Published:Updated:

அவதார் காந்திகள்

கே.ஆர்.ராஜமாணிக்கம்படங்கள் : கே.குணசீலன்

அவதார் காந்திகள்
##~##

திருச்சி மாவட்டம், துறையூர் கிங் ஜீஸஸ் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி வளாகம் வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்தில் நிறைந்தது... ஆசிரியைகள், மாணவர்கள் முகங்களில் மிகப் பெரிய வி.ஐ.பியை வரவேற்கக் காத்திருக்கும் சந்தோஷம். முதலில் ஒரு அம்மா, இரண்டு காந்தித் தாத்தாக்களை ஸ்கூட்டியில் அழைத்து வந்து இறக்கினார். கதர் வேட்டி, துண்டில் மொட்டைத் தலையுடன் முகத்தில் கண்ணாடி அணிந்துகொண்டு, ஒரு தடியை ஊன்றியபடி, நிதானமாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தார் ஒரு காந்தி. இன்னொருவர், வேகவேகமாக யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பள்ளிக்குள் சென்றார்.  

 அடுத்து அடுத்து எந்திரன் படத்து ரோபோக்கள் மாதிரி மளமளவென குட்டிக் காந்திகள் குவியத் தொடங்கினார்கள். பள்ளி வாகனம் ஒன்று உள்ளே நுழைய, அதில் இருந்து காந்திகள்  குதித்து இறங்கினார்கள். காந்தி அவதாரத்தில் இருந்த எல்லா சுட்டிகளையும் ஒரு இடத்தில் நிற்கவைத்தார்கள். தங்கள் சுட்டிகளை இந்த கெட்டப்பில் ரசித்தபடி நின்ற பெற்றோர்கள் சிலர், ஓடி வந்து திருஷ்டி கழித்தார்கள். சிலர் கட்டி அணைத்துக் கொஞ்சினார்கள். குட்டி காந்திகளும் வாட்டர் பாட்டிலைக் காலி செய்தபடி, பிஸ்கட் நொறுக்குகளை உள்ளே தள்ளியபடி இங்கும் அங்கும் நடமாடியது... பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. சில காந்திகள், கையில் இருந்த கம்பைச் சிலம்பம் போல் சுழற்றி, தமது சுட்டித்தனத்தைக் காட்டினர். சில காந்திகள், மேல் துண்டு விலகி உடம்பு தெரியாதபடி மிகவும் பவ்வியமாக நடந்தனர். சிலர், அவிழ்ந்த வேட்டியை ஒரு கையால் பிடித்துக்கொண்டே வெட்கச் சிரிப்புடன் வழிந்தார்கள்.

அவதார் காந்திகள்

பள்ளிக்கூடத்தின் வாசல் வரை வந்த ஒரு காந்தி, யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் வந்த வழியே தன் வீடு நோக்கி ஓட, அவர் அம்மா பின்னாலே ஓடினார். சற்று நேரத்தில் திரும்பி வந்தவர், ''ஸ்கூல் கிளம்புறதுக்கு முன்னாடியே பாத்ரூம் போயிரு. வேட்டி கட்டினதுக்குப் பிறகு வந்தால் அவிழ்க்க முடியாதுன்னு சொல்லி இருந்தேன்... கேட்கலை. பாத்ரூம் வந்துடுச்சு. இங்கே எல்லோரும் இருக்கவே... வெட்கப்பட்டு வீட்டுக்கு ஓடிட்டான்'' என்றார் சிரித்தபடி.

காலில் கொலுசு அணிந்த படு குட்டி காந்தி ஒருவர் கண்ணில் சிக்கினார். ''காந்தி கொலுசு போடுவாரா?'' என்று மிஸ் கிண்டலாக கேட்க, ''சாரி மிஸ்... மறந்துட்டேன்'' என்றபடி கழற்ற ஆரம்பித்தார் அவரது அம்மா.

அடுத்து, ஒரு ஆட்டோ வேகமாகக் ஸ்கூல் காம்பவுண்டுக்குள் வந்து நின்றது.  ஒரு காந்தியுடன் அவர் அப்பாவும் இறங்கி வந்தார். ஜெபா என்ற மிஸ், ''காந்தி நேரத்தை சரியாகப் பின்பற்றுபவர். காந்தி வேஷம் போட்டுகிட்டு லேட்டா வரலாமா?'' என்றார்.

அவதார் காந்திகள்

''சமயபுரத்துலதான் மொட்டை போடணும்னு ராத்திரி பூரா தூங்கவேவிடலை மிஸ். அதனால்தான் அங்கே போய்ட்டு வர்றோம்'' என்றார் அந்தக் காந்தியின் அப்பா.

ஒருவர், இருவரல்ல, சுமார் 50-க்கும் அதிகமான சுட்டிகள், காந்தி வேடத்துக்காகவே மொட்டை போட்டுக்கொண்டார்கள்.

''நம் நாட்டின் சுதந்திரத்துக்காக காந்தி செய்த தியாகம் மதிப்பிட முடியாதது. கடவுளுக்கு இணையானவர். எப்படி கடவுளுக்கு மொட்டை போடுகிறோமோ, அப்படி அவருடைய நினைவு நாளை மதிக்கும் வகையில் நாங்கள் சந்தோஷத்து டன்தான் மொட்டை போட்டுக் கொண்டோம்'' என்று சொன்ன சுட்டிகளின் குரலில் ஒலித்தது நன்றிப் பெருமிதம்!

காந்தி வேடத்துக்காக மொட்டை போட்டது பற்றி அங்கே நம் காதில் கேட்ட சில டயலாக்ஸ்...

''பொறந்ததிலே இருந்து இன்னும் முதல் மொட்டை போடலை. காந்தி வேஷம் போடணும்னு ஸ்கூலில் சொன்னதும்... சரின்னு முதல் மொட்டையை காந்திக்காக அடிச்சுட்டோம்.''

''வீட்ல அப்பா முதலில் ரொம்ப யோசிச்சார். பிறகு, நைட் 10 மணிக்கு அவரே அடிச்சு விட்டுட்டார்.''

''அப்பாவுக்கு வேலை இருந்ததால், இங்கேயே மொட்டை அடிச்சுக்கச் சொன்னார். நான் பக்கத்து வீட்டு அண்ணனைக் கூட்டிக்கிட்டு சமயபுரம் போய் அடிச்சுக்கிட்டு வந்தேன்.''

கிங் ஜீசஸ் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, போதகர் டாக்டர் நார்மன் பாஸ்கர் மற்றும் அவர் துணைவியார் செலினா பாஸ்கரால் சிறப்பாக நடத்தப்படுகிறது. ''கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்குவதே எங்கள் நோக்கம். இங்கே விடுதி வசதியும் உண்டு. கல்வியுடன் இறை பக்தியும், ஒழுக்கமும் முக்கியத்துவத்துடன் கற்றுத் தரப்படுகிறது''என்கிறார், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஷாலினி ராஜசேகரன்.

அவதார் காந்திகள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக போர்பந்தரில் உதித்த மனிதர். அகிம்சையின் மூலம் மகாத்மாவாக உயர்ந்தார். வகுப்புத் தேர்வில் பக்கத்தில் இருந்த மாணவனைப் பார்த்து காப்பி அடிக்க மறுத்த உண்மையாளர். மதுரையில் ஏழை விவசாயிகளின் வறுமையைப் பார்த்து, தன் உடையாக வேட்டி மற்றும் ஒரு மேல் துண்டை   வாழ்நாள் முழுவதும் அணிந்தார். காந்திக்கு தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாசம் உண்டு, அம்புஜம் அம்மாளைத் தன் மகள் என்றார், தில்லையாடி வள்ளியம்மையைத் தன் வாழ்க்கை வரலாற்றில் போற்றுகிறார். தமிழ் மொழியைக் கற்று, திருக் குறளைப் படித்துப் பரவசப்பட்ட ஆர்வலரும்கூட. ''குழந்தைகள், தங்கள் கையெழுத்தை அழகாக ஆக்கிக் கொள்ளுங்கள். என்னை மாதிரி கிறுக்கலாக எழுதாதீர்கள்' என சுட்டிகளுக்கு அறிவுரை சொன்ன தாத்தா!

-பூ.கொ.சரவணன்