Published:Updated:

அவதார்

கடலூரில் ஒரு சிகாகோ !

##~##

கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முழுக்க ஏதோ ஆரஞ்சு ஜூஸை கொட்டி நிரப்பியது போல இருந்தது. காரணம்... திரும்பிய பக்கம் எல்லாம் குட்டிக்குட்டி விவேகானந்தர்கள்.

பலர், விவேகானந்தர்களாக மாறும் மேக்கப்பில் பிஸியாக இருந்தார்கள். இன்னும் சிலர்...  மேக்கப் முடிஞ்சு சறுக்கு மரம், ஊஞ்சல்களில் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.  

விவேகானந்தர் என்றதும் நினைவுக்கு வருவது அவரின் தலைப்பாகைதானே? ஒரு சுட்டி விவேகானந்தருக்கு தலைப்பாகை கட்டிவிட அவனது அம்மா படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தாங்க. அவன் அங்கும் இங்கும் ஓடி, டிமிக்கி கொடுத்துட்டு இருந்தவனிடம், ''உன் பேர் என்ன?'' என்றோம். ''எம் பேரு... பேரு... ம்... ம்... விவேக்கானந்தர்'' என்றான் கண்கள் சிமிட்டியபடி குறும்பாக.

தலையில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டிய அவனது அம்மா, ''உன் நிஜப் பேரைச் சொல்லுடா'' என்றார்.  சிரித்துக்கொண்டே சொன்னான், ''ஐ யாம் அவினேஷ்... ஃபோர்த் ஸ்டாண்டர்ட்.''

அவதார்

''விவேகானந்தர் ரொம்ப சமத்து. இப்படி எல்லாம் அம்மா பேச்சைக் கேட்காம ஓட மாட்டார்'' என்று நாம் பெருசாகப் பேச ஆரம்பிக்க, ''வெவ்வே... வெவ்வே... யார் சொன்னாங்க? உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை. சின்ன வயசுல விவேகானந்தர் ரொம்ப சேட்டை பண்ணுவார். அப்பா, அம்மா எவ்வளவு சொன்னாலும் குறும்பை விடவே மாட்டார். 'சிவபெருமானிடம் தவம் இருந்து உன்னைப் பெற்றோம். கடவுளோ, அவரோட பூதகணங்களில் ஒண்ணை அனுப்பிட்டாரே’னு அவர் அம்மா கிண்டலாச் சொல்வாங்களாம்'' என்று அசரவைத்தான்.

''அடேங்கப்பா... இது உனக்கு எப்படித் தெரியும்?'' என்று நாம் வாய் பிளக்க, ''அவரைப் பத்தி எங்க பாட்டி சொன்னாங்க'' என்றான். நம்முடன் பேசிக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நைஸாக அவனுக்கு தலைப் பாகையைக் கட்டி முடித்தார் அவனது அம்மா. ''அம்மா போம்ம்மா.... ம்ஹும்'' என்று சிணுங்கினான்  அவினேஷ்கானந்தர்.

அவதார்

அழுதுகொண்டே அப்பாவின் பைக்கில் இருந்து இறங்கினான் ரஃபீக் என்ற சுட்டி. அவன் வீட்டில் அங்கிள், ஆன்ட்டி, பாட்டி, தாத்தான்னு ரிலேட்டிவ்ஸ் நிறையப் பேர் வந்து இருக்காங்களாம். லீவு போட்டுட்டு விளையாடலாம்னு பிளான் பண்ணி இருந்தானாம். ஸ்கூலுக்குக் கூட்டி வந்ததால் ரொம்பவே அப்செட். அவனோட அம்மா சமாதானம் செஞ்சு, விவேகானந்தராக மாற்றினாங்க. உடனே அழறதை நிறுத்திட்டு, ''அங்கிள், என்னை போட்டோ எடுப்பீங்களா?''னு கேட்டான். ''அதுக்குத்தானே இருக்கோம்... ரெடி ஸ்டார்ட்''னு சொன்னதும், விவேகானந்தர் மாதிரியே கைகளைக் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தான். அவன் அம்மா ஓடிவந்து, அப்படியே அவன் கன்னத்தைப் பிடிச்சு 'என் செல்லம்’ என்று கொஞ்சிவிட்டு, அவன் நெற்றியில் திருநீறைப் பூசினாங்க.

விவேகானந்தர்களாக மாறிய சுட்டிகள், ''அங்கிள், ஃபங்ஷன்எப்போ ஆரம்பிக்கும்?'' எனக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.

அங்கே வந்த பள்ளி முதல்வர், ''ஆல்ரெடி ஆரம்பிச்சாச்சு. நீங்க ஆடுறது, பாடுறது எல்லாமே ஃபங்ஷன்தான். அதனால், உங்க இஷ்டப்படி செய்ங்க. நான் சொல்லும்போது வந்து நின்னாப் போதும்'' என்றார்.

அவதார்

''அங்கிள், நாங்க சும்மாவே காட்டுக் காட்டுனு காட்டுவோம்! இப்போ பிரின்ஸிபால் வேற பெர்மிஷன் கொடுத்துட்டாரா... இனி பாருங்க எங்க அரட்டை பெர்ஃபாமன்ஸை!'' என்று ஒரு சுட்டி, நம்மிடம் சொல்லிட்டு கூட்டத்தில் கரைந்தது.

விவேகானந்தர்கள் ஒரு சிறு கும்பலாக கூடி, ஃபுட்பால் டீம் உருவானது. இதைப் பார்த்து இன்னும் சில விவேகானந்தர்கள் கிரிக்கெட் மட்டையோடு களத்தில் இறங்கினார்கள். இன்னும் சிலர், சாட்... பூட்... த்ரீ போட்டு, கண்ணாமூச்சி, ஓடிப் பிடிப்பது என பிஸி ஆனார்கள்.

அவதார்

விவேகானந்தர் என்றதும் மறக்க முடியாதது... சிகாகோ சொற்பொழிவு. அங்கேதான் 'மை டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’னு சொல்லி, இந்திய நாட்டின் பெருமைகளை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தார். சுட்டிகளுக்கும் அவர் மாதிரியே பேசுறதுக்கு ஒரு மேடை தயார் செய்து கொடுக்கப்பட்டது. அதை அறிந்ததும், ''ஓஹோ... சரி, நாம இப்போ ரயிலில் சிகாகோவுக்குப் போகலாமா?''னு ஒரு சுட்டி குரல் கொடுத்தான்.

அவ்வளவுதான்... அவன் பின்னால் முப்பது, நாற்பது சுட்டிகள் வரிசையாக நின்று, 'கூ..கூ..கூ..’ என ரயில் மாதிரியே சவுண்ட் கொடுத்து மைதானத்தைச் சுற்றிவந்தாங்க. கொஞ்ச நேரத்தில்... மிச்சம் இருந்த சுட்டிகளும் தயாராகி வந்தாங்க. மொத்தம் 317 விவேகானந்தர்கள். இத்தனைப் பேரையும் ஒருங்கிணைத்தவர், பள்ளியின் துணை முதல்வர் லதா.  

அவதார்

மேடையில், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் அன்னை சாரதா தேவியின் படங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ரொம்பக் குட்டி விவேகானந்தர்கள் அவங்க அம்மாக்களைப் பிரிஞ்சதில் அழவே, அவர்களை டீச்சர்கள் சமாதானம் செய்தாங்க.

ஒரு வழியாக அழுகைக் குரல்கள் நின்றதும், பள்ளியின் தலைவர் டாக்டர் கே.ராஜேந்திரன் மற்றும் முதல்வர் இரா. நடராசன் இருவரும் மேடை ஏறினார்கள். ''குட்டீஸ், நீங்க எல்லாம் யாரு மாதிரி வேஷம் போட்டு இருக்கீங்கனு தெரியுமா?'' என்று கேட்டதும், ''சுவாமி விவேகானந்தர்'' என்றார்கள் கோரஸாக. முதல்வர், ''இப்ப நீங்க எல்லாம் ஒவ்வொருத்தரா மேடைக்கு வந்து விவேகானந்தர் பற்றி பேசலாம்'' என்றார்.

அவதார்

ஒவ்வொரு சுட்டியாக மேடை ஏறி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி அம்மையார் இருவரையும் மலர் தூவி வணங்கிவிட்டு மழலைக் குரலில் முழங்கினார்கள். விவேகானந்தரின் தத்துவங்கள், வாழ்க்கைச் சம்பவங்களைப் பேசி அசத்தினார்கள். இறுதியாக, சில விவேகானந்தர்கள் மேடையில் ஏறி, குரு வணக்கம் பாடலைப் பாடி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.  

''ரொம்ப நன்றி விவேகானந்தர்களே... இனி மறுபடியும் நீங்க விளையாடப் போகலாம்'' என்று பள்ளி முதல்வர் சொன்னதுதான் தாமதம்... என்கிற மாதிரி அத்தனை விவேகானந்தர்களும் 'ஹேய்ய்ய்ய்ய்’ என உற்சாகக் கூச்சலோடு பள்ளி  மைதானத்தை நோக்கி ஓடினார்கள். நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம் உற்சாகமாய்!

விவேகானந்தர்...

ஜனவரி 12, 1863-ஆம் ஆண்டு தை முதல் நாளில் பிறந்தவர். தந்தை விஸ்வநாத தத்தர், புகழ்பெற்ற வழக்கறிஞர். தாய் புவனேஸ்வரி, சிவபெருமான் மீது மிகவும் பக்திகொண்டவர். இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்தவர் விவேகானந்தர். காசி விஸ்வநாதரே தனக்கு மகனாகப் பிறந்து இருப்பதாக மகிழ்ந்து, 'வீரேசுவரர்’ என்று செல்லப் பெயர் வைத்தார் தாய். பள்ளியில் நரேந்திரநாத் என்றும், வீட்டில் வீரேசுவரர் என்றும் அழைத்தனர். 'பிலே’ என்ற இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. குறும்புத்தனத் தில் நரேந்திரனை மிஞ்ச ஆள் கிடையாது. இவரை அடக்குவதற்கு பூச்சாண்டி, பேய் என்று எதைச் சொன்னாலும் பயப்பட மாட்டார்.  குறும்புத்தனம் அளவுக்கு மிஞ்சிப் போனால், குழாய் அடியில் அவரை நிற்கவைத்து தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள். அப்போதுதான் அமைதியாக இருப்பார். அதே சமயம், வறுமை என்று வீட்டு வாசலில் யார் வந்து நின்றாலும் வீட்டில் இருப்பதை எடுத்துக் கொடுத்துவிடுவார். இதற்குப் பயந்து, பல சமயம் நரேந்திரனை அறைக்குள் பூட்டி வைப்பார்கள். சுட்டி வயதில் இப்படி எல்லாம் இருந்த நரேந்திரன்தான் பிறகு உலகம் வியக்கும் விவேகானந்தர் என்கிற அமைதியின் உருவமாக மாறினார்.

கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1989ல் தொடங்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் கே.ராஜேந்திரன், புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். 70 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், இப்போது 6,000 மாணவர்கள் படிக்கிறார்கள். ''வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் கற்றுத்தரும் வசதியை சென்னையில் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் இங்கே தொடங்கி விட்டோம். இரண்டு முறை பிளஸ் டூவில் மாநில அளவில் முதல் இடம். வாலிபால் போன்ற விளையாட்டிலும், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் தேசியத் திறன் அறிதல் தேர்விலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளார்கள்'' என்று பெருமையுடன் குறிப்பிட்டார் முதல்வர் இரா.நடராசன்.