பொது அறிவு
Published:Updated:

பட்டாம்பூச்சியின் இறகும் நானோ தொழில் நுட்பமும்!

பட்டாம்பூச்சியின் இறகும் நானோ தொழில் நுட்பமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டாம்பூச்சியின் இறகும் நானோ தொழில் நுட்பமும்!

த.வி.வெங்கடேஸ்வரன்

ண்ணங்களை வாரி இறைத்துக் கண்களுக்கு விருந்தளிக்கும் நீல மார்ப்ஹோ (Blue Morpho) வகைப் பட்டாம்பூச்சி அதி நவீன நானோ தொழில்நுட்பத்துக்கு வழிவகுத்துவருகிறது.    

பட்டாம்பூச்சியின் இறகும் நானோ தொழில் நுட்பமும்!

சோடியம் வாயு மின்விளக்கு ஆரஞ்சு நிற ஒளியை வெளியே உமிழ்வதன் காரணமாக அது ஆரஞ்சு நிறத்தில் புலப்படுகிறது. தாவரத்தின் இலை, ஒளியைப் பிரதிபலிக்கிறதுதான். அப்படியிருந்தும் அது ஏன் பச்சை நிறமாக மட்டும் காட்சியளிக்கிறது? இலைகளில் உள்ள கிளோரோபில் எனும் பச்சையம் நிறமி பல நிறங்களின் கலவையான சூரிய ஒளியை உள்வாங்கி வெறும் பச்சை நிறத்தை மட்டும் மீண்டும் பிரதிபலிக்கிறது. அதனால் பச்சை நிறத்தில் இலை தென்படுகிறது. தக்காளியின் சிவப்பு, எலுமிச்சையின் மஞ்சள், ரோஜாவின் ரோஸ், கத்திரிப் பூவின் நிறம் என ஏறக்குறைய அனைத்தும் பல்வேறு நிறமிகளின் கைவரிசைதான். விலங்குகளில் புலியின் தங்கநிறக் கோடுகள், யானையின் கருமை நிறம், வாத்தின் பால்வண்ணம் எல்லாம் மெலனின் எனும் ஒருவகை நிறமி வேதிப் பொருளின் விளையாட்டு.

ஆனால், பட்டாம்பூச்சியின் சிறகில் பளபளக்கும் வண்ணம் நானோ தொழில்நுட்ப அமைப்பில் விளைந்த வினோத விளைவு. எந்த ஒரு நிறமியின் கைவரிசையும் அல்ல. பட்டாம்பூச்சியின் இறகைக் கூர்ந்து கவனித்தால், அதில் மீனின் செதில்போன்ற அமைப்பு உள்ளதைக் காணலாம். ஓடுகள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு ஓட்டுக்கூரை வேய்ந்ததைப்போலத் தென்படும். இந்தச் செதில் அமைப்பை சக்தி வாய்ந்த நுண்ணோக்கி வழியே கண்டால், அதில் வினோத நானோ அமைப்புகள் தென்படும்.        

பட்டாம்பூச்சியின் இறகும் நானோ தொழில் நுட்பமும்!

சூரிய வெண்மை ஒளி போன்ற பல நிற ஒளிக்கற்றைகள் கலந்து இந்த நானோ இடுக்கில் விழும்போது ஒவ்வொரு நிறமும் தனித்தனியே பிரிக்கப்பட்டு, இந்த நானோ அமைப்பால் பல தனித்துவக் கோணத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட கோணத்தில் வெறும் நீல நிறம்தான் பிரதிபலிக்கப்படும்; எனவே, அந்தக் கோணத்தில் நாம் பார்க்கும்போது இறகின் அந்தப் பகுதி நீல நிறமாகத் தென்படும். அதே பகுதியை வேறு கோணத்தில் பார்த்தால், வேறு நிறத்தில் பளபளக்கும்.

பட்டாம்பூச்சியின் இந்தத் தொழில்நுட்பம் கொண்டு பாடம் படிக்கும் விஞ்ஞானிகள், மிகத்துல்லியமாகச் செயல்படும் நவீன வெப்ப உணர்விகளை உருவாக்குவதில் முனைந்துள்ளனர். புளூ மார்ப்ஹோ வகைப் பட்டாம்பூச்சியின் இறகில் வெப்ப விளைவைப் பெரிதாக்கிக் காட்டும் கார்பன் நானோக்குழாய் வடிவத்தைப் பூசி, நவீன உணர்வியை வடிவமைத்துள்ளனர். புறவெப்பம் மாற மாற இந்த இறகின் நிறமும் மாறுகிறது. வெறும் 0.018oC வெப்ப மாறுதலைக்கூட அளவிடக் கூடிய மிகத்துல்லியமான வெப்ப உணர்விகளை வடிவமைத்துள்ளனர்.

இத்தகைய நுண் உணர்விகள் கொண்டு இரவிலும் காட்சி தரும் வெப்பத் தோற்றுருக் (தெர்மல் இமேஜிங்) கருவிகளைத் தயாரிக்க முடியும். சிவந்து வீங்கி அழற்சியுற்ற உள்திசுக்களைக்கூட இனம் காணும் மெடிக்கல் இமேஜிங் கருவி தயாரித்து, பல நோய்களை முன்கூட்டியே அறிய முடியும். மேலும், இயந்திரத்தில் எங்கெல்லாம் கூடுதல் உராய்வு ஏற்படுகிறது என்பதை அறியும் கருவி, தயாரிக்கப்பட்ட இயந்திரங்களில் எங்கே உள்முறிவு ஏற்பட்டுள்ளது எனக்  கண்டுபிடிக்கும் கருவி எனப் பல நவீனக் கருவிகளைத் தயாரிக்கமுடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.