேஞ்சுக்கு மையமாகத் தலையை ஆட்டிவிட்டு, எஸ்கேப் ஆனார்.

அடுத்து வந்த பாரதியார் கையில் க்ளைமேட்டுக்கு ஏற்ப  குடை.

இன்னொரு பாரதியார், தன் செல்ல அம்மாவைப் பிரிய மறுத்து, பள்ளிக்குள் நுழைவேனா என்று அடம்பிடித்தார். காணி நிலத்துக்குப் பதில், கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட் கிடைக்க, அப்புறம்தான் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

எங்கெங்கு காணினும் பாரதியடா !

இன்னொரு பாரதியாரோ... அவசரத்தில் மீசை இல்லாமல் ஆஜர் ஆனார். அதனால் என்ன? மீசை இல்லாத குட்டி பாரதியும் அழகுதான்!

பிரேயருக்கு நேரம் நெருங்க நெருங்க நடமாடும் பாரதியார் முதல் சைக்கிள், பைக், பஸ், வேன், கார் என எல்லாவிதமான வாகனங்களிலும் பாரதியார்கள் பள்ளியில் வந்து குவிந்தார்கள். கறுப்பு கோட்களும் வெள்ளை முண்டாசுகளுமாக 'எங்கெங்கு காணினும் பாரதியடா’ என்று நம் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு.

பிரேயரில் ஒரு சுட்டி பாரதியார், தாயின் மணிக்கொடியை ஏற்றிவைக்க, மற்ற பாரதிகள், 'வந்தே மாதரம்!’ என முழங்க, பள்ளிக்கூடமே பாரதி விலாஸ் ஆனது.

பாரதியாரைப் போல ஒரு கவிஞன் கிடைப்பாரா என்று தமிழகம் தவமிருக்க, மொத்தமாக நூறு பாரதிகள் கூடி, கலகலப்புக் கூட்டினார்கள்.

எங்கெங்கு காணினும் பாரதியடா !

சில பாரதியார்கள், வீட்டில் இருந்து பாதி மேக்கப்பில் வந்து, பள்ளியில் டச்-அப் செய்து கொண்டு தயாரானார்கள். சுட்டிகளின் அம்மாக்கள்தான் 'மேக்கப் உமன்’கள். கண்ணுக்கு இடும் மையை வைத்து மீசை, புருவம் எனத் தீட்டி, தங்கள் சுட்டிகளை அந்த மகாக் கவிஞனின் உருவத்தில் ஆசை தீரப் பார்த்து மகிழ்ந்தார்கள்.

எல்லாக் கலைகளையும் கற்றுக்கொள்ளச் சொன்னவர் பாரதியார். சுட்டி பாரதிகளோ கணினியை இயக்கிக் கலக்கினார்கள். இணையத்தில் தமிழ் வாழும் நிலையை இப்போது பாரதி பார்த்து இருந்தால், 'மெல்லத் தமிழினி வாழும்’ என்று தன் பாட்டை ரீ-மிக்ஸ் செய்து இருப்பார்.

இன்னொரு செட் பாரதியார்களைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிக்கொண்டு போன இடம், பாரதியார் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்த்திப் பாடிய தமிழ்த் தாய்க் கோயில். இங்கு, தமிழ்த் தாய் அழகுடன் வீற்றிருக்க, இருபுறமும் ஒலித் தாய் மற்றும் வரித் தாய் இருக்கிறார்கள். உலகில் மொழிக்கென முதல் முதலாக கோயில் கட்டப்பட்டது இங்குதான். அங்கே வழிபட்ட சுட்டி பாரதியார்கள், 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே!’ என்று பாட, நம் செவிகளில் பாய்ந்தது தேன்.

எங்கெங்கு காணினும் பாரதியடா !

இன்னொரு டீம், 'ஓடி விளையாடு பாப்பா’ என்று பாடியவாறு... அங்கே இருந்த பூங்காவின் ராட்டினத்தில் சுற்றினார்கள். சறுக்கு மரத்தில் சறுக்கினார்கள். சில பாரதிகள் கதை பேச, பூங்காவே பூத்துக் குலுங்கியது!

காரைக்குடி ஸ்ரீ கலைவாணி வித்யாலயா, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி வள்ளியம்மை அவர்களால், 1994-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தாளாளர் ஏ.ஆர். நாராயணன், முதல்வர் மற்றும் செயலாளர் என்.கண்ணன் ஆகியோரின் வழிகாட்டலில்... பள்ளி சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

எங்கெங்கு காணினும் பாரதியடா !

''எங்கள் பள்ளி படிப்பாளர்களை உருவாக்குவதுடன், சிறந்த படைப்பாளர் களையும் உருவாக்கும் பள்ளியாக இருக்கிறது. கல்வியுடன், இதர கலைகளுக்கும்  முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தொடர் கவிதை அரங்கம், வெளியாகப்போகும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகிறது. அதேபோல, 24 மணி நேர தொடர் லிம்கா சாதனை வினாடி-வினாப் போட்டியும் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனை'' என்கிறார் பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஜெயங்கொண்டான்.