Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
##~##

தங்களது நகருக்கு 'உலகின் பாரம்பரியமிக்க நகரம்' என்ற பெருமை கிடைத்திட, டெல்லிக் குழந்தைகள் களம் இறங்கி இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பு இது வரை உலகில் உள்ள 226 நகரங்களை 'உலகின் பாரம்பரியமிக்க நகரம்' என்று அங்கீகரித்து உள்ளது. இதில் இந்திய நகரங்கள் ஒன்றுகூட இல்லை. அதனால், தேசியக் கலை மற்றும் கலாசாரப் பாரம்பரிய அமைப்பான INTACH ஏற்பாட்டில், டெல்லியில் உள்ள 65 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், இது குறித்து விழிப்பு உணர்வுப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கையெழுத்து இயக்கம், ஓவியம், கட்டுரைப் போட்டிகள், குறும்படத் தயாரிப்புகள் எனத் தொடர்ந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு, டெல்லி மீது யுனெஸ்கோவின் பார்வை படுவதற்கான வேலைகளில் எல்லோரும் பிஸி. டெல்லி சலோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ் !

 வித்தியாசமாக விளம்பரம் செய்தால்தான் இப்போது மக்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டியன் பீட்டர்சன் 'தன் சைக்கிள் கடையை எப்படி வித்தியாசமாக விளம்பரப்படுத்தலாம்?’ என்று யோசித்து அசத்தல் ஐடியா ஒன்றைப் பிடித்தார். தனது கடையின் கட்டடச் சுவர் முழுக்க 120 சைக்கிள்களைத் தொங்கவிட்டார். பல்லியைப் போல சுவரெங்கும் ஒட்டிக்கொண்டு இருக்கும் சைக்கிள்களைப் பார்க்காமல் யாரும் அந்தச் சாலையைக் கடக்க முடியாது. இப்போ, பீட்டர்சனின் சைக்கிள் கடை செம பிக்கப் ஆகிவிட்டது. சூப்பர்ல!

பென் டிரைவ் !

அஸ்ஸாம் மாநிலத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸ்சில் 451 ரன்கள் குவித்து சாதனை படைத்தார், மகாராஷ்டிராவின் 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல். இது எப்போது நடந்தது தெரியுமா? மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் குவித்து, சச்சினின் சாதனையை சேவாக் முறியடித்தாரே, அதற்கு மறுநாள்! ரோஹித் ஷர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ் என பலருக்கும் திருப்பத்தைத் தந்த நாசிக் கிரிக்கெட் மைதானத்தில் இந்தச் சாதனை செய்திருக்கும் விஜய், 'வீரேந்திர சேவாக்தான் எனது ரோல் மாடல். அவருக்கு இந்த இன்னிங்ஸ்சை அர்ப்பணிக்கிறேன்,' என்றார் பெருமிதத்துடன். வெல்டன் யங் வீரூ!

பென் டிரைவ் !

 போலந்து, துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகளில்தான் தலைகீழாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் இருக்கின்றன. இப்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. தலைநகர் புது தில்லி அருகில் உள்ள இந்திரபுரா என்ற இடத்தில் ‘Orange country’ என்ற பெயரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுடன், 'கரசெல்லா க்ளப்’ (Caracella club) தலைகீழாகக் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்தது அமெரிக்காவின் பிரபல கட்டடத் தொழில்நுட்ப நிறுவனமான Meriton Group. இதன் மூலம் அந்த ஏரியாவுக்கே மவுசு ஏறிவிட்டது. இந்தத் தலைகீழ் கட்டடத்தைக் காண்பதற்காக தினமும் கூட்டம் குவிகிறதாம். தலைசுத்தாமல் திரும்பிப் போவாங்களா?

பென் டிரைவ் !

 சைமீர் ஸ்டைர் (Saimir stair)   என்பவர் சிறு சிறு பொருட்களைக் கொண்டு ஓவியம் உருவாக்கும் புகழ்பெற்ற  ஆர்ட்டிஸ்ட். அல்பீனியா நாட்டைச் சேர்ந்த இவர், கார்க் மூடிகள், ஸ்க்ரூ, டூத் பிக்ஸ் ஆகியவற்றால் பல ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார். சமீபத்தில் இவர், ஒரு மில்லியன் காபி விதைகளால் 'ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு காபி’ என்ற பிரமாண்டமான ஓவியத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த மெகா ஓவியத்தின் அளவு 25 சதுர மீட்டர். இந்த ஓவியம் சீக்கிரமே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம். உலகக் கலைஞன்!

பென் டிரைவ் !

 கடந்த 14 ஆண்டுகளாக கர்நாடக சங்கீதம் பயிற்றுவித்து வருபவர் இசைமாமணி எம்.எஸ்.மார்ட்டின். நவம்பர் 27 -ஆம் தேதி தன்னுடைய மாணவர்களில் 109 பேரைக்கொண்டு உலக சாதனை படைத்திருக்கிறார். எலெக்ட்ரானிக் கீ போர்டுகளைக்கொண்டு ஹம்ஸத்வனி, கீரவாணி, கல்யாணி, சிந்து பைரவி, தேஷ் என்ற ஐந்து ராகங்களில் 'ராகாமிருதம்’ என்ற இசை நிகழ்ச்சியை சுமார் 15 நிமிடம் நடத்தினார். 5 முதல் 18 வயது வரையான சுட்டிகள் இதில் பங்கேற்றனர். 2004-ல் அமெரிக்காவின் பில்லி ஜோயல் தலைமையில், 107 பேர் 5 நிமிடங்களில் பியானோ இசை நிகழ்ச்சி நடத்தியதே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை மார்ட்டினும் அவரது மாணவர்களும் இணைந்து முறியடித்திருக்கிறார்கள். இசையால் உலகை வசமாக்கிட்டாங்க!

பென் டிரைவ் !

சீனாவைச் சேர்ந்த 41 வயது ஹுவாங்குக்கு சிறுவயதில் எலெக்ட்ரிக் அடித்ததில், கைகள் இரண்டும் கருகிவிட்டன. அதற்காக அவர் முடங்கிவிடவில்லை. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு இருந்தார். 12 வயதில் தன் கால்களினால் ஓவியம் வரைய ஆரம்பித்தார். ஒரு வருடத்திலேயே அதில் நிபுணர் ஆகிவிட்டார். அவருக்கு 18 வயது இருக்கும்போது, அவரது தந்தை உடல்நலம் சரியில்லாமல் படுத்தப் படுக்கையானார். மருத்துவச் செலவுக்கும் பணம் இல்லை. உடனே சீனாவில் உள்ள பல நகரங்களுக்குச் சென்று, சாலை ஓரங்களில்... தன் கால்களால் ஓவியம் வரைந்து பணம் சம்பாதித்தார் ஹூவாங். இப்போது வாய் மூலமாகவும் ஓவியம் வரைகிறார். ஹூவாங்கின் ஓவியங்களுக்கு இப்போது சீனாவில் நல்ல மரியாதை. நம்பிக்கை நாயகன்!