Published:Updated:

நாலு பேருல யாரு மாப்ளே ?

கலாய்க்கிறார் சந்தானம்ஒருங்கிணைப்பு: ம.கா.செந்தில்குமார்கே.ராஜசேகரன்கே.கணேசன், கே.யுவராஜன்

நாலு பேருல யாரு மாப்ளே ?

கலாய்க்கிறார் சந்தானம்ஒருங்கிணைப்பு: ம.கா.செந்தில்குமார்கே.ராஜசேகரன்கே.கணேசன், கே.யுவராஜன்

Published:Updated:
##~##

''வணக்கம் மிஸ்டர் அப்பாடக்கர்...''

சுட்டிகளுக்கு கதை சொல்வதற்காக சென்னை, கிரீன் பார்க் ஹோட்டலின் புல்வெளிக்குள் நுழைந்த நடிகர் சந்தானம், இந்தக் கோரஸான வரவேற்பால் மிரண்டுபோனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆகா! இவங்களை எல்லாம் பார்த்தால் கதை கேட்கிறவங்க மாதிரித் தெரியலையே! விட்டால், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் அண்ணாச்சிக்கே கதை, திரைக்கதை, டைரக்ஷன் கத்துக்கொடுப்பாங்க போலிருக்கே...'' என்றபடி இரண்டடி பின்னால் சென்றார்.

''அங்கிள் பயப்படாதீங்க. நீங்க கதை சொல்ல ஆரம்பிச்சதும்... நாங்க கொய்ட் ஆகிருவோம்'' - செஞ்சி லஷ்மி உறுதிமொழி கொடுத்தாள்.

பூங்கொத்துக் கொடுத்து அவரை வரவேற்றான்  குட்டிப் பையன் தமிழ்ச்செல்வன். சந்தானம் அங்கிள் அவனை அலேக்காகத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அத்தனை சுட்டிகளும் அவர் பின்னால் சென்றார்கள்.

பசுமையான இடமாகப் பார்த்து அமர்ந்தார். சுட்டிகள் அவரை ரவுண்ட் கட்டினார்கள். ''நாங்க எல்லாம் சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் ஸ்ரீ சீதாராம் வித்யாலயா பள்ளியில் இருந்து வர்றோம்'' என்றார்கள். இடையில் புகுந்த ஒருவன், ''நான் ஒண்டி, டி.ஏ.வி'' என்றான்.

நாலு பேருல யாரு மாப்ளே ?

''நீ ஒண்டியாவா டி.ஏ.வி.,-ல படிக்கிறே... அவ்ளோ பெரிய ஸ்கூலில் தனியாகப் படிக்க உனக்கு பயமா இல்லியா?'' என்று கேட்டார்.

எல்லோரும் சிரித்தார்கள். ''ஆகா... பெரிய பெரிய ஹீரோக்களையே சினிமாவில் கலாய்க்கிற ஆளு. உங்ககிட்டே உஷாராப் பேசணும்ல...  மறந்துட்டேன்.'' என்றான்.

''அதுக்காக பி.டி. சார் முன்னாடி உட்கார்ந்து இருக்கிற மாதிரி இருக்காதீங்க. நான் கதை சொல்றதுக்கு முன்னாடி... யார் யார்கிட்டே என்ன என்ன திறமைகள் இருக்குனு தெரிஞ்சுக்கணும். பாடுறவங்க பாடலாம், ஆடுறவங்க ஆடலாம். ஓடுறவங்க எல்லாம் ஓடிடலாம்'' என்றார் சந்தானம் அங்கிள்.

'இதுக்கு எல்லாம் அசந்துடுவோமா?’ என சுட்டிகள் களத்தில் இறங்கினார்கள். சந்தானம் அங்கிள் படங்களில் சொன்ன ஜோக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துவிட, அந்த இடமே லொள்ளு சபாவாக மாறியது.

நாலு பேருல யாரு மாப்ளே ?

இப்படியே பத்து நிமிடங்கள் ஓடியதும், ''இதானே வேணாங்கிறது. என் பாக்கெட்ல இருந்து பர்ஸை எடுத்து, எனக்கே அல்வா வாங்கிக் கொடுக்குறீங்களா..? சொந்தச் சரக்குகளை எடுத்துவிடுங்க'' என்றார்.

''அங்கிள்... அக்ஷய் ராமானுஜன் நல்லாப் புல்லாங்குழல் வாசிப்பான்'' என்று கோரஸாகக் குரல்கள் கேட்டன. கூட்டத்தில் இருந்த அக்ஷய் முன்னால் வந்தான்.

''கண்ணாடி போட்ட கண்ணா... வாசிப்பா'' என்றார் சந்தானம் அங்கிள்.

அக்ஷய் 'முகுந்தா... முகுந்தா...’ பாடலை புல்லாங்குழலில் அழகாய் வாசித்தான். எல்லோரும் தாளம் போட்டு ரசித்தார்கள்.  

