Published:Updated:

சிக்கு புக்கு சான்டா க்ளாஸ் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள் : கே.குணசீலன்

சிக்கு புக்கு சான்டா க்ளாஸ் !

கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள் : கே.குணசீலன்

Published:Updated:
##~##

கும்பகோணம் அருகில் உள்ள அம்மாசத்திரம் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைந்தபோது... வாத்துகளின் அணிவகுப்பு குறுக்கிட, சற்று நேரம் அதற்கு மதிப்புக் கொடுத்த பின்தான் உள்ளே செல்ல முடிந்தது.

அக்காவின் பள்ளி விழாவைப் பார்க்க வந்த எல்கேஜி பாப்பா ஒன்று, ''எனக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா முகமூடி வேண்டும்'' என்று அடம்பிடிக்க,  அதைப் பார்த்துவிட்ட பள்ளியின் முதல்வர், ''நான் தர்றேன் பேபி. நீயும் போட்டுக்கோ'' என்று முகமூடியுடன் ஓடோடி வந்து குட்டிப் பாப்பாவின் செல்லச் சிணுங்கலை நிறுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு கையில் பையும் மற்றொரு கையில் தன் பேத்தியையும் பிடித்துக்கொண்டு சான்டா க்ளாஸ் வேஷம் போட்டுவிடுவதற்காக வந்தார், ஒரு நாளும் பள்ளிக்கு வராத பாட்டி.

ஒல்லிப்பிச்சான் சான்டா க்ளாஸ் ஒருவருக்கு, வயிற்றில் தலையணையை வைத்துத் திணித்துக்கொண்டு இருந்தார் அவருடைய அம்மா.  இதைப் பார்த்த இன்னொரு குண்டு சான்டா க்ளாஸ். ''அம்மா, எல்லா சான்டா க்ளாஸுக்கும் தொந்தி இருக்குமா?'' என்று  கேட்டார். ''ஆமாம்பா...'' என்ற அவரது தாயிடம், ''ஏம்மா எல்லா சான்டா க்ளாஸும் தாடி வெச்சிருக்காங்களா?'' என்றார் விடாப்பிடியாய். ''டேய், கொஞ்ச நேரம் சும்மா இருடா'' என்றார்அம்மா.  

சிக்கு புக்கு சான்டா க்ளாஸ் !

அதற்குள், ''சார்... சார்... அங்கே பாருங்க!'' என்றான் ஒரு சுட்டி. ஒரு சான்டா க்ளாஸ், வாத்துக்களைத் துரத்திக்கொண்டு போனார். ஒரு தாத்தா... தண்ணீர் விசிறி அடிக்கும் பைப்பில் ஹாயாக விளையாட, அதைப் பார்த்த மற்ற தாத்தாக்களும் வெயில் களைப்பால் போட்டி போட்டுக்கொண்டு நனைய, ஒரே களேபரம்.  

ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவின் சந்தோஷ சேட்டைகளே... நிறைய இருக்கிறப்போ... நூறு தாத்தாக்களின் விளையாட்டுக்களையும் ஓடி ஓடி ரசிப்பதற்குள் களைத்துப்போனோம்!

லஞ்ச் நேரம் கடந்தும்... யாரும் சாப்பாட்டை நினைக்கவில்லை.

சறுக்கி விளையாட ஒரு தாத்தா போனால், கூடவே ஒரு கும்பல் கிளம்பிவிடுகிறது. ''கொடிக்கு  வணக்கம் சொல்லணும், வாங்க'' என்று ஒரு மிஸ் சான்டா க்ளாஸ்களை கூப்பிட்ட நேரத்தில்... வேறொரு அழைப்பு, ''குடிலுக்குப் பக்கத்தில் கேக் வெட்டப்போறாங்களாம் வாங்கடா...''  என்றதும், அடித்துப் பிடித்துக்கொண்டு எல்லோரும் அங்குபோய்க் குவிந்தனர்.

சமய நல்லிணக்கப் பாடல்கள் பாடப்பட்டு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் 'ஹேப்பி கிறிஸ்மஸ்’ சொல்லி மகிழ்ந்தார்கள்.

விழாவைச் சிறப்பிக்கும் வகையில் கலர் உடைகளில் வந்திருந்த பெரிய வகுப்பு மாணவ-மாணவிகள் ஆடிப்பாடி, அனைவரையும் கைதட்ட வைத்ததுதான், சான்டா க்ளாஸ் சுட்டிகளுக்கு இளைப்பார நேரம் கிடைத்த இடைவேளையாகும்.

சிக்கு புக்கு சான்டா க்ளாஸ் !

வெயில் கடுமையாக சுட்டெரித்தது என்றாலும், சான்டா க்ளாஸாக அவதாரம் எடுத்திருந்த சுட்டிகள், அந்த வெயிலைக் குடையாகவே பிடித்துக்கொண்டு கொண்டாடினார்கள்!

ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம்... இந்தப் பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் எஸ்.எம் மார்ட்டின், சிறந்த கல்விப் பணி ஆற்றி வருகிறார். 2003-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி, கடந்த மூன்று வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.

பள்ளியின் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவிகள்... ஒரிசா, புவனேஸ்வரில் பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற தேசிய அளவிலான கலாச்சாரப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளனர்.

2006-ல் கனகராஜ் என்ற மாணவன், தாய்லாந்தில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் பங்குபெற்று, உலக அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளான்.

2003-ல் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பள்ளிக்கு வந்து மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடி, பள்ளியைப் பாராட்டி உள்ளார்.

சிக்கு புக்கு சான்டா க்ளாஸ் !

 வெண்மையான தாடி, பை கொள்ளாத அளவுக்குப் பரிசுகள், அழகான மான்கள் பூட்டப்பட்ட வண்டி என கிறிஸ்துமஸ் தாத்தா எப்பவுமே சுட்டிகளின் செல்ல வரவுதான்.

சாந்தா க்ளாஸ்...

சான்டா க்ளாஸின் நிஜப் பெயர் செயின்ட் நிக்கோலஸ். பண்டைய கிரேக்கத்தின் பட்டாரா நகர் மைரா என்கிற ஊரில் பாதிரியாராக இருந்த செயின்ட் நிக்கோலஸ், ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்தார். அதிலும் சுட்டிகளுக்கு சிறு சிறு பரிசுகள் நிறையவே கொடுப்பார். ஒரு ஏழை விவசாயி, தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் நடத்தப் பணம் இல்லாமல் துன்பப்பட்டபோது, சாக்ஸின் உள்ளே தங்கக் கட்டிகளை வைத்துவிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா மாயமானார். அதனால், இன்று வரை கிறிஸ்துமஸ் மரத்தில் சாக்ஸைக் கட்டிவிட்டு பரிசுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வழக்கம் உண்டு.

செயின்ட் நிக்கோலஸை 'சின்டர்கிளாஸ்’ என நெதர்லாந்தில் அழைக்க, அதுவே பின்னர் 'சான்டாகிளாஸ்’ என ஆனது!

-பூ.கொ.சரவணன்