Published:Updated:

குட்டி வித்வான்கள்

ரேவதிசொ.பாலசுப்ரமணியன்

குட்டி வித்வான்கள்

ரேவதிசொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

டிசம்பர் பிறந்தாலே சென்னையில் இசை மழைதான். 'எல்லா விஷயங்களிலும் பெரியவர்களுக்கு நிகராகப் பின்னி எடுக்கும் நாங்கள் இதை மட்டும் விட்டுவிடுவோமா? குட்டி வித்வான்கள் நாங்கள்!’ என்கிறார்கள் இந்த சவால் சுட்டிகள்...

இசைக்கான இந்திய அரசின் உயரிய ஸ்காலர்ஷிப் விருதைப் பெறும் மஹதி, கீ போர்டில் 150 மேடைகளுக்கு மேல் கர்நாடக இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியவர். டி.ஏ.வி பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மஹதியின் குரு, இசைமேதை டி.கே.ஜெயராமனின் சிஷ்யரான பத்ரிநாராயணன். ஏழு வயதுக்குள் 9 விருதுகள். விமானம் ஏறிப் பறந்து வெளிநாடுகளிலும் கச்சேரிகள் நடத்தி வருகிறார். ''இந்த மாசம் முழுக்க விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு எனக்குக் கச்சேரிகள் இருக்குன்னா பார்த்துக்கங்களேன்'' என்கிறார் உற்சாகமாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறு வயது முதல் ஆடத் தொடங்கிய கீர்த்தனா பிரதீப்பின் குரு, அனிதா குஹா. கோபாலபுரம் டி.ஏ.வி-யில் 6-ஆம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா, டாக்டர் பத்மா சுப்ரமண்யத்தின் 'மீனாட்சி கல்யாணம்’ நாட்டிய நாடகத்தில் பால மீனாட்சி, மிஞிகி என்ற நாட்டிய நிகழ்ச்சியில் பால ராமர் எனப் பல வேடங்கள் ஏற்று புராணப் பாத்திரங்களைக் கண் முன் உலவவிடுபவர். ''நாட்டியம் தவிர, குழந்தைகளுக்கான டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கேன்'' என்கிறார்.

குட்டி வித்வான்கள்

எங்கு கச்சேரி நடந்தாலும், முதல் நபராக வந்து நிற்கும் பிரகத் படிப்பது ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 5-ஆம் வகுப்பு. மூன்றரை வயது முதல் திருவாரூர் பக்தவத்சலத்திடம் மிருதங்கம் கற்றுவருகிறார். ''அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாருக்குமே பாட்டும் வீணையும் அத்துப்படி. குடும்பமே இசைக் குடும்பமா இருக்கும்போது, நான் மட்டும் சோடை போவேனா? இன்னும் ஒரே வருஷத்தில் தனியா மிருதங்கக் கச்சேரி நடத்துவேன் பாருங்க!'' என்று பெருமை பாராட்டுகிறார் பிரகத்.

கார்வா ராஜசேகரிடம் வயலின் கற்றுவரும் விஷ்வேஸ், பாரத் கலாச்சார் மியூசிகல் ஸ்காலர்ஷிப் வாங்கிவருகிறார். தனிக் கச்சேரிகளில் அசத்தும் விஷ்வேஸ், பத்மா சேஷாத்ரியில் 7-ஆம் வகுப்பு மாணவன். ப்ரீகேஜி படிக்கும்போதே... மினி சைஸ் வயலினை மீட்டத் தொடங்கிவிட்டாராம். வித்தைக்காரர் தான் விஷ்வேஸ்.

11 வயது அக்ஷராவின் அம்மாவும் நடனக்காரர். அம்மாவின் நாட்டியத்தைப் பார்த்து ஆர்வம் பொங்க, ஆறு வயதிலேயே, பரத கலாஞ்சலி நாட்டியப் பள்ளியில் சேர்ந்துவிட்டார். 'பத கவிதா பிதாமஹ’, 'மஹாதேவம் மஹேசானம்பஜே’ போன்ற நாட்டிய நாடகங்களில் இவரது நடனத்தைப் பாராட்டாதவர்களே இல்லையாம். ''பத்மா சேஷாத்ரி பள்ளியிலும் பரதத்துக்கான ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளேன்'' என்கிறார் பெருமிதம் பொங்க.

பாட்டு, கீ போர்டு, நடனம் என சகல திசைகளிலும் திறமை காட்டும் சகலகலாவல்லியாய் மேடையிலும், மீடியாவிலும் மிளிரும் ஜீவிகா, பொன் வித்யாஷ்ரம் பள்ளியின் 3-ஆம் வகுப்பு சுட்டி. ''டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் குழுவுடன் பல மேடைகளில் ஆடி இருக்கேன். காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் நாட்டியாச்சார்யா பாலச்சந்திர ராஜூதான் என்னை மேடை ஏற்றியவர்.'' என்று அமர்க்கள அறிமுகம் சொல்கிறார்.

'கல்யாணக் கச்சேரியா? வயலினோடு வரச் சொல்லுங்க ஸ்ரீராமை...’ என்று அழைப்புகள் குவிகின்றனவாம். ''என் அண்ணன் வயலின் கத்துக்கிறதைப்  பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துடுச்சு. நாலு வயசுல இருந்து கார்வா ராஜசேகர்கிட்ட கத்துக்கிறேன்'' என்கிற ஸ்ரீராம் டி.வி.-க்காகவும் வயலின் வாசிக்கிறார். படிப்பது, சீதாராம் வித்யாலயாவில் 9-ஆம் வகுப்பு. பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் ஸ்ரீராமுக்குப் பைரவி ராகம் என்றால் உயிர்!

ஆறு வயதாகும் அபர்ணா, பகவத் கீதை, சகஸ்ரநாமம், திருப்பாவை, பாகவதப் பாடல்களை அருமையாய், அட்சரச் சுத்தமாய்ப் பாடும் ஆன்மிகப் பாட்டு சுட்டி. பாப்பா ஜெயின் பள்ளியில் முதல் வகுப்பு. ''மார்கழி உத்சவம், ராம சமாஜ், ராதா கல்யாணம், கோயில் திருப்பணிகளில் பாடுவேன். திருப்பதி தேவஸ்தானத்திலும் பாடி இருக்கேன். சங்கரா அவார்டும் வாங்கி இருக்கேன்'' -பெருமையோடு சொல்லும் அபர்ணாவுக்குக் குரு பாட்டிதான்!

மூன்று வயதிலேயே வீட்டில் இருக்கும் குடம், கரண்டி, பக்கெட்டை எல்லாம் கவிழ்த்து, தாறுமாறாய்த் தட்டி இசை ஆர்வத்தை வெளிப்படுத்திய சுமனின் ஆஸ்தான குரு, ஸ்டான்லி ஜோராஜ். விரலில் வித்தை காட்டி டிரம்ஸ்டிக்கைச் சுழற்றிக் கிறங்க அடிப்பதில் ஜித்தன். வேலம்மாள் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சுமன், தற்போது லண்டன் டிரினிட்டி காலேஜில் டிரம்ஸ் இறுதியாண்டு கற்றுவருகிறார். ''உலகம் வெப்பமயம் ஆவதற்கு எதிராக விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் டிரம்ஸ் வாசித்து, 2009-ல் லிம்கா சாதனை நிகழ்த்தி உள்ளேன். இசையமைப்பாளர் ஆக வரவேண்டும் என்பது கனவு'' என்கிறார். வாங்க... வாங்க!