அடுத்து முன்னால் வந்த சாந்தினி, ''அங்கிள், நான் பரதநாட்டியம் ஆடுவேன்'' என்றாள்.

''ஜீன்ஸ் போட்டுக்கிட்டு பரதநாட்டியமா? ம்... நடக்கட்டும். நானே ஸ்டெப் எடுத்துக் கொடுக்கிறேன்'' என்று சந்தானம் அங்கிள் சொல்ல, செம க்யூட்டாக சாந்தினி பரதம் ஆடி முடித்தாள். தன் மடியில் அமைதியாக அமர்ந்து இருந்த தமிழ்ச்செல்வனிடம், ''என்னப்பா நீ எதுவுமே செய்யலையே... தமிழ் இன்னைக்கு உலகம் பூராக் கலக்கிட்டு இருக்கு. தமிழ்னு பேர் வெச்சுக்கிட்டு சும்மா இருக்கலாமா?'' என்றார்.

நாலு பேருல யாரு மாப்ளே ?

உடனே களத்தில் குதித்தான் தமிழ்ச்செல்வன். ''ஏழாம் அறிவு படத்தின் 'ஏலேல்லமா... ஏலே... ஏலம்மா...'' என்று அத்தனை சுட்டிகளும் பாட, சூப்பராக நடனம் ஆடி அசத்தினான்.

''ஓகே. எல்லாருமே கலக்கிட்டீங்க. எனக்கு டைம் ஆயிடுச்சு. கிளம்புறேன்'' என்றபடி எழுந்தார்.

''ஆகா... சரியான தில்லாலங்கடி வேலையா இருக்கே. நீங்க இன்னும் கதையே சொல்லலியே'' என்று எல்லோரும் அவரை மடக்கினார்கள்.

''மறந்துபோய் விட்ருவீங்கனு நினைச்சேன். சரி, சொல்றேன்'' என்றவாறு ஆரம்பித்தார்.

''ஒரு ஊருல நாலு நண்பர்கள் இருந்தாங்க. அவங்க ஓவ்வொருத் தரிடமும் ஒரு அசாத்தியத் திறமை இருந்துச்சு. ஒருத்தன் பொம்மை செய்றதில் கில்லாடி. எந்தப் பொருள் கிடைச்சாலும் அதில் பொம்மை செய்துருவான். இன்னொருத்தன் நகை செய்றதில் திறமைசாலி. அடுத்தவனுக்கு மந்திரம் எல்லாம் தெரியும். நான்காவது ஆள் நல்லா சண்டை போடுவான்.'' என்றார்.

''எங்களை மாதிரினு சொல்லுங்க...'' என்றான் பரத்.

''உங்க அளவுக்கு எல்லாம் வர முடியுமா? ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஒரு நாள் அவங்க காட்டு வழியே போனப்ப இருட்டிப்போச்சு. அங்கேயே தங்கிடுறதுனு முடிவு செய்தாங்க. 'நாலு பேரும் ஒண்ணாத் தூங்குறது ஆபத்து. விலங்குகள் வரலாம்... கொள்ளையர்கள்கூட வரலாம். அதனால், மூணு மணி நேரத்துக்கு ஒருத்தர் காவல் இருப்போம்னு முடிவு பண்ணினாங்க. முதல் ஆள் காவலுக்கு இருக்க, மத்தவங்க தூங்க ஆரம்பிச்சாங்க.'' என்றார் சந்தானம் அங்கிள்.

''அலாரம் வெச்சுக்கிட்டாங்களா?'' என்று குட்டிப் பெண் தனுஸ்ரீ கேட்டாள்.

''அப்போ எல்லாம் கடிகாரம், அலாரம் எதுவும் கிடையாது. சூரியனும், சந்திரனும் கொடுக்கிற வெளிச்சத்தை வெச்சே நேரத்தைக் கண்டுபிடிப்பாங்க. காவலுக்கு இருந்த முதல் ஆளுக்கு ரொம்பப் போர் அடிச்சது. அங்கே இருந்த களிமண்ணை ஒண்ணாச் சேர்த்து, அழகான பெண் சிலையை உருவாக்கினான். மூணு மணி நேரம் முடிஞ்சது. அடுத்தவன் எழுந்து காவலுக்கு இருந்தான். அந்தச் சிலையைப் பார்த்தான். 'அடடா... சிலை அழகா இருக்கு. ஆனா, பெண்ணுக்கு அழகே அணிகலன்தானே! இவள் கையிலும் கழுத்திலும் எதுவும் இல்லியே? என்ன செய்யலாம்?’னு யோசிச்சான். அங்கே மரங்களில் இருந்து மரப்பட்டை, விழுது, கொடிகளைச் சேகரிச்சு, அழகான டிசைனில் நகைகளைச் செய்து சிலையின் கைகளிலும் கழுத்திலும் போட்டான்.''

''மூணு மணி நேரம் முடிஞ்சு போயிருக்குமே?'' என்று கேட்டாள் ஐஸ்வர்யா.

நாலு பேருல யாரு மாப்ளே ?

''கரெக்ட்... அடுத்து, மூணாவது ஆள் காவலுக்கு வந்தான். அவன்தான் மந்திரம் தெரிஞ்சவன். அவன் சிலையைப் பார்த்ததும் 'அழகான சிலை... இதுக்கு உயிர் கொடுத்தால் என்ன?’ன்னு நினைச்சான். உடனே பூஜை செய்து, மந்திரம் போட்டு அந்தச் சிலைக்கு உயிர் கொடுத்தான். சட்டுனு அது அழகான பெண்ணா மாறிடிச்சு. அவளோடு பேசிக்கிட்டு இருந்தான். அப்போ, சில கொள்ளைக்காரங்க வந்துட்டாங்க...'' என்று சந்தானம் அங்கிள் சொல்ல, குறுக்கே புகுந்தான் அக்ஷய்.

''நான் சொல்றேன். நாலாவது ஆள் எழுந்து அவங்களோடு ஃபைட் பண்ணினான். ஆமா அங்கிள்... நீங்க எப்போ சினிமாவில் ஃபைட் பண்ணுவீங்க?'' என்று கேட்டான்.

''என் கை, கால் நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா? இவனைத் தூக்கி வெளியே போடுங்கப்பா.'' என்று கிண்டலடித்தவர் தொடர்ந்தார்...

''அக்ஷய் சொன்ன மாதிரி சண்டை நடந்துச்சு. கொள்ளைக்காரங்க ஓடிட்டாங்க. அந்தப் பொண்ணு, யாராவது ஒருத்தர் என்னைக் கல்யாணம் செய்துக்கங்கனு சொன்னா. நாலு பேருமே நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன்... நான் செஞ்சுக்கிறேன்னு சொன்னாங்க. அப்புறம், சரி நமக்குள்ளே சண்டை வேண்டாம். இந்தப் பெண்ணே முடிவு செய்யட்டும்னு ஒரு சமாதானத்துக்கு வந்தாங்க. எங்கே, இப்போ நீங்க சொல்லுங்க பார்க்கலாம். அந்தப் பொண்ணு யாரைக் கல்யாணம் செய்துக்கிட்டா சரியா இருக்கும்?'' என்று கேட்டார் சந்தானம் அங்கிள்.

''முதல் ஆள். அவன்தானே சிலையைச் செய்தான்'' என்றாள் செஞ்சி லஷ்மி.

நாலு பேருல யாரு மாப்ளே ?

''அவள் வெறும் களிமண் சிலையாகவே இருந்திருந்தால் என்ன பிரயோஜனம்?'' என்றார் சந்தானம் அங்கிள்.

''அப்போ, மூணாவது ஆள். அவன்தானே உயிர் கொடுத்தான்'' என்றான் மோனிஷ்ராம்.

''உயிர் கொடுத்தவன் அப்பா மாதிரி ஆச்சே'' என்றார்.

''காப்பாத்தினவன்? ஏன்னா... அவள் ஹீரோயின்னா அவன்தான் ஹீரோ'' என்றாள் ஸ்ரீவித்யா.

''லாஜிக் ஓகே! ஆனா, இதுவும் தப்பு. பாக்கி இருக்கிறது நகை செய்தவன். அடுத்து, அவனைத்தான் சொல்வீங்க.  அதுக்குக் காரணமா அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பா? அதைச் சொல்லுங்க பார்ப்போம்'' என்றார்.

எல்லோரும் ஏதேதோ சொன்னார்கள். கடைசியாக ''அங்கிள், நம்ம கல்யாணங்களில் தாலி கட்டுறது, மோதிரம் மாத்துறதுனு  ஏதாவது ஒண்ணு இருக்கும். அதுதான் நம்ம கலாசாரம். அப்படி நகை போட்டதால் அவன்தான் கணவன்'' என்றான் அரவிந்த்.  

''அடேங்கப்பா... அசத்திட்டே! சரியான சென்டிமென்ட் பதில். சீக்கிரமே நீயும் கல்யாணம் செய்துக்க'' என்று சந்தானம் அங்கிள் அவனைக் கலாய்த்தார், எல்லோரும் அவனைச் சூழ்ந்துகொண்டு கிண்டல் செய்தார்கள்.

''ஓகே! ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லி இருக்கேன். நீங்களும் படிப்பு மட்டும் இல்லாமல், இந்த மாதிரி கலை, விளையாட்டுனு நிறையத் திறமைகளை வளர்த்துக்கங்க. உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதிச்சுக் காட்டுங்க. பை!'' என்று வாழ்த்தினார் சந்தானம் அங்கிள்.

நன்றி: கிரீன் பார்க், வடபழனி.