Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே....

நாட்டைக் காப்பாற்றிய நல்ல தாத்தா ! சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் கார்த்தி ! முத்து படங்கள் : கே.ராஜசேகரன்

ஒரே ஒரு ஊரிலே....

நாட்டைக் காப்பாற்றிய நல்ல தாத்தா ! சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் கார்த்தி ! முத்து படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:

ஒருங்கிணைப்பு: நா.கதிர்வேலன்,
கே.ஜெயராமன்
கே.கணேசன்,
கே.யுவராஜன்

##~##

சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள்... அவர்களுக்கு எவ்வளவோ ரசிகர்கள். ஆனால், ஒரு சிலரால் மட்டும்தான் சுட்டிகளின் மனதில் பச்செக்கென இடம் பிடிக்க முடியும். அப்படி இப்போ, அவங்க மனசில் க்யூட் சிறுத்தையாக உட்கார்ந்து இருப்பவர் நடிகர் கார்த்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டிகளுக்கு கதை சொல்ல, சுட்டி விகடன் அலுவலகத்துக்கே வந்தார் பருத்தி வீரன். ''ராஜா...ராஜா... ராக்கெட் ராஜா... வெல்கம் ராஜா!'' என்று குஷியோடு வரவேற்றார்கள் சுட்டிகள்.

''அடடா மழைடா... ஐஸ் மழைடா!'' என்று போலியாகத் தும்மினார் கார்த்தி அங்கிள்.

ஸ்ரேயா என்ற சுட்டி அவருக்கு பூங்கொத்தைக் கொடுத்து, ''என் பேர் ஸ்ரேயா'' என்றாள்.

''சிவாஜி படத்தில் ரஜினி அங்கிள்கூட நடிச்ச ஸ்ரேயாதானே? என்ன திடீர்னு குட்டிப் பொண்ணா மாறிட்டே?'' என்று கேட்டார்.

''ஐய்ய... நான் வேற ஸ்ரேயா'' என்று அழகாக வெட்கப்பட்டாள் ஸ்ரேயா குட்டி.

ஒரே ஒரு ஊரிலே....

எல்லா சுட்டிகளிடமும் பெயர், படிப்பு பற்றி விசாரித்த கார்த்தி, ''நீங்க எல்லாம் ஸ்கூலுக்கு எப்படிப் போவீங்க?'' என்று கேட்டார். ஸ்கூல் வேன், ஆட்டோ, அப்பாவின் பைக் என்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னார்கள்.

''நான், சூர்யா அண்ணா, தங்கச்சி எல்லாம் ரிக்ஷாவில்தான் ஸ்கூலுக்குப் போனோம்.'' என்றார்.

''நிஜமாவா? ஏன் கார் இல்லையா?'' என்று கேட்டான் சந்தோஷ் ராம்.

''அப்பாவுக்கு ஆடம்பரமாக இருக்கிறது பிடிக்காது. நீங்க எளிமையாக இருந்தால்தான் ஸ்கூலில் இருக்கிற மற்றப் பிள்ளைகளோடு இயல்பா இருக்க முடியும்னு சொல்வார்.  சரி எங்க அப்பாவைத் தெரியுமா?'' என்று கேட்டார்.

ஒரே ஒரு ஊரிலே....

''ஓ... சிவகுமார் அங்கிள். அவரையும் பழைய சினிமாவில் பார்த்து இருக்கோம்'' என்றாள் ஷியாமா.

''சூர்யா அங்கிளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... உங்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீங்க நடிச்ச சிங்கம் படத்தைப் பார்த்தேன்'' என்றாள் சுனேத்ரா.

''ஆகா... கன்ஃபியூஸ் ஆயிட்டியே... அது சூர்யா அண்ணா நடிச்சது. அவர்தான் சிங்கம், நான் சிறுத்தை'' என்றவர், 'கிர்ர்ர்’ என்று செல்லமாக உறுமினார்.

''நீங்க எத்தனைப் படம் நடிச்சு இருக்கீங்க?'' என்று கேட்டான் விஷால்.

''இதுகூடத் தெரியாதா உனக்கு?'' என ஒரு சுட்டி சவுண்டு விட, வேறு சிலர்... ''பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, நான் மகான் அல்ல'' என்று கோரஸாகப் பட்டியல் போட்டார்கள்.

''அடேங்கப்பா... எல்லோருமே கரெக்டா சொல்றீங்க. ஆனால், சினிமா பார்க்கிறதை  டைம் பாஸா மட்டும்தான் வெச்சுக்கணும். படிக்கிறதுதான் முக்கியம். சூப்பரா பாஸாகணும்''

என்றார் கார்த்தி அங்கிள்.

''அதெல்லாம் நாங்க பிச்சு உதறிடுவோம் அங்கிள்'' என்றான் ப்ரமோத்.

''வெரிகுட்... வேற என்ன எல்லாம் உங்களுக்குப் பிடிக்கும்?'' என்று கேட்டார்.

ஒரே ஒரு ஊரிலே....

விளையாட்டு, டான்ஸ், பாட்டு என்று தங்களுக்குப் பிடித்ததைச் சொன்னார்கள். 'தெய்வத்திருமகள்’ படத்தில் வரும் ''கதை சொல்லப் போறேன்’ பாடலைப் பாடி அசத்தினாள் ஷியாமா.

''விக்ரம் அங்கிள் சினிமாவில் சொன்ன கதை இருக்கட்டும். இப்போ நீங்க கதை சொல்லுங்க அங்கிள்...'' என்றாள் நன்மதி.

''நான் உங்களை மாதிரி குட்டிப் பையனா இருந்தப்ப, என் அப்பா நிறையக் கதைகள் சொல்வார். அதில் ஒண்ணைச் சொல்றேன்.'' என்றவரை, இன்னும் நெருக்கமாக சூழ்ந்துகொண்டார்கள்.

''ஒரு ஊர்ல ஒரு ஏடாகூடமான ராஜா. அவருக்கு என்ன தோணுதோ, அதை உடனே சட்டமாகக் கொண்டு வந்துருவார். மந்திரிகள், பெரியவங்க யார் பேச்சையும் கேட்க மாட்டார். இதனால், ஜனங்க அடிக்கடி கஷ்டப்படுவாங்க. அப்படித்தான் ஒரு நாள், ராஜாவுக்கு திடீர்னு ஒரு யோசனை வந்தது. நாட்டில் வயசானவங்க எண்ணிக்கை அதிகம் ஆயிருச்சு. அவங்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை.  அத்தனைப் பேரையும் நாட்டுக்கு வெளியே கொண்டுபோய் விட்ருங்க’ ன்னு ஒரு சட்டம் போட்டார்'' என்று கார்த்தி சொல்ல,

''அச்சச்சோ... தாத்தா, பாட்டி எல்லாம் பாவமாச்சே?'' என்று பதறினாள் ஸ்ரேயா.

''இதையேதான் மந்திரிங்க சொன்னாங்க. ஆனால், ராஜா கேட்கலையே. வேற வழி இல்லாமல், ஜனங்க அவங்க வீட்டில் இருந்த தாத்தா, பாட்டிகளைக் கூட்டிட்டுப்போய் காட்டில் விட்டுட்டாங்க. அந்த நாட்டில் ரங்கன் என்கிற பையன் இருந்தான். அவனுக்கு அப்பா, அம்மா இல்லை. தாத்தா மட்டும்தான். ரங்கனுக்கு தாத்தான்னா உயிர். ஆனால், என்ன செய்றது? ராஜாவின் உத்தரவை எல்லோரும் நிறைவேத்திட்டாங்களான்னு தெரிஞ்சுக்க காவலாளிகள் வீடு வீடாக வந்து சோதனை போட்டுட்டு இருந்தாங்க. அதனால், 'எனக்கு வேற வழி தெரியலை... மன்னிச்சுரு தாத்தா’னு சொல்லிட்டு, ரங்கனும் தாத்தாவைக் காட்டுக்குத் தூக்கிட்டுப் போனான். அப்போ தாத்தா, 'நம்ம வீட்டில் நெல்லைக் கொட்டிவைக்கும் பாதாள அறையில் என்னை மறைச்சுவெச்சிரு’னு சொன்னார். ரங்கனும் அப்படியே செஞ்சான். இரவில் மட்டும் யாருக்கும் தெரியாமல் சாப்பாடு கொடுப்பான்.''

''சூப்பர் ஐடியா அங்கிள்... அப்புறம் என்ன ஆச்சு?''- ஆவலுடன் கேட்டான் ஸ்ரீகிருபா.

''கொஞ்ச நாளைக்கு அப்புறம், அந்த நாட்டுக்கு ஒரு பண்டிதர் வந்தார். அவர் ராஜாவிடம், 'என்னை மாதிரி திறமைசாலிகள் உங்கள் நாட்டில் இருக்காங்களா? நான் வைக்கும் போட்டிகளில் யாராவது ஜெயித்தால், நிறையப் பரிசுகளைத் தருவேன். யாரும் ஜெயிக்கலைன்னா, இந்த நாட்டை என் பெயருக்கு எழுதிவைக்கணும்’ என்றார். ராஜாவும் சம்மதிச்சார். முதல் போட்டி... வெட்டப்பட்ட ஒரு மரத்தின் நடுப் பகுதியைக் காட்டி, 'இதில், மேல் பகுதி எது? கீழ்ப் பகுதி எது?’ என்று கேட்டார் பண்டிதர். யாராலும்  சரியான பதிலைச் சொல்ல முடியலை. உங்களில் யாருக்காவது தெரியுமா?'' என்று கேட்டு நிறுத்தினார்.

சுட்டிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ''அது எப்படி மரத்தின் ஒரு பீஸை வெச்சுக் கண்டுபிடிக்கிறது?'' என்றாள் யாஷ்மி.

''இதே கேள்விதான் எல்லோருக்கும் தோணுச்சு. இந்த விஷயம் ரங்கன் மூலமாக பாதாள அறையில் இருக்கும் தாத்தாவுக்குத் தெரிஞ்சது. அவர் ரங்கனிடம் ஒரு யோசனை சொன்னார். மறுநாள் ரங்கன் அரண்மனைக்கு வந்தான். 'அரசே இந்த பண்டிதரின் போட்டிக்கு நான் பதில் சொல்கிறேன். எங்கே அந்த மரத் துண்டு?’ என்று கேட்டான். ஒரு பாத்திரம் நிறையத் தண்ணீரை எடுத்துவரச் சொல்லி, அதில் அந்த மரத் துண்டைப் போட்டான். 'இதில் தண்ணீரில் மிதக்கும் பகுதி, மேல் பாகம். மூழ்கி இருக்கும் பகுதி அடிப் பாகம் என்றான். பண்டிதர் அசந்துட்டார். 'சரி, அடுத்த போட்டி... சாம்பலில் கயிறு செய்யணும் முடியுமா?’ என்று கேட்டார். 'எனக்கு ஒருநாள் அவகாசம் கொடுங்க’ என்று சொல்லிட்டுக் கிளம்பினான் ரங்கன்'' என்றார் கார்த்தி அங்கிள்.

''தாத்தாகிட்டே வந்து ஐடியா கேட்டான்... அதானே?'' என்றான் சந்தோஷ் ராம்.

''ஆமா! தாத்தாவும் ஒரு தாம்புக் கயிறை எடுத்து, எண்ணெய்யில் ஊறவைத்தார். அதை அப்படியே ஒரு தட்டில் வட்டமாகச் சுற்றினார். பகல் முழுவதும் நன்றாகக் காயவைத்து எரியவைத்தார். அது முழுவதுமாக எரிந்து சாம்பல், கயிறுபோல் தட்டில் படிஞ்சது. அதை எடுத்துக்கிட்டு அரண்மனைக்குப் போனான் ரங்கன். அரசரும் பண்டிதரும் அதைப் பார்த்தாங்க. பண்டிதர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ரங்கனுக்கு நிறையப் பரிசுகளைக் கொடுத்துட்டுக் கிளம்பிட்டார். அரசருக்கு ரொம்ப சந்தோஷம். ''நம் நாட்டையே காப்பாற்றி இருக்கே. உனக்கு என்ன பரிசு வேணும்?'' என்று கேட்டார். உடனே ரங்கன், நடந்ததைச் சொன்னான். ''அரசே... வயதானவர்களின் அனுபவமும் அறிவும் நமக்கு ரொம்பவே முக்கியம். நீங்கள் பரிசு தர்றதா இருந்தால், காடுகளில் விடப்பட்டு இருக்கும் முதியவர்களைத் திரும்ப அழைச்சுட்டு வர்றதுக்கு அனுமதி கொடுங்க'' என்றான். அரசரும் தன் தவறை உணர்ந்தார். அப்புறம் என்ன? வயசானவங்க எல்லாம்  வீடு திரும்பி, எல்லோரும் சந்தோஷமா இருந்தாங்க. இதுலேர்ந்து என்ன தெரியுது? பெரியவங்களை மதிச்சு நடக்கணும்... புரிஞ்சுதா?'' என்று பஞ்ச் வைத்தார் கார்த்தி அங்கிள்.

''எனக்குக்கூட என் தாத்தா, பாட்டியை ரொம்பப் பிடிக்கும். எனக்கு கதை சொல்வாங்க. என்னோட விளையாடுவாங்க'' என்றான் விஷால்.

''கதை முடிஞ்சது, இப்போ எல்லோரும் சேர்ந்து ஜிந்தாக்கா போடுவோமா?'' என்று ஒரு சுட்டி சொல்ல, எல்லோரும் உற்சாகமாகி ரவுண்ட் கட்டினார்கள். கார்த்தி அங்கிளுடன் சேர்ந்து அத்தனைப் பேரும் குட்டிச் சிறுத்தைகளாக மாறி, ''ஜிந்தாக்கா ஜிந்தா... ஜிந்தா... ஜிந்தக்காத்தா'' என்று குஷியுடன் விளையாட ஆரம்பிக்க, அமர்க்களம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism