Published:Updated:

ஒரே ஒரு ஊரிலே...

சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் குஷ்பு !திகில் வீட்டில் டிடெக்டிவ் சொக்கு !

ஒரே ஒரு ஊரிலே...

சுட்டிகளுக்கு கதை சொல்கிறார் குஷ்பு !திகில் வீட்டில் டிடெக்டிவ் சொக்கு !

Published:Updated:

என்.விவேக் கே.கணேசன், கே.யுவராஜன் முத்து
ஒருங்கிணைப்பு: வனிதா மோகன்

##~##

மானும் மயிலும் ஒன்றாக ஆடுவதைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? அப்படி ஒரு குதூகலம் எல்லாச் சுட்டிகளின் முகங்களிலும். காரணம், இந்த முறை சுட்டிகளுக்கு கதை சொல்ல வந்தவர், நடிகை குஷ்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'ஃபோர் ஃப்ரேம்’ ஸ்டூடியோவில் குஷ்பு ஆன்ட்டியை சுட்டிகள் சந்தித்தபோது, ''என்னைத் தெரியுதா? ஏன் கேட்கிறேன்னா... நான் கதாநாயகியாக நடிக்கும்போது, நீங்க யாரும் பிறந்துகூட இருக்க மாட்டீங்க'' என்றார்.

''அப்போ பிறக்கலைதான் ஆன்ட்டி. ஆனா, இப்பவும் டி.வி.யில் பார்க்கிறோமே. ஜாக்பாட், மானாட... மயிலாட அப்புறம், சில சீரியல்ஸ்...'' என்று பட்டியல் போட்டான் ஹரிஷ் ஆதித்யா.

''நேத்து, டி.வி.யில் 'சிங்காரவேலன்’ படம் பார்த்தேன். நல்லா டான்ஸ் ஆடி இருந்தீங்க. இப்பவும் அப்படி ஆடுவீங்களா?'' என்று கேட்டாள் சஹரிகாஸ்ரீ.

''வம்பில் மாட்டிவிடப் பார்க்கிறீங்களே...  அப்போ சின்ன வயசு. இப்போ முடியுமா?'' என்றார் குஷ்பு.

ஒரே ஒரு ஊரிலே...

''உங்களுக்கு எத்தனை பசங்க?'' என்று கேட்டான் அர்ஜூன்.

''ரெண்டு பொண்ணுங்க. அவங்க பேர்களை நீங்களே படிச்சுக்கங்க'' என்று சொல்லி, தனது கையை நீட்டினார்.

அவர் கையில் அவந்திகா, அனந்திதா என்று பச்சை குத்தி இருந்ததைச் சுட்டிகள்  சத்தமாகப் படித்தார்கள்.

''உங்க ஹஸ்பெண்ட் சுந்தர், சினிமாவில் நடிப்பாரே அவர்தானே?''

''ஆமா. நடிகர், டைரக்டர்.''

''நீங்க எத்தனைப் படங்களில் நடிச்சு இருக்கீங்க?''

''150 படங்கள் நடிச்சு இருக்கேன்.''

''அப்புறம்...'' என்று ஷோபிகா ஆரம்பிக்க...

''இருங்க... இருங்க... நீங்களே கேட்டுக்கிட்டு இருந்தால் எப்படி? நானும் கேட்கிறேன். நீங்க எல்லாம் எந்த ஸ்கூல்?'' என்று கேட்டார் குஷ்பு.

ஒவ்வொருவரும் தங்கள் பெயரைச் சொல்லி, பள்ளியின் பெயரையும் சொன்னார்கள்.

ஒரே ஒரு ஊரிலே...

''எல்லோரும் வேற வேற ஸ்கூலா இருக்கீங்களே? எப்படி வந்தீங்க?'' என்று கேட்டார்.

''நாங்க டான்ஸ் கிளாஸ் போறோம். அந்த மிஸ்தான் அனுப்பினாங்க'' என்றாள் ஸ்வேதா.

''அதனால்தான் என்னை டான்ஸ் ஆடச் சொன்னீங்களா? நல்லா மாட்டிக்கிட்டீங்க.  இப்போ, உங்களில் யார் யார் டான்ஸ் ஆடப்போறீங்க?'' என்று கேட்டார்.

''ஸ்வேதா நல்லா ஆடுவா...'', ''இல்லே... சக்தி பிரியா சூப்பரா ஆடுவா...'', ''ம்ஹூம்... எனக்கு காலில் சுளுக்கு...''

இப்படியாக எஸ்கேப் ஆகப் பார்த்தார்கள் சுட்டிகள். ''இருங்க, நான் சாட் பூட் த்ரீ போட்டுச் சொல்றேன். அவங்க ஆடணும். இல்லைன்னா என்ன பண்ணுவேன் தெரியுமா?'' என்று பொய்யான கோபத்துடன் கேட்டார்.

''என்ன பண்ணுவீங்க?'' என்றான் சிவதர்ஷன்.

''நீங்க கதை கேட்கத்தானே வந்து இருக்கீங்க? அதைச் சொல்லாமலே அனுப்பிடுவேன்'' என்றார்.

ஒரே ஒரு ஊரிலே...

அப்படியும் சுட்டிகள், ஒருவரை ஒருவர் முன்னால் தள்ளிவிட்டார்கள். ''இது சரிப்படாது. நான் கிளம்பறேன்'' என்றபடி எழுந்தார் குஷ்பு.

சக்தி பிரியா முன்னால் வந்தாள். இரண்டு பேர் பாட, சூப்பராக பரதம் ஆடி, கை தட்டல்களை அள்ளினாள்.

''ஓகே! இனி நான் கதை சொல்றேன். உங்களுக்கு எந்த மாதிரிக் கதை பிடிக்கும்?'' என்று கேட்டார் குஷ்பு ஆன்ட்டி.

''ராஜா கதை, காமெடிக் கதை, ஹாரர் கதை...''

''ஹாரர் பிடிக்குமா? பேய் சினிமா எல்லாம் பார்ப்பீங்களா?'' என்று கேட்டார்.

''பார்ப்போமே... 'காஞ்சனா’ படத்தை நிறையத் தடவைப் பார்த்தோம்'' என்றான் சக்திவேல்.

''பயமா இல்லையா?''

''பார்க்கிறப்ப பயம் இல்லே... ஆனா, ராத்திரி தூங்குறப்பதான், காஞ்சனா என் கனவில் வந்துச்சு'' என்றாள் தேஜஸ்வினி.

எல்லோரும் சிரிக்க... ''நான் சொல்லப் போறது டிடெக்டிவ் ஸ்டோரி. இதில் ஜோக் இருக்கும். த்ரில் இருக்கும். உங்களுக்குப் பிடிச்ச அனிமல்ஸ் வரும். ஆரம்பிக்கட்டுமா?'' என்றார்.

சுட்டிகள் தயாரானார்கள். ''சொக்கு ஒரு கங்காரு குட்டி. அதுக்கு ஜேம்ஸ் பாண்ட் மாதிரி துப்பறிய ஆசை. அதுக்காக, துப்பறியும் கதைகள் நிறையப் படிச்சது. துப்பறியும் சினிமா, டி.வி.டி-க்களை வாங்கிவந்து விடிய விடியப் பார்த்தது. 'ஆகா! பாதி துப்பறிவாளன் ஆயாச்சு. இனி பிராக்டிக்கல்தான்’னு வீட்டு வாசலில் 'சொக்கு டிடெக்டிவ் ஏஜென்ஸி. வேர்ல்ட் ஃபர்ஸ்ட் அனிமல் டிடெக்டிவ்’னு எழுதிவெச்சது.''

''கங்காருவுக்கு எப்படி எழுதத் தெரியும்?''   என்று கிண்டலாகக் கேட்டாள் வேதா.

''இப்படி எல்லாம் கேட்டா... கங்காருவை விட்டே உதைப்பேன்'' என்ற குஷ்பு ஆன்ட்டி, கதையைத் தொடர்ந்தார்...

''அடுத்த நாள்... ஒரு தவளை வீட்டுக்கு வந்தது. 'எக்ஸ்கியூஸ் மீ, இங்கே டிடெக்டிவ் சொக்கு யாரு? அவரை நான் உடனே பார்க்கணும்... ரொம்ப அவசரம்!’ என்று கேட்டது. 'தலையில் தொப்பி, முகத்தில் அறிவுச் சுடரோடு இருக்கிறதைப் பார்த்தாலே தெரியலையா? நான்தான் துப்பறியும் சொக்கு!’ என்று மிடுக்கோடு சொன்னது சொக்கு. தவளை நம்பலை. 'விளையாடாதீங்க. போய் டிடெக்டிவ் சாரை வரச் சொல்லுங்க’ன்னு சொல்லிச்சு. சொக்கு டென்ஷன் ஆயிருச்சு. ''சத்தியமா நான்தான் சொக்கு. இதோ, ஐடென்டி கார்டு’ என்று  கார்டைக் காட்டியது'' என்றார் குஷ்பு.

சுட்டிகளிடம் கலகலப்புக் கூடியது... சிரித்தார்கள். ''தவளைக்கு நம்பிக்கை வந்துருச்சு. 'சொக்கு சார், எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு, ரொம்ப நாளாப் பூட்டியே இருந்தது. வீட்டின் ஓனர் பாலு பூனை, சிங்கப்பூரில் இருக்கார். ரெண்டு நாட்களுக்கு முன்னாடி ஒரு கும்பல் வந்து தங்கினாங்க. பாலுதான் வாடகைக்கு விட்டதாம். அந்த வீட்டில் இருந்து வினோதமான சத்தம் கேட்குது. அவங்க பேசுறதைப் பார்த்தா... டெரரிஸ்ட்டா இருப்பாங்களோனு பயமா இருக்கு’னு சொல்லிச்சு தவளை. 'சொக்கு இருக்க பயமா? வா பார்த்துடலாம்’னு துப்பாக்கியோட கிளம்பிச்சு சொக்கு.''

''டெரரிஸ்டுன்னா தீவிரவாதிகள்தானே?'' என்று கேட்டாள் மகாலட்சுமி.

ஒரே ஒரு ஊரிலே...

''ஆமா. ரெண்டு பேரும் அந்த வீட்டை நெருங்கினாங்க. அந்த நேரத்தில், உள்ளே இருந்து 'டமால்... டுமீல்’ சத்தம். தவளை நடுங்கியது. 'பார்த்தீங்களா... யாரையோ சுடுறாங்க’னு சொல்லிச்சு. சொக்குவுக்கும் பயம். டிடெக்டிவ்னு சொல்லிட்டு பயந்து ஓடினால், பப்பிஷேம் ஆயிடுமேனு நினைச்சது. தைரியத்தை வர வெச்சுக் கிட்டு, மெதுவா வாசலை நெருங்கி, கதவை ஓங்கி உதைச்சது. அது 'படார்’னு திறந்துருச்சு.'' என்றார் குஷ்பு.

''உள்ளே யார் இருந்தாங்க?'' என்று கேட்டாள் ஷோபிகா.

''உள்ளே சில முயல்கள் இருந்தன. ஒரு முயல் கையில் துப்பாக்கி. தலையில் தொப்பியோடு ஒரு மான். அதோடு கேமரா, லைட்னு ஏகப்பட்ட விஷயங்கள். சொக்குவுக்கும் தவளைக்கும் எதுவும் புரியலை. இங்கே என்ன நடக்குது?’ என்று சொக்கு கேட்டுச்சு. தொப்பி போட்ட மான் முன்னால் வந்து, 'யாருடா நீ? தொந்தரவு எதுவும் இருக்கக் கூடாதுன்னு அவுட்டர் ஏரியாவில் வீட்டைப் பிடிச்சு, டி.வி. சீரியல் ஷூட்டிங் நடத்திட்டு இருக்கேன். இங்கேயும் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு’னு மான் கத்தியது. அதுதான் டைரக்டராம். 'ஆகா, சீரியல் ஷூட்டிங்கா? நான் ஏதோ சீரியஸான கன் ஷூட்டிங்னு நினைச்சுட்டேன்... மன்னிச்சுடுங்க’ என்ற சொக்கு ஓட்டம் பிடிச்சது'' என்று முடித்தார் குஷ்பு ஆன்ட்டி.

''கலக்கிட்டீங்க ஆன்ட்டி. இந்தக் கதையை  என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் சொல்வேன். தேங்க்ஸ்!'' என்றான் நிதர்ஷன்.

''வெறும் தேங்க்ஸ் சொன்னால் போதாது. மறுபடியும் யாராவது டான்ஸ் ஆடணும்'' என்றார் குஷ்பு ஆன்ட்டி சிரித்துக் கொண்டே.

''ஓ... யெஸ்'' -என அத்தனை சுட்டிகளும் ஆட ஆரம்பித்தனர் உற்சாகமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism