Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே....

சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் !கவிப்பேரரசு வைரமுத்து !ஒருங்கிணைப்பு: நா.கதிர்வேலன் கே.ராஜசேகரன்முத்து கே.கணேசன்

ஒரே ஒரு ஊரிலே....

சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் !கவிப்பேரரசு வைரமுத்து !ஒருங்கிணைப்பு: நா.கதிர்வேலன் கே.ராஜசேகரன்முத்து கே.கணேசன்

Published:Updated:
##~##

'கதை சொல்லட்டுமா?'' என்று யாராவது கேட்டால், சுட்டிகள் எல்லோரும் குஷியாகிவிடுவோம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா கதைகள் நிறையக் கேட்டு இருப்போம். இப்போ உங்களுக்குப் பிடிச்ச ஒரு பிரபலமானவர் வந்து கதை சொன்னால்...?’ என்று சென்னை வில்லிவாக்கம் பத்மா சாரங்கபாணி மெட்ரிக் பள்ளி சுட்டிகளிடம் கேட்டதும்... எல்லோரும்  ஆவலுடன் ''யாரு...  யாரு? என்றனர். ''கவிப்பேரரசு...''  என்றதும் 'ஹய்யா... வைரமுத்து அங்கிள்! '' என்று உற்சாகக் கூச்சல்!

''என் வீட்டின் அருகேயே அமைதியும் பசுமையும் தவழும் பூங்கா  இருக்கிறது. அங்கேயே சந்திப்போம்'' என்றார். பூங்காவின் நடுவே இருக்கும் வள்ளுவர் சிலை, வைரமுத்து அங்கிளால் அமைக்கப்பட்டது என்பது சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலகலவென வந்து நின்ற சுட்டிகளைப் பார்த்ததும் முகமும் மனமும் மலர்ந்தது கவிஞருக்கு.  சுட்டிகளிடம் ஆசையாகப் பேசியவர், ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.அத்தனை குட்டீஸுக்கும் அன்புப் பரிசாக சாக்லேட்டுகள் தந்தார்.

ஒரே ஒரு ஊரிலே....

''என் அன்பு கண்மணிகளே... உங்களுக்கு எல்லாம் நான் இப்போ ஒரு கதை சொல்லப்போறேன். எனக்குப் பிடிச்ச நட்பு பற்றிய கதை இது. இதோ நம்ம அஜய், யஷ்வந்த் மாதிரி இரண்டு பேர் நண்பர்களா இருந்தாங்க. இருவரும் ஒரு நாள் காட்டு வழியே வீட்டுக்குப் போயிட்டு இருந்தபோது... அந்த வழியாக ஒரு கரடி வந்தது. கரடி என்ன பண்ணும்?'' என்று கேட்டார்.

''ஐயோ... கரடி கடிக்குமே'' -என்றாள் தீபிகா.

''ஆமாம், கடிக்கும். அது மனுஷங்களைப் பார்த்தால் விடாது. அது எதுக்கும் பயப்படாது. அது ஒண்ணே ஒண்ணுக்குத்தான் பயப்படும்... எதுக்கு?'' என்று கேட்க, சுட்டிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

''தீ... தீயைப் பார்த்தால் கரடி ஓடிப்போய்விடும் இல்லையா? ஆனால், இவங்ககிட்டே தீ இல்லை.  கரடியைப் பார்த்தாலே, அது கடிக்கப் போகுதுன்னு புரிஞ்சுபோச்சு. இரண்டு பேரில் ஒருத்தனுக்கு மரம் ஏறத் தெரியும். அவன் அப்படியே தன் நண்பனை அம்போனு விட்டுட்டு ஓடிப்போய் மரத்தின் மேல ஏறி, உச்சியில் உக்கார்ந்துட்டான். 'அப்பாடா! நாம தப்பிச்சுட்டோம்’ என்று பெருமூச்சு விட்டான். ஆனால், இன்னொருத்தனுக்கு மரம் ஏறத் தெரியாது. பாவம் அவன் மாட்டிக்கிட்டான்.  'கரடிக்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது?’னு பயந்துட்டான். அப்போ என்ன நடந்திருக்கும்?'' என்று வைரமுத்து அங்கிள் கேட்டார்.

ஒரே ஒரு ஊரிலே....

சுட்டிகள் எல்லோரும்... ''அய்யய்யோ அவனைக் கரடி கடிச்சிருக்கும்'' என்றார்கள். ''அதுதான் இல்லே... அப்போது அவனுக்கு 'உயிரில்லாத ஆளைக் கரடி கடிக்காது’ங்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. இது தெரிஞ்ச அந்தப் பையன் என்ன பண்ணான்?'' என்று கேட்டார் வைரமுத்து.

உடனே திலீப் என்ற சுட்டி, ''அவன் அப்படியே சிலை ஆயிட்டான்'' என்றான்.

''இல்லை.'' சிலை ஆகவில்லை... ஆனால், கிட்டத்தட்ட சரி. ''அவன் பேச்சு மூச்சு இல்லாமல் கீழே படுத்துக்கிட்டான். அவன் கிட்டே கரடி வந்தது, அவன் தலையை மோந்து பார்த்தது, காலை மோந்து பார்த்தது...''

கதையைக் கேட்டுக்கொண்டு இருந்த ஹரிணி, ''ஐயோ, அப்புறம் என்ன ஆச்சு?'' என்று அதிர்ந்தாள்.

''கரடி அவன் உடம்பு முழுக்க மோந்து மோந்துப் பார்த்துட்டு, அவனுக்கு உயிரில்லைனு நினைச்சு ஓடிப்போயிடுச்சு'' என்றார்.

''அப்பா... இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு''ன்னு பெருமூச்சு விட்டான் பாஷா.

''கரடி போனதும் மரத்தின் மேல் இருந்தவன் இறங்கி வந்தான். கீழே இருந்தவனைப் பார்த்து,  ''கரடி ரொம்ப நேரமா உன் காதுகிட்ட ஏதோ சொல்லிச்சே? என்ன சொல்லிச்சு?'' என்று கேட்டான்.

அதுக்கு இவன் பதில் சொன்னான், ''ஆபத்தில் கைகொடுக்காத நண்பனோட சேரவே சேராதேன்னு சொல்லிட்டுப் போச்சுன்னான். நண்பனுக்கு உதவி செய்யணும். ஆபத்தில் கை கொடுக்கணும். அதுதான் நட்புக்கு அடையாளம்'' என்று சொன்னவர்... ''நீங்க எப்படி உங்க நண்பர்களுக்கு உதவுவீங்கதானே?'' என்று கேட்டார்.

சுட்டிகள் ஒரே குரலில், ''ஆமாம்... ஆமாம்'' என்றனர்.

ஒரே ஒரு ஊரிலே....

''இதை நான் கரடி விடலை... கரடிவிடுகிற மாதிரி கதை சொன்னேன்'' எனக் கதையை முடித்தவர், சுட்டிகளிடம் ''நீங்கள் கதையோ, பாட்டோ பாடுங்கள்'' என்றார். உடனே கீர்த்தனா, 'அச்சம் இல்லை...’ என்ற பாடலைப் பாடினாள். பாடலை ரசித்த கவிஞர், ''பேரே கீர்த்தனாவாச்சே... நல்லாப் பாடினே'' என்றவர், பாடியதில் ஒரு வார்த்தையைச் சரியாக உச்சரித்துக் காட்டினார். சுட்டிகள் சொன்ன கதைகளையும் கேட்டு மகிழ்ந்தார்.

''புத்திசாலித்தனம் இருந்தால், வெற்றி பெறலாம். நீங்கள் எல்லாரும் நல்லாப் படிங்க, எல்லா நேரமும் டி.வி பார்த்துக் கிட்டே இருக்கக் கூடாது. பொது அறிவு, செய்திகள், உலக நடப்புகள் போல அறிவை வளர்க்கிற நிகழ்ச்சிகளைப் பார்க்கணும். நிறைய புத்தகங்களைப் படிக்கணும். படிக்கும் போதுதான் சிந்தனை வளரும். அதனால், நிறையப் படிக்கப் படிக்க உங்களுடைய படைப்பாற்றல் நல்லா வளரும். அப்போ, நீங்க ஒரு எழுத்தாளரா, ஓவியரா, கவிஞரா மாறலாம். இன்னும் பத்து வருடங்களில் உங்களை எல்லாம் சமூகத்தில் உயர்ந்த நிலையில் பார்க்கணும்'' என்று வெற்றிக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறி   சுட்டிகளை வாழ்த்தினார் வைரமுத்து.