
ஆர்டர்... ஆர்டர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
நீதிமன்றம் பெரியவர் களின் வழக்குகளை வாதாட மட்டும்தானா? முழுக்க முழுக்க குழந்தைகளுக் காகவே ஒரு கோர்ட் ஜூலை 2011 முதல் உருவாகி இருக்கு. குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் கருதி, முதல் கட்டமாக டெல்லியில் 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான சமூக வன்முறைகளைத் தடுக்கவே இந்த நீதிமன்றம். இதற்கு ஒரு பெண், நான்கு ஆண்கள் கொண்ட ஐவர் குழுவை அரசு அமைக்க இருக்கிறது. குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, சிகிச்சை, முன்னேற்றம் மற்றும் மறுவாழ்வு போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இங்கு தீர்ப்புகள் வழங்கப்படும். தமிழ்நாட்டுக்கும் கூடிய சீக்கிரம் வருமாம்!

சபாஷ் ஹீரோ!
ஆஸ்கர் ஸ்டைலில்... லண்டனில் 'ஃபேமிலி ஹீரோ’ (Family Hero)விருது வழங்கப்படுகிறது. இதன் பரிசுத் தொகை 2000 பவுண்ட்ஸ் (நம்ம ஊர் பணத்தில் 1,72,000 ரூபாய்!) 2011-க்கான ஃபேமிலி ஹீரோ, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 12 வயது, ஆடம் கெர் (Adam Kerr)..

ஆடம் ஆறு வயதாக இருந்தபோது, அவரின் தங்கை ஹெலனுக்கு அரிதான ரத்தக் குறைப்பாட்டு நோய் ஏற்பட்டது. டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்ல, தனது எலும்பு மஜ்ஜையைத் தானமாகத் தந்தார் ஆடம். ஆனால், சிகிச்சைப் பலன் இன்றி தங்கை இறந்துவிட்டாள். இதனால், ஹெலன் நினைவாக ஒரு சாரிட்டி டிரஸ்ட்டைத் தொடங்கி நிதி திரட்டினார். அந்த நிதியை ஏழைக் குழந்தைகளின் உயர்வுக்குப் பயன்படுத்தினார். இதுவரை 10,000 பவுண்ட்ஸ் திரட்டியுள்ளார். எனினும் ஆடமைத் துயரங்கள் துரத்துகின்றன. அவரின் தம்பி பிரைன், 'ஃபென்கொனிஸ் அனிமியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். வாரத்துக்கு இரண்டு முறை ரத்தம் செலுத்தவேண்டும். தாயுடன் சேர்ந்து தம்பியைக் கவனித்துக்கொள்கிறார் ஆடம்.
''மற்றவர்களுக்கு உதவி செய்வது என் தங்கை ஹெலனின் இழப்பை மறக்க உதவுகிறது. அந்த வகையில் நான் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், அவர்களும் எனக்கு உதவுகிறார்கள்'' என்கிறார் நெகிழ்ச்சியாக!
டேக் இட் டேப்லட்!
’டேப்லட்’ எனப்படும் கையடக்கக் கணினி, பெரும்பாலான மாணவர்களின் டிஜிட்டல் உலக எட்டாக் கனி. காரணம், அதன் விலை

10 ஆயிரம் முதல்

30 ஆயிரம் வரை இருப்பதுதான். இந்நிலையை மாற்ற, இந்திய அரசு 'ஆகாஷ்’ எனும் மிகக் குறைந்த விலை டேப்லட்களைக் கொண்டு வருகிறது. ராஜஸ்தான் ஐஐடியும் 'டேட்டா விண்ட்’ நிறுவனத்தின் தொழில்நுட்பமும் இணைந்து உருவாக்கியுள்ள ஆகாஷின் விலை

2,500 மட்டுமே.

முதல் கட்டமாக 1 லட்சம் டேப்லட்களை பள்ளி மாணவர்களுக்கும் (9-12ஆம் வகுப்பு வரை பயில்வோர்), கல்லூரி மாணவர்களுக்கும்

1,500 சலுகை விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. நவீன வசதிகள் அத்தனையும் இதில் உண்டு. இது பொதுமக்களுக்காக ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே 30,000 டேப்லட்கள் விற்றுத் தீர்ந்தன.
ஜனவரி 2012 இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் ஆகாஷின் மேம்படுத்தப்பட்ட வடிவமான 'யுபிஸ்லெட்7’-ஐ மொபைல் போனாகவும் பயன்படுத்தலாம். இதன் விலை

3,000. இதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கி உள்ளது. இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் முன்பதிவு செய்யவும் www.akashlaptop.com என்ற முகவரிக்கு வாங்க!


இரண்டு கால்களையும் இழந்து, விமானத்தில் தனியாக உலகை முதன் முதலில் சுற்றி வந்த பைலட், டொனால்ட் நேட்வால்ட். இரண்டாம் உலகப் போரில் சாதனைகள் பல புரிந்த இவருக்கு, 'பறக்கும் புலி’ என்ற செல்லப் பெயரும் உண்டு. கால்களை இழந்த நிலையில்... 1984-ஆம் ஆண்டு 180 மணி நேரம் பயணம் செய்து சாதனை புரிந்தார்.

இருளும் ஒளியும் !
இருட்டு, ஒருமுறை கடவுளிடம் சென்று புகார் செய்தது. ''கடவுளே, இந்தச் சூரியன் எப்போதும் என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னைத் துரத்துகிறது. பொழுது விடிந்தால், என்னைக் கட்டிப்போட்டுவிடுகிறது. மாலையில் சிரமப்பட்டுதான் விடுபடுகிறேன். அவனைக் கண்டித்து வையுங்கள்'' என்றது.
கடவுள் சூரியனை அழைத்து, ''நீ ஏன் இருட்டைத் தொல்லை செய்கிறாய்? அது உனக்கு என்ன கெடுதல் செய்தது?'' என்று கேட்டார்.

''இருட்டா? பல்லாயிரக்கணக்கான நாட்களாக உலகைச் சுற்றி வருகிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே! எங்கே இருட்டு? அதை வரச் சொல்லுங்கள். நான் தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்றது சூரியன்.
இருட்டை அழைத்தார் கடவுள். ஆனால், இருட்டால் அந்த இடத்திற்கு வரமுடியவில்லை. ஒளியே இருட்டைத் தேடிச் சென்றும் தொலைவாக ஓடியது.
ஒளி என்பது உண்மை. ஒளி என்பது அறிவு. உண்மையும் திறமையும் தன்னிடம் கொண்டிருக்கும் எவரையும், இருள் என்ற தீய சக்தியால் ஒன்றும் செய்ய இயலாது.
