Published:Updated:

ஸ்கூல் ஸ்டார்

தி.விஜய் த.சித்தார்த்

ஸ்கூல் ஸ்டார்

தி.விஜய் த.சித்தார்த்

Published:Updated:
##~##

கதைப் புத்தகங்கள்தான் கனவுகளுக்கு உணவு. படக் கதையில் பார்த்த மந்திரவாதி, நம் உறக்கத்தைக் கலைத்து உசுப்பி எழுப்புவான். ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி அழைத்துச் செல்வான். கிளியின் கழுத்தில் அவன் உயிர் இருக்கும். எல்லாம் சரி... நம்மில் எத்தனை பேர் கதைப் புத்தகங்கள் வாசிக் கிறோம்? இன்றைய சிறுவர்களிடம் பாடப் புத்தகத்தைத் தாண்டி கதைகள், நமது கலாச்சாரம் பற்றி சொல்லும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமே இல்லையா? அதைப் பொய்யாக்கி இருக்கிறார் தருண் சஞ்சீவ். கோவை கனுவாயில் உள்ள யுவ பாரதி பப்ளிக் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறார் சஞ்சீவ்.  

சமீபத்தில் 2011-ஆம் ஆண்டுக்கான 'அமர் சித்ர கதா ஃபவுண்டேஷன்’ நடத்திய வரலாறு, மற்றும் புராணக் கதைகளின் அடிப்படையில் கேட்கப்பட்ட தேர்வில்... இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்து, 11 லட்ச ரூபாய் பரிசு வென்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சாதாரணமாகவே நான் ஓய்வு நேரங்களில் கதைப் புத்தகங்களைப் படிச்சுட்டு இருப்பேன். இந்தப் போட்டி பற்றி தெரிஞ்சதும் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைப் புத்தகங்களை ஆர்வத்துடன் படிச்சேன். இந்தியாவின் 70 நகரங்களில் இருந்து 6,600 மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க. ஆன்லைனில் 150 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், கடைசிச் சுற்றுக்கு வந்தவர்களிடம், போனில் கேள்விகள் கேட்டாங்க. அசராமல் பதில் சொன்னேன். எனக்குத்தான் முதல் பரிசுனு தெரிஞ்சப்போ, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கின மாதிரி சந்தோஷப்பட்டேன்'' என்கிறார் தருண் சஞ்சீவ்.

ஸ்கூல் ஸ்டார்

சஞ்சீவின் தந்தை செல்வக்குமார், ''நாங்கள் எந்த விஷயத்துக்கும் அவனைக் கட்டாயப் படுத்த மாட்டோம். அவன் விரும்பியதைச் செய்ய சுதந்திரம் கொடுத்தோம். தருணுக்கு அறிவியலிலும் ஆர்வம் அதிகம். இந்தப் பரிசுத் தொகை அவனோட எதிர்காலப் படிப்புச் செலவுக்குப் பயன்படும்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

''தருண் எங்கள் ஸ்கூலுக்கு கிடைச்ச சகலகலா வல்லவன். இசை, விளையாட்டுனு எல்லாத் துறையிலும் ஜெயிச்சுட்டே இருக்கான். தேக்வாண்டோ தற்காப்புக் கலையில் யெல்லோ பெல்ட் வாங்கி இருக்கான். பல போட்டிகளில் கலந்துக்க அவன் கிளம்பும்போது, தாராளமாக அனுமதி தந்து உற்சாகப் படுத்துவோம்.'' என்று புன்னகையுடன் சொன்னார் பள்ளி முதல்வர் கீதா ஜெயச்சந்திரன்.

ஸ்கூல் ஸ்டார்

''எங்கள் கேங்கில் தருண்தான் ஹீரோ. டிராயிங், மியூஸிக்னு எதையும் விடமாட்டான். எந்தப் போட்டிக்குப் போனாலும், மெடல்களோடுதான் திரும்பி வருவான். லண்டன் மியூஸிக் ஸ்கூலில் கிரேடு 1 தேர்ச்சி பெற்று இருக்கான்.'' என்கிறார்கள் பெருமையாக தருணின் நண்பர்கள்.

இவை தவிர ஸ்கேட்டிங், நீச்சல் போட்டிகளிலும் கலந்துகொண்டு இருக்கிறான்.

ஸ்கூல் ஸ்டார்

''ஒவ்வொரு வெற்றியின்போதும் இதுதான் ஆரம்பம்... அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன்.இதுதான் என்னோட வெற்றிக்குக் காரணம்'' என்கிறான் சஞ்சீவ்!