'மலை'க்க வைத்த மேலகிரி !


சி.தாமரை
ஸ்ரீ விநாயகா
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பென்னாகரம்.

##~##

ஷாப்பிங் போவதையே பெரிய ட்ரிப் போல் என்ஜாய் பண்ணும் சுட்டிகள், நண்பர் களுடன் ட்ரெக்கிங் சென்றால் சும்மா இருப்பார்களா?

ஒகேனக்கல் அருகே இருக்கும் ஆலம்பாடி மலைக்குச் செல்ல,  சுட்டிகள், தங்கள் படை பரிவாரங்களுடன் வந்தார்கள். இந்தப் படைக்கு கேப்டன் பொறுப்பை சந்தோஷத்துடன் ஏற்றார் பாலமுருகன்.

இவர், தருமபுரியில் இருக்கும் அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர். ஏற்காடு, ஏலகிரி மற்றும் இமயமலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்தவர்.

பென்னாகரத்தைச் சேர்ந்த பெரியவர் முனுசாமி, ஆலம்பாடி மலைக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டவர். அவரும் சுட்டிகளுடன் சந்தோஷமாகக் கிளம்பினார். மலை அடிவாரம் வரை நமது சுட்டிப் பட்டாளம் வேனில் சென்றது. வண்டியில் இருந்து இறங்கும் முன்பாகவே, 'ட்ரெக்கிங் கெட்-அப்’புக்கு மாறினார்கள்.

'மலை'க்க வைத்த மேலகிரி !

பாலமுருகன், சுட்டிகளை ஓர் இடத்தில் குழுமச் செய்தார். ''நான் சொல்றதைக் கவனமாக் கேளுங்க. ஷூ லேஸை நல்லாக் கட்டிக்கங்க. அப்போதான் நடக்கிறப்போ காலுக்குப் பிடிமானம் இருக்கும். குறிப்பிட்ட இடைவெளிவிட்டுதான் ஒருத்தரை ஒருத்தர் பின் தொடரணும். யாரும் யாருடைய தோளையோ, முதுகில் இருக்கிற பைகளையோ பிடிக்க முயற்சி பண்ணாதீங்க. சரளைக் கற்கள் இருக்கிற இடங்களில் எச்சரிக்கையா காலை வெச்சு நடக்கணும். ஒருவேளை ஸிலிப் ஆகி விழுகிற மாதிரி இருந்தால், இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி பேலன்ஸ் பண்ணுங்க. நாக்கு வறண்டு களைப்பு ஏற்பட்டால், குளூக்கோஸ் பவுடரை கொஞ்சமா வாயில் போட்டுக்கங்க. ரொம்பவும் களைப்புத் தட்டினால், சம தளமாக இருக்கும் இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுத்துட்டு நடக்கணும்...'' என்று டிப்ஸ்களை வழங்கினார்.

சரியாக 10.15 மணிக்கு 'ரெடி ஸ்டார்ட்’ சொல்லி விசில் அடிக்க, ஆரம்பமானது மலையேற்றம். ''இந்த மலையை மேலகிரி என்றும் சொல்வார்கள். இது, 1,295 சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இருக்கு'' என்று சொன்னவாறு முன்னால் நடந்தார் பாலமுருகன்.

சில அடிகள் தூரம் நடந்ததுமே... காட்டுப் பாதையை ஒட்டி சில தடிகள் கிடந்தன. ''மேலே சென்று வர மக்கள் இவற்றைப் பயன்படுத்துவாங்க. கீழே வந்ததும் இங்கே வைத்துவிடுவார்கள். தேவைப்படுறவங்க எடுத்துக்கலாம்'' என்றார் முனுசாமி.

'மலை'க்க வைத்த மேலகிரி !

''பேராண்மை படத்தில் வர்ற சீன் மாதிரி இருக்கே'' என தனது ஞாபக சக்தியை வெளிப்படுத்தினாள் தமிழ்ப்பாவை. ஆளாளுக்கு தடிகளை எடுத்துக்கொண்டனர். தடிகள் கிடைக்காத சஞ்ஜித்தும் துரையும், ''நாங்க எல்லாம் எட்டே எட்டுல இமயமலைக்குப் போறவங்க.  எங்களுக்கு தடி எதுக்கு?'' என்று வேகம் எடுத்தனர்.

'மலை'க்க வைத்த மேலகிரி !

குட்டிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, முன்னேற முடியாமல் புகைப்படக் காரரும் மற்றவர் களும் திணறியபோது, ''அங்கிள் இங்கே என்ன ஸ்லோ ரேஸ் நடக்குதுனு நினைச்சீங்களா? சுறுசுறுப்பா நடங்க'' என்று காயத்ரியும் சத்யாவும் செல்ல அதட்டல் போட்டனர்.  

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, சுட்டிகளிடம் வேகம் குறைந்தது. மேல் மூச்சு, கீழ்மூச்சுடன் 'ஐலேசா’ போட்டபடி எட்டுப் போட்டனர். இதைக் கவனித்த பாலமுருகன், இடையில் ஒரு சமதளத்தில் அனைவரையும் நிறுத்தி, குளூக்கோஸ் சாப்பிடவும், ஓய்வெடுக்கவும் அவகாசம் தந்தார். மேலும், ''மலையேறும்போது 'அய்யோ இவ்வளவு பெரிய மலையா?’னு  மலைப்போடு பார்த்தா சோர்ந்திடுவோம். முனைப்போடு நடை போட்டா, இமயமும் நம்ம காலடிக்கு வந்துடும்''என உற்சாகப்படுத்தினார். அவ்வளவுதான்... சிட்டாகவும், ஜெட்டாகவும் சிகரத்தை நோக்கி சுட்டிகள் விரைந்தனர்.

வழி முழுவதும் வனத்தில் இருந்த மரங்களின் பெயர்கள், அதன் பயன்பாடுகள் குறித்த தகவல்களைக் கேட்டு, குறிப்புகள் எடுத்தபடியே மலை உச்சியை எட்டினார்கள். முகட்டில் இருந்து கீழே பார்த்தால்... ஆயிரக்கணக்கான அனகோண்டா பாம்புகள் போல் நெளிந்து நெளிந்து ஓடியது காவிரி ஆறு. ஹரிநமோவும், ஸ்ரீராமும் ''இவ்வளவு அழகாக ஓடும் ஆறு, கொஞ்ச தூரம் போனதும் முரட்டு அருவியா மாறிடுதே'' என்றனர் கவலையாக.

''தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போதுதான் அப்படி. மற்ற நாட்களில் ஜாலியாக் குளிக்கலாம்'' என்றார் பாலமுருகன்.

எல்லோரும் மர நிழலில் அமர்ந்து, காவிரியைப் பருந்துப் பார்வையில் ரசித்தனர். எடுத்து வந்த  தீனிகளை நொறுக்கித் தள்ளினார்கள். இவர்கள் ஓய்வெடுத்த ஏரியாவுக்கு அருகிலேயே இருந்தது மலைப்பெருமாள் கோவில். கையோடு பூஜைப் பொருட்களை எடுத்து வந்திருந்த முனுசாமி, பூஜைக்கு ஏற்பாடு செய்து, சுட்டிகளையும் அழைத்தார்.

பாட்டுப் போட்டி, அரட்டைக் கச்சேரி என சுட்டிகள் அதகளப்படுத்தினார்கள். சற்று நேரத்தில், பாலமுருகனின் விசில் சத்தம் நிமிர வைத்தது.

'மலை'க்க வைத்த மேலகிரி !

அனைவரையும் கீழே இறங்கச் சொன்னார். அடிவாரத்துக்குப் பத்திரமாக வந்துசேர்ந்தனர். ''மலையேற்றம் உங்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தது?'' என்று கேட்ட பாலமுருகனிடம், ''சுத்தமான காற்று, பறவைகளின் இனிமையான குரல்கள், வளைந்து, நெளிந்து செல்லும் ஆற்றின் அழகிய காட்சிகளை அனுபவிக்க மலை ஏறினால்தான் முடியும். இன்னொரு முக்கியமான விஷயம், நம் இலக்கை அடையத் தேவை விடாமுயற்சி மட்டும்தான் என்பதையும் தெரிஞ்சுக்கிட்டோம்'' என்றனர் உற்சாகத் துள்ளலோடு!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு