Published:Updated:

போலீஸ் ஸ்டோரி !

ம.கா.செந்தில்குமார், கே.யுவராஜன் பொன்.காசிராஜன்

போலீஸ் ஸ்டோரி !

ம.கா.செந்தில்குமார், கே.யுவராஜன் பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

'சிங்கம்’ சூர்யா, 'சிறுத்தை’ கார்த்தி... இப்படி போலீஸ் யூனிஃபார்ம் மீது நடிகர்களைப் போலவே நமக்கும் ஆசை இருக்கும்தான். சாதாரண மனிதர்களுக்கும் ஈர்ப்புதான். மிடுக்கு, முறுக்கு மீசை என மஃப்டியிலும் மனதைக் கவரும் காவலர் களை உருவாக்குவது காவல் பயிற்சிக் கல்லூரிகள்.

இதில் சென்னை அசோக் நகர், போலீஸ் பயிற்சிக் கல்லூரி ரொம்பவே ஸ்பெஷல். இங்கே 'போலீஸ் கெத்துலயே போய் பார்ப்போம்’ என்று சுட்டிகளுடன் கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அடடே... வாங்க குட்டி போலீஸ்களா! யூனிஃபார்ம் பக்கா ஃபிட்டா இருக்கே!'' என்று ஜாலியாக வரவேற்றார் பட்டாபி, சூப்பரின்டென்டெண்ட் ஆஃப் போலீஸ் (எஸ்.பி). பெயர், படிக்கும் பள்ளி போன்ற அறிமுகம் முடிந்ததும், ''போலீஸைப் பார்த்தால் உங்களுக்கு பயமா இருக்குமா? ஃப்ரெண்டைப் பார்க்கிற மாதிரி இருக்குமா?'' என்று கேட்டார்.

''நான் யாருக்கும் பயப்பட  மாட்டேன். ஃப்ரெண்டைப் பாக்கிற மாதிரிதான் பார்ப்பேன்'' என்று 'தில்’லாக சூர்ய நாராயணன் சொல்ல, ''ஆனா, எனக்கு கொஞ்சம் பயமா இருக்கும் சார்'' என்றாள் சங்ரிதா.

''உன்னை மாதிரியே நிறையப் பேருக்கு போலீஸ்னா பயம். ஆனா, தப்பு செய்றவங்களைத் தவிர, மத்தவங்க பயப்பட வேண்டியது இல்லை. வீட்டில் எப்படி அப்பா-அம்மா உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செஞ்சு, உங்கள் தப்புகளைத் திருத்தி, பாதுகாப்பா இருக்கீங்களோ அதையேதான் நாங்க வீட்டுக்கு வெளியில் செய்றோம்.  போலீஸைப் பார்த்து பயப்படாதீங்க. நாங்க உங்க ஃப்ரெண்ட். ஓ.கே.வா?'' என்றவர், ''இப்போ நீங்க இங்கே இருக்கிற லைப்ரரி, மியூசியம்னு ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வாங்க. அதுக் குள்ளே டி.ஜி.பி மேடமும், டி.ஐ.ஜி சாரும் வந்துடுவாங்க. அவங்களோடு பேசலாம்'' என்றார் பட்டாபி.

அசிஸ்டென்ட் டி.எஸ்.பி-க்கள் மோகன், நாகராஜன் இருவரும் உடன் வர, பரந்து விரிந்த நூலகத்துக்குச் சென்றது சுட்டி டீம்.  உலக நாடுகளில் உள்ள காவல் துறை அமைப்புகள், புகழ்பெற்ற வழக்கு விவரங்கள், காவல் துறை பயன்படுத்தும் ஆயுதங்கள் பற்றிய குறிப்புகள் என பெருசும் சிறுசுமான புத்தகங்களைப் பார்த்துப் பிரமித்தார்கள். ''துப்பறியும் நாவல்களும் இங்கே நிறைய இருக்கு'' என்றார் நூலகர்.

போலீஸ் ஸ்டோரி !

அடுத்து, மியூசியம். ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி இன்று வரையிலான இந்தியக் காவல் துறையின் வளர்ச்சி, ஆயுதங்கள், தொப்பிகள், உடைகள். குற்றம் நடந்த இடங்களில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள், கத்தி போன்ற ஆயுதங்களும் இருந்தன.

எல்லாம் பார்த்து முடிந்து சுட்டிகள் திரும் பியதும், உயர் அதிகாரிகள் கலந்துரையாடும் மீட்டிங் ஹாலில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுட்டிகளை வரவேற்றுப் பேசினார் டி.ஐ.ஜி பெரியய்யா. ''இங்கே சுற்றிப் பார்த்ததில் உங்களுக்கு நிறைய சந்தேகம் ஏற்பட்டு இருக்கணுமே...?'' என்று அவர் முடிப்பதற்குள், ''இந்த போலீஸ் டிரெய்னிங் காலேஜை எப்போ ஆரம்பிச்சீங்க?'' என்றாள் வர்ஷா.

''நான் ஆரம்பிக்கலை. ரொம்ப நாளைக்கு முன்னாடி அரசாங்கம் ஆரம்பிச்சுடுச்சு'' என்று ஜோக் அடித்த பெரியய்யா, ''உங்களுக்கு அதைப் படமே போட்டுக் காட்டுறோம்'' என்றார். எதிரே இருந்த பெரிய திரையில் காட்சிகள் ஓடின. ''நீங்க வேலூர் கோட்டையைப் பார்த்து இருக்கீங்களா? அங்கே இருக்கிற திப்பு மஹாலில்தான் 1896-ல் முதல் காவலர் பயிற்சிப் பள்ளியை ஆங்கிலேயர்கள் ஆரம்பிச்சாங்க. 1908-ல் கான்ஸ்டபிள்களுக்கான பயிற்சி மையம் வந்தது. அதைத் தொடர்ந்து 1976-ல் அசோக் நகர் காலேஜ் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, 2008-ல் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி என்ற இடத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு போலீஸ் அகாடமி தொடங்கினாங்க.  தவிர, தமிழ்நாட்டின் 10 இடங்களில் தற்காலிகப் பயிற்சிப் பள்ளிகள் இருக்கு'' என்றார்.

''இதில் எப்படி சேரணும்?'' கேட்டான் ராமகிருஷ்ணன் என்ற சுட்டி.

போலீஸ் ஸ்டோரி !

''சீருடைப் பணியாளர் தேர்வாணையம்னு ஓர் அமைப்பு, தமிழ் நாட்டில் போலீஸ் பணியிடங்களுக்கு பரீட்சை நடத்தி, கான்ஸ்டபிள்களையும் சப்-இன்ஸ்பெக்டர்களையும் தேர்வு செய்யும். 10-ஆம் வகுப்பு பாஸ் பண்ணியவங்க கான்ஸ்டபிள் பணிக்கும், டிகிரி முடிச்சவங்க சப்-இன்ஸ்பெக்டர்   பணிக்கும் விண்ணப்பிக் கலாம். எழுத்து, உடல் தகுதி, நேர்முகத் தேர்வுனு பல கட்டங்களில் செலெக்ட் ஆனவங்களை இங்கே அனுப்பு வாங்க. அவங்களை இன்டோர், அவுட்டோர் பயிற்சிகள் மூலம் பெர்ஃபெக்ட் போலீஸாக மாற்றுவோம்'' என்றார்.

''அப்படின்னா ஒரு முறை பயிற்சி எடுத்தால் போதுமா?'' என்று கேட்டான் கௌதம்.

''நல்ல கேள்வி! இப்ப குற்றவாளிகள் தொழில்நுட்பத் தில் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்காங்க. அவங்களைப் பிடிக்கணும்னா, எங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியணும். அதனால், ஏற்கெனவே உள்ள போலீஸுக் கும் சைபர் கிரைம் உட்பட லேட்டஸ்ட் பயிற்சிகளைக்  கொடுப்போம். சரி, எங்க வேலையைப் பற்றி என்ன தெரிஞ்சுவெச்சுருக்கீங்க?'' என்றதும்தான் தாமதம், ''திருடன்களைப் பிடிக் கிறது'' என்று பதில் பறந்து வந்தது.

சிரித்த பெரியய்யா, ''அப்படி ஒரு வரியில்  சொல்லிட முடியாது. மக்களைப் பாதுகாக்கிறது, குற்றங்கள் நடக்காமல் தடுக்கிறது, நடந்த குற்றங் களில் தொடர்பு உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது, சட்டம் ஒழுங்கைப் பராமரிக் கிறதுனு எங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள்'' என்றார்.

''நீங்க எல்லாம் எப்பவும் துப்பாக்கியோடு இருப்பீங்களா?'' என்று கேட்டாள் வர்ஷா. ''துப்பாக்கிங்கிறது ஒரு பாதுகாப்புக்குத்தானே தவிர, திருடனை சுடுறதுக்குக் கிடையாது.  ஒரு ராணுவ வீரர் எந்நேரமும் துப்பாக்கியோடு இருக்கலாம். நாங்க அப்படிஇருக்க மாட்டோம். சாதாரண விசாரணைக்கு போகிறப்ப எல்லாம் துப்பாக்கியை எடுத்துட்டுக் கிளம்பிட மாட்டோம். ஒரு பெரிய ரவுடியைப் பிடிக்கணும்... அவனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்கிற சூழ்நிலை இருந்தால் மட்டுமே, துப்பாக்கியை எடுத்துட்டுப் போவோம்'' என்றவரிடம், ''அப்படி நீங்க யாரையாவது சுட்டு இருக்கீங்களா?'' என்றான் ராமகிருஷ்ணன்.

''1996-ல் கபிலன் என்ற ரவுடியை ஆள் கடத்தல் வழக்கில் மடக்கும்போது, எங்களை நோக்கி சுட ஆரம்பிச்சுட்டான். நாங்கள் பாதுகாப்புக்காக சுட்டதில், குண்டடிபட்டு இறந்துட்டான்'' என பெரியய்யா ஃப்ளாஷ்பேக் சொல்லச் சொல்ல, ஜேம்ஸ் பாண்ட் சினிமாவைப் பார்ப்பது போல் கேட்டனர் சுட்டிகள். ''போலீஸ்னா இப்படி நிறையச் சவால்களைச் சந்திக்கவேண்டி இருக்கும். நீங்க ஈவினிங் 4 மணிக்கு மேலே போனால், ஸ்கூல் பூட்டி இருக்கும். பேங்க், ஹோட்டல், ஹாஸ்பிட்டல்னு எல்லாத்துக்கும் டியூட்டி டைம் இருக்கு. எங்களுக்கு அப்படி இல்லை. எந்தப்  போலீஸ் ஸ்டேஷனுக்காவது தீபாவளி, பொங்கல்னு லீவுவிட்டுப் பார்த்து இருக்கீங்களா?'' என்றார்.

போலீஸ் ஸ்டோரி !

கலந்துரையாடல் களைகட்டும்போதே, டி.ஜி.பி. லத்திகா சரண் வேகமாக உள்ளே வந்தார்.  சுட்டிகள் எழுந்து சல்யூட் அடித்தனர். பதில் வணக்கம் சொல்லியபடி சுட்டிகளைத் தட்டிக்கொடுத்த லத்திகா சரண், ''உங்களில் எத்தனைப் பேருக்கு போலீஸா வரணும்னு ஆசை இருக்கு'' என்றார். ராமகிருஷ்ணனும் சங்கிரிதாவும் கைகளை உயர்த்தியபடி, ''நாங்க ஐ.பி.எஸ். ஆகணும் மேடம்'' என்றனர். ''குட்! அதுக்குக் கடினமான உழைப்பு வேணும். பரந்த அறிவு இருக் கணும். தினமும் செய்தித்தாள்களைப் படிக்கணும். அப்படி செய்தால், உங்களாலும் ஐ.பி.எஸ். ஆக முடியும்'' என்றவர், ''அதுக்கு முன்னாடி இந்த வயதில் நீங்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும். குழந்தை களைக் கடத்துறது பற்றி பேப்பரில் அடிக்கடி படிச்சு இருப்பீங்க. தெரியாத நபர்கள் திடீர்னு வந்து, 'உன் அம்மா உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க’னு ஏதாவது காரணம் சொல்லிக் கூப்பிட்டா, கூடவே போயிர கூடாது. ஸ்கூலுக்கு ரெகுலராக வரும் ஆட்டோ, வேன் டிரைவருக்குப் பதிலாக புதுசா ஒருத்தர் வந்தால், போன் பண்ணி, 'இது ஸ்கூல் வண்டிதானா?’னு கன்ஃபார்ம் பண்ணிட்டுப் போகணும். செல்போன் நம்பர், வீட்டு அட்ரஸை பெரியவங்களைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது. போலீஸாக இருந்து தான் சமூகத்துக்கு உதவணும்னு இல்லை. உங்கள் பகுதியில் இருக்கும் அசோசியேஷன் மூலமாக இரவு ரோந்துப் பணிகளைச் செய்யலாம். அதுக்கான உதவிகளை நாங்க செய்வோம். அதுக்கு நீங்க, இன்னும் கொஞ்சம் பெரியவங்க ஆகணும். இப்படி சின்னச் சின்னஉதவிகளை மத்தவங்களுக்குச் செய்வீங்களா?'' என்று கேட்டார் லத்திகா சரண்.

''நிச்சயமா செய் வோம் மேடம்'' என்ற சுட்டிகள், மீண்டும் சல்யூட் அடித்தனர்.

லத்திகாவின்    முகத்தில் அம்மாவின் அன்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism