Published:Updated:

ஸ்கூல் ஸ்டார்

வே.கிருஷ்ணவேணி சொ.பாலசுப்ரமணியன்

ஸ்கூல் ஸ்டார்

வே.கிருஷ்ணவேணி சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

குற்றாலீஸ்வரனை நினைவிருக்கிறதா? தன்னுடைய பதிமூன்று வயதிலேயே நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த நீச்சல் புலி.  அர்ஜுனா விருது, கின்னஸ் சாதனை எனத் தமிழகத்துக்கு குற்றாலீஸ்வரனால் கிடைத்த பெருமைகள் ஏராளம். இப்போது தமிழகத்துக்கு இன்னொரு குற்றாலீஸ்வரி தயார். ஜெயவீணா.

சென்னை, செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி. ஜெயவீணாவுக்கும் இப்போது 13 வயதுதான் ஆகிறது. அதற்குள் 60 தங்கம்,  28 வெள்ளி,  16 வெண்கலம் என்று பதக்கங்களை வாங்கிக் குவித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க அண்ணா ஜெயவந்த் விஜயக்குமார் சின்ன வயசுலேர்ந்தே நீச்சல் கிளாஸ் போவான். அண்ணா   நீச்சல்ல நிறைய பரிசுகள் வாங்கினான். அவனைப் பார்த்துட்டு எனக்கும் நீச்சல் கத்துக்கணும்னு ஆசை வந்துச்சு. அம்மாக்கிட்ட சொன்னேன். 'அண்ணன்கூட நீயும் போ’ன்னு சொன்னாங்க. அண்ணாவே எனக்கு கத்துக் கொடுத்தான். அப்புறம், நானும் பரிசு வாங்க ஆரம்பிச்ச உடனே வீட்டுல கிரீஷ் சார்கிட்ட பயிற்சிக்கு அனுப்பினாங்க'' என்று சிரிப்புடன் சொல்கிறார்.

ஜெயவீணாவின் வகுப்பு ஆசிரியை உமா, ''நீச்சல்ல எவ்வளவு சுட்டியோ, அதேபோல, படிப்பிலும் கெட்டி.. படிக்கிற பிள்ளையை எல்லா டீச்சர்ஸுக்கும் பிடிக்கும்தானே? அதனால, எங்க வகுப்பில் மட்டும் இல்லை, ஸ்கூலுக்கே ஜெயவீணாதான் செல்லப்பிள்ளை'' என்கிறார்.

ஸ்கூல் ஸ்டார்

''ஆறாம் வகுப்பு படிக்கிறப்ப ஒரு போட்டிக்கு ஜெயவீணாவால் போக முடியலை. அதனால, ஒரு வாரம் முழுக்க சாப்பிடாமல் அழுதுட்டு இருந்தாள். நீச்சல் மேல அவ்ளோ பிரியம் ஜெயவீணாவுக்கு. அந்தப் பிரியமும் கடுமையான பயிற்சிகளும்தான் அவளைச் சாதனைச் சுட்டியாக மாத்தி இருக்கு'' என்கிறார் பள்ளியின் முதல்வர் அமுதாலட்சுமி.

சினிமா நடிகர் 'தலைவாசல்’ விஜய்யை எல்லோருக்கும் தெரியும்தானே?   அவர்தான் ஜெயவீணாவின் அப்பா. அம்மா ராஜேஸ்வரி. பள்ளி ஆசிரியை. அவரிடம் பேசினோம்.

''ஜெயவீணாவும் அவளோட அண்ணனும்  சரி, படிக்க வேண்டிய நேரத்தில் நான் சொல்லாமலேயே ஒழுங்க படிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அதனால, அவங்க விளையாடுற நேரத்துல நாங்க குறுக்கிடறது இல்லை. குழந்தைங்க படிப்பிலும் விளையாட்டிலும் ஒரே மதிரி கவனத்தோட இருந்தா அம்மா, அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும், தெரியுமா?'' என்கிறார் அம்மா ராஜேஸ்வரி.

ஸ்கூல் ஸ்டார்

ஜெயவீணா கடந்த ஆகஸ்ட் மாதம் ராஞ்சியில் நடைபெற்ற 34-வது தேசிய அளவிலான போட்டியில் 'இளம் நீச்சல் வீராங்கனை’ விருதை வென்று இருக்கிறார். இந்திய அளவிலான சாதனை இது.

''நீச்சல் மட்டும் இல்லை; பள்ளிக்கூடத்தில் எந்தப் போட்டி நடந்தாலும் முதல் ஆளாக வந்து நின்னுடுவா ஜெயவீணா. அவளை ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம். ஆனா, தோத்தாலும் எங்க  ஃப்ரெண்டுக்கிட்ட தோற்கிறது சந்தோஷமான விஷயம்தானே?'' என்று பெருமையுடன் கேட்கிறார்கள் ஜெயவீணாவின் தோழிகள்.

ஸ்கூல் ஸ்டார்

''ஒலிம்பிக்கில் கலந்துக்கணும்கறது என்னோட கனவு. நிச்சயம் ஒருநாள் கலந்துக்குவேன்'' என்கிறார் ஜெயவீணா.

நிச்சயம் ஒருநாள் ஜெயிப்பீர்கள் ஜெயவீணா!