Published:Updated:

அன்று வெள்ளைவேட்டி விவசாயி, இன்று அழுக்குச்சட்டை மனிதர் - வண்டலூர் புண்ணியகோடியின் கதை!

அன்று வெள்ளைவேட்டி விவசாயி, இன்று அழுக்குச்சட்டை மனிதர் - வண்டலூர் புண்ணியகோடியின் கதை!
அன்று வெள்ளைவேட்டி விவசாயி, இன்று அழுக்குச்சட்டை மனிதர் - வண்டலூர் புண்ணியகோடியின் கதை!

"15 வருஷம் ஆகுது விவசாயம் செஞ்சு. திரும்பவும் விவசாயம் பண்ணணும்னு ஆசையிருக்கு. எனக்கும் 60 வயசு ஆகிடுச்சு. இனி வேலைசெய்ய உடம்பும் ஒத்துழைக்காது. ஆளும் கிடைக்காது. பைசா இருந்து சாப்பாடு கிடைக்காதப்பதான் விவசாயத்தோட அருமை தெரியும். விவசாயத்தைப் பற்றி பேப்பர்ல வர்ற செய்தியையெல்லாம் படிப்பேன்."

மனிதம் நிரம்பிக்கிடக்கும் இதே உலகில்தான், பல மனிதர்கள் தனிமையின் துயரைச் சுமந்தபடி அலைகிறார்கள். முதுமையில் தனிமையின் பாரம் தாளாமல் பலரும் இந்த மண்ணில் வாழ்கிறார்கள். அழுக்குகள் படிந்திருக்கும் நரைத்த முடி, தோளில் துணிகள் நிரம்பிய மூட்டை, கையில் நீண்ட தடி என அலையும் தேசாந்திரிகளின் வாழ்வு, கொடிதிலும் கொடிது. அவர்களிடமிருந்து வரும் மெல்லிய பதற்றமான குரல் சொல்லும் கதைகள், கேட்பவர்களை அதிரச்செய்யும். அப்படி அதிரச்செய்த கதைதான் புண்ணியகோடியதும்.

யார் இந்தப் புண்ணியகோடி? வண்டலூர், மனிதர்கள் அதிகம் வந்து செல்கிற போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடம். ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் பாலத்துக்கு அடியில் கட்டிலில் அழுக்குச் சட்டை அணிந்தபடி செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார்.

அன்று வெள்ளைவேட்டி விவசாயி, இன்று அழுக்குச்சட்டை மனிதர் - வண்டலூர் புண்ணியகோடியின் கதை!

``நான் ஒரு விவசாயி. எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். 15 வயசுல சின்ன பையனா இருக்கும்போதே அப்பாகூட சேர்ந்து விவசாயம் செய்யத் தொடங்கினேன். வண்டலூர்ல அஞ்சு ஏக்கர் நிலத்துல சம்பா, ஐ ஆர் 8 பயிரெல்லாம் விளைச்சல் பண்ணிட்டிருந்தேன். இப்பவும் நிலம் இருக்கு. ஆனா, தரிசு நிலமா கிடக்குது. விவசாயம் சரியா செய்ய முடியாத நிலை. மருந்து, கூலியிலயிருந்து ஆள் கூலி வரைக்கும் எல்லாம் ஏறிப்போச்சு. அன்னைக்கு நடவு கூலி 35 ரூபாய். இன்னைக்கு 200 ரூபாய்க்கு மேல. கொடுக்கிற அளவுக்கு நமக்கு லாபம் கிடைக்கணும். அது எங்க கிடைக்குது? கட்டுப்படியாகாது.

வேற வேலை செய்றவங்களால காச சேத்து வைக்க முடியும். விவசாயத்துல மட்டும்தான் லாபத்தையும் சேர்த்து ரொட்டேஷன்ல போட்டுட்டே இருக்கணும். இல்லைன்னா விவசாயம் செய்ய முடியாது. எந்தவித கலப்படமும் இல்லாம விவசாயம் செய்வேன். என் நிலத்துப் பயிரைத்தான் விதை கட்டுறதுக்கெல்லாம் வாங்கிட்டுப் போவாங்க. ஒரு போகத்துக்கு அப்பவே 25,000 ரூபாய் போடுவேன். வேளாண்துறையிலயிருந்து விருதுலாம்கூட வாங்கியிருக்கேன். என் நிலத்துக்குத் தேவையான எல்லாத்தையும் நானே தயாரிப்பேன். விவசாயத்துல சின்னச் சின்ன விஷயம் நிறைய இருக்கு. எல்லாத்தையும் கவனிக்கணும். நிறைய பாடுபட்டாதான் கலப்படமில்லாம நல்ல விவசாயம் பண்ண முடியும். கூலிக்கு ஒரு மரக்கா, ரெண்டு மரக்கா குடுப்பாங்க. நான் அஞ்சு மரக்கா போடுவேன்.

அன்று வெள்ளைவேட்டி விவசாயி, இன்று அழுக்குச்சட்டை மனிதர் - வண்டலூர் புண்ணியகோடியின் கதை!

வேலை செய்ய ஆள் இல்லாம விவசாயத்தை நிப்பாட்டிட்டேன். 15 வருஷம் ஆகுது விவசாயம் செஞ்சு. திரும்பவும் விவசாயம் பண்ணணும்னு ஆசையிருக்கு. எனக்கும் 60 வயசு ஆகிடுச்சு. இனி வேலைசெய்ய உடம்பும் ஒத்துழைக்காது. ஆளும் கிடைக்காது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுதான்போகும். பைசா இருந்து சாப்பாடு கிடைக்காதப்பதான் விவசாயத்தோட அருமை தெரியும். விவசாயத்தைப் பற்றி பேப்பர்ல வர்ற செய்தியையெல்லாம் படிப்பேன்.

விவசாயம் மட்டுமல்ல அரசியலும் பிடிக்கும். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் எல்லாரும் ஒண்ணா இருக்கும்போதே நான் எம்.ஜி.ஆருக்கு சப்போர்ட் பண்ணேன். கல்யாணம் பண்ணிக்கல. ஒரு பையனைத் தத்தெடுத்துப் படிக்க வச்சேன்" என்றவரிடம், நிறைய தொலைபேசி எண்கள் இருந்தன. அவர் `பையன்' என்று சொன்னவரின் தொலைபேசி எண்ணை வாங்கிப் பேசினோம். அவர் புண்ணியகோடியை யார் எனத் தெரியாது என்றார்.  

``வண்டலூர்ல இருந்த பணக்காரக் குடும்பங்கள்ல எங்க குடும்பமும் ஒண்ணு. எங்க அப்பா நல்லா சம்பாதிச்சு சொத்து சேர்த்தாரு. எங்க வீட்டுல மொத்தம் 8 பேரு. யாருக்கும் ஒற்றுமை கிடையாது. அப்பா செத்ததும் மொத்த சொத்தையும் எடுத்துக்கிட்டாங்க. யாரையும் நம்பக் கூடாது. உழைச்சமா, சாப்பிட்டமா, நாம உண்டு... நம்ம வேலை உண்டுனு இருக்கணும். இல்லைன்னா என் நிலைமைதான் வரும். இனி என்ன சொல்லி என்னைத் திருத்த முடியும்? எல்லாம் முடிஞ்சுப்போச்சு. என் விதி இப்படியாயிடுச்சு. பார்த்துப் பக்குவமா இருங்க. காலம் கெட்டுப்போச்சு தம்பி" என்றார் வெறுமையான சிரிப்புடன்.

அன்று வெள்ளைவேட்டி விவசாயி, இன்று அழுக்குச்சட்டை மனிதர் - வண்டலூர் புண்ணியகோடியின் கதை!

புண்ணியகோடியைப் பற்றி ஊர்க்காரர்களிடம் கேட்டபோது, ``ஒரு காலத்துல செமயா வாழ்ந்தவரு. இப்போ இப்படி ஆயிட்டாரு. வெள்ளை வேட்டி - சட்டை போட்டுட்டு நடந்து போவாரு. இப்போ பார்க்கவே பரிதாபமா இருக்கு. நம்மளால என்ன பண்ண முடியும்?” என்றனர்.

காலத்தின் சூறாவளிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களில் புண்ணியகோடியும் ஒருவர். காலத்தால் தோற்கடிக்கப்பட்ட, மனிதர்களால் கைவிடப்பட்ட புண்ணியகோடி ஒருவர் அல்ல... அவர் ஒரு சாட்சி அவ்வளவுதான். இந்தியாவின் எல்லா மூலைமுடுக்குகளிலும் அழுக்குத் தோற்றத்துடன் திரியும் ஒவ்வொருவரும் ஒரு புண்ணியகோடிதான்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